Wednesday, August 10, 2016

நான்கு சுவையான கதைகள்:



ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் மிகவும் பிரபலமானவை; எல்லோரும் கேட்டிருப்பார்கள் ஆகவே சுருக்கமாகப் பார்த்துவிட்டுத் தமிழ் அடியார்களின் பாடல்களைக் காண்போம்.
கதை 1:– ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டது. அது மட்டும் அல்ல. அதை எல்லோருக்கும் சொல்லவேண்டும் என்றும் திட்டம் தீட்டியது. உடனே கடல் நீரில் குதித்தது. அதற்கு மிகவும் சந்தோஷம். வாழ்நாள் முழுதும் எதை எண்ணியதோ அது நடந்துவிட்டது! ஆனால் சில அடி ஆழம் போவதற்குள் உப்பு எல்லாம் கரைந்து கடலுடன் ஐக்கியமாகிவிட்டது. அதே போலத்தான் பிரம்மன் பற்றிய அறிவும். கடவுளுக்கு நெருக்கமானவர்கள் சமாதியில் செல்லும் போது பிரம்மம் பற்றி ஞானம் வருகிறது. அதில் மூழ்கியவர்கள் வெளியே வருவதில்லை. பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுகிறார்கள்.
கதை 2:
புதிதாக கல்யாணம் ஆன ஒரு பையன் மாமனார் வீட்டுக்கு நண்பர்களுடன் போனான். ஹாலில் (கூடத்தில்) உட்கார்ந்தான். அவனுடைய மனைவியின் தோழிகள் புது மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடிவிட்டனர். கட்டுக்கடங்காத ஆர்வம்! எல்லோரும் ஜன்னல் வழியாகப் பார்த்து, ஒவ்வொரு பையனையாக காட்டி ‘இவன்தான் உன் புருஷனா?’ என்று கேட்கின்றனர். ஒவ்வொரு பையனைக் காட்டி தோழிகள் கேள்வி கேட்கும் போதெல்லாம், புன்னகை செய்தவாறே ‘அவன் இல்லை’, ‘அவன் இல்லை’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளுடைய உண்மையான கணவனைக் காட்டி இவன் தானா உன் புருஷன்? என்ற போது அவள் முகம் மலர்ந்தது. ஆனால் ‘இல்லை’ என்ற பதிலோ ‘ஆமாம்’ என்ற பதிலோ வரவேயில்லை. தோழிகளுக்குப் புரிந்துவிட்டது. பிரம்மமனைக் கண்டவர் நிலையும் இதே. அவர்கள் பேரானந்தத்தில் மூழ்கி மவுனம் ஆகிவிடுவர்.
கதை 3:- ஒரு மனிதனுக்கு இரண்டு பையன்கள் இருந்தனர். இரண்டு மகன்களையும் குருகுலத்தில் சேர்த்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் வீடு திரும்பினர். மூத்தவனைப் பார்த்து பிரம்மத்தின் இயல்புகள் என்ன? என்று கேள்வி கேட்டார். உடனே அவன் பல செய்யுள்களை ஒப்புவித்து, தனது மேதா விலாசத்தைக் காட்டினான். நீ பிரம்மத்தை அறியவே இல்லை என்று தந்தை சொல்லிவிட்டார். இரண்டாவது மகனை அதே கேள்வி கேட்டார். அவன் கீழ் நோக்கிய பார்வையுடன் மவுன நிலைக்குப் போய்விட்டான். தந்தைக்குப் புரிந்துவிட்டது; அவனுக்கு பிரம்ம ஞானம் எற்பட்டு விட்டது என்று.
கதை 4: நான்கு நண்பர்கள் ஒரு பெரிய சுவரால் சூழப்பட்ட ஒரு உயரமான கட்டிடத்தைப் பார்த்தனர். உள்ளே என்ன இருக்கிறது என்பதை அறிய நால்வருக்கும் ஒரே ஆசை. முதல் ஆள் உயர ஏறிப் போய் எட்டிப் பார்த்தான். ஆ! ஆ! ஆ! என்று குரல் மட்டுமே வந்தது. உள்ளே குதித்து விட்டான். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது ஆள் ஒவ்வொருவனாகப் போனார்கள். அவர்களுக்கும் இதே கதிதான். பிரம்மத்தை அறிந்தவர்கள் வெளியே வரவும் மாட்டார்கள், பிரம்மத்தினது குண இயல்புகளை வருணிக்கவும் மாட்டார்கள். வருணிக்கவும் முடியாது. ஆனந்தக் கடலில் நீந்தத் துவங்கிவிடுவார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...