Tuesday, August 9, 2016

வரம் தரும் வரலட்சுமி விரதம்!

விரத மகிமையுடன் பெருமையுடன் துவங்குவோம் !!
சாருமதி தன் கணவன், மாமனார், மாமியார் ஆகியோருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்வதையே தம் நோக்கமாகக் கொண்டவள். வறுமையிலும் பெருமையாக வாழ்வை நடத்தியவள் சாருமதி. அதனால் அவளிடம் வறுமையே வறுமை அடைந்தது என்று கூற வேண்டும்! எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் இறைவனை வணங்கி வந்தாள் சாருமதி. அவளது பண்பாட்டை எண்ணி மகிழ்ந்த மகாலட்சுமி தாயார், சாருமதி சகல செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட அருள்புரிந்தார்.
சாருமதியின் கனவில் தோன்றிய அன்னை மகாலட்சுமி, ""சாருமதி! உன் சிறப்பான பக்தி என் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. ஆவணி மாதம் பூர்வபட்ச பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளியன்று, என்னை பூஜித்து வழிபாடு செய்வாய். அதனால் சகல செல்வங்களும் பெறுவாய்'' என்று வாழ்த்தினார்.
அலைமகளாம் திருமகள் கூறிய விரதமே ஸ்ரீ மகாலட்சுமி விரதமாக மலர்ந்தது. அலைமகள், கனவில் கூறியவாறு வரலட்சுமி விரதத்தை மேற்கொண்டாள் சாருமதி. வரலட்சுமி விரதம் இருந்ததின் பயனாக, பதினாறு செல்வங்களையும் பெற்று மகிழ்ந்த சாருமதி, அந்த விரதத்தை பிற பெண்களும் செய்திட வழிகாட்டினாள்.
கைலாய மலையில் ஒருநாள், சிவபெருமானும் உமா தேவியும் சொக்கட்டான் விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். ""சொக்கான் விளையாட்டில் நான்தான் வெற்றி பெற்றேன்!'' என்றார் சிவபெருமான். ஆனால் உமா தேவியோ, ""இல்லை.. இல்லை.. நானே வென்றவள்'' என்றார்.
சிவனும் உமையும் ஆடிய சொக்கட்டான் விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்த சித்ரநேமி என்ற கந்தர்வனிடம் ""வெற்றி பெற்றவர் யார் என்பதை நீயே கூறவேண்டும்'' என்று பணித்தார் சிவபெருமான். சித்ரநேமி ""சிவபெருமானே வெற்றி பெற்றவர்'' என்று கூறினான். சித்ரநேமி பொய்யாக தீர்ப்புக் கூறியதாக எண்ணி, ""சித்ரநேமி கொடுமையான பெருநோய் பெறட்டும்'' என்று சாபமிட்டார் உமா தேவி.
தன்னை மன்னித்து தனது பெருநோய் நீங்கிடச் சாப விமோசனம் அருளுமாறு வேண்டினான் சித்ரநேமி. சிவபெருமானும் உமாதேவியிடம் சித்ர நேமிக்காக அருள்புரியுமாறு கேட்டுக்கொண்டார்.
உமாதேவியும் சிவனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். அன்பான நல்லொழுக்கமுள்ள மாதரசிகள் வரலட்சுமி பூஜை செய்வதைப் பார்க்கும்போது உன் பெருநோய் நீங்கிடும்!'' என்று அருள்புரிந்தார் உமாதேவி. உமாதேவியின் அருள்படி, வரலட்சுமி விரதம் அனுசரிக்கும் பெண்களைக் கண்டு தம் தொழுநோய் நீங்கப்பெற்றான் சித்ரநேமி.
நோய் நொடிகள் நீங்கி, நீண்ட ஆயுள் பெறவும் அனைத்துச் செல்வங்களும் பெற்றுக் குடும்பம் செழிக்கவும் திருமணத்தடை நீங்கி திருமணம் நிகழவும் பிள்ளைச் செல்வம் பெறவும் பெண்களால் பெண்கள் நலனுக்காக மலர்ந்ததே வரலட்சுமி விரதமாகும்.
சூதமா முனிவர், பிற முனிவர்களுக்கு பவிஷ்யோத்ர புராணத்தைக் கூறி உபதேசித்தார். இந்தப் புராணத்தில் வரலட்சுமி விரதத்தின் மகோன்னத மாண்புகள் கூறப்பெற்றுள்ளன. அஷ்டலட்சுமிகளையும் மனதில் எண்ணி, அவர்களின் பிரவேசம் குடும்பத்தில் நிகழ்ந்திட பெண்கள் நோற்கும் அற்புதமான விரதம் என்றும் இதைக் கூறலாம்.
அழகன் முருகன் அவதாரம் எடுத்திட இந்த வரலட்சுமி விரதத்தைத் தானே மேற்கொண்டு முதன் முதலாகத் தொடங்கி வைத்த பெருமைக்குரியவர் பார்வதி தேவி.
சிரவண மாதம், பூர்வபட்சத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.
அதாவது, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமையில் இந்த வரலட்சுமி நோன்பை நோற்க வேண்டும். காலமாற்றத்தால் ஆடிமாதத்திலும் ஸ்ரீ வரலட்சுமி விரதம் நிகழ்வதும் உண்டு.
இவ்வாண்டு, 12.8.2016 வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...