அன்று அவளுக்கு அலுவலகம் முடிய கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நடுராத்திரியில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாள். மனது ஒரு வித பயத்துடனே இருந்தது. அப்போது சாலை ஓரத்தில் ஒரு ஆட்டோ நிற்பதை கண்டு அந்த ஆட்டோவை நோக்கி நடக்க தயாரானாள். அப்போது பின்னால் இருந்து ஒரு சத்தம். இதயம் ஒரு நொடி நிற்க...திரும்பி பார்த்தால் அவளுடைய மேனேஜர், "ஹேய் என்ன இங்க நிற்கிற, பயப்படாதே நான் உன்னை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் நீ என்னுடன் பணி புரியும் பெண், நீ என் பொறுப்பு" என்று சொல்லி அந்த ஆட்டோவில் அனுப்பி வைத்தார். ஆட்டோ நகர்ந்தது.
ஆட்டோ கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ்ந்த சாலையில் பயணமானது. ஆட்டோக்காரர் கேட்டார் "ஏம்மா இவ்வளவு நேரமா வேலை செய்வீங்க?" என்று. ஒரு பதட்டத்தோடு ஆம் என்று சொல்ல இதயத்துடிப்பு அதிகமானது. தான் போக வேண்டிய இடம் நெருங்கியதும் ஆட்டோவை நிறுத்த சொன்னாள். ஆட்டோக்காரர் உடனே "கொஞ்சம் இரும்மா பயப்படாதே அந்த தெரு முனையில் விடுறேன். என் ஆட்டோவில் வருகின்றாய். நீ என் பொறுப்பு" என்று சொல்லி தெரு முனையில் இறக்கிவிட்டார்.
இரண்டு அடி கூட நடக்கவில்லை. அதற்குள் ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வாயில் சிகரெட்டுடன் காட்சியளித்தார். இந்த முறை கிட்டத்தட்ட இதயம் முழுதாக நின்றுவிடும் போல் ஆக... அவர் சட்டென சிகரெட்டை தூக்கி போட்டுவிட்டு இங்க வாம்மா நீ இவரோட பொண்ணு தானே? வா நான் உன்னை பாதுகாப்பாக கொண்டு போய் வீட்டில் விடுறேன் என்றார்.
கடைசிவரை அந்த பெண்ணுக்கு ஏதும் ஆகலை. ஆனால் இதை படிக்கும் போது ஒவ்வொரு முறையும் நம் இதயம் படபடத்தது இல்லையா...? இது தான் நம் நாட்டில் பெண்களின் பாதுகாப்பின் நிலை என்பதை மறுக்க முடியாது தானே...?
நம் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்பும் நம் பொறுப்பு என ஒவ்வொரு மனிதரும் நினைக்க வேண்டும். சாலையில் தனிமையில் நடக்கும் ஒரு பெண் யாரோ ஒருவரின் மகளாக, அக்காவாக, தங்கையாக, அம்மாவாக, மனைவியாக, காதலியாக தானே வாழ்ந்து கொண்டு இருக்க முடியும். யோசிப்போம் நண்பர்களே.
No comments:
Post a Comment