Sunday, August 21, 2016

கற்பக மரம்

வாழ்வில் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்த ஒருவன் நடைப்பயணமாக ஒரு காட்டின் வழியே சென்று கொண்டிருந்தான். அவன் நீண்ட தூரம் நடந்ததால், அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் சிறிது நேரம் படுத்து ஒய்வெடுக்க எண்ணி, அந்த மரத்தின் அடியில் ஓய்வெடுத்தான்.
அந்த மரம் கற்பக மரம். தான் நினைப்பதையெல்லாம் தரும் கற்பக மரத்தின் அடியில் படுத்திருக்கிறோம் என்பது அவனுக்குத் தெரியாது. சிறிது நேரத்தில் அவனுக்கு மிகவும் பசியெடுக்க ஆரம்பித்தது. மிகவும் பசியாக இருக்கிறதே ஏதாவது உணவு கிடைத்தால் நன்றாக இருக்குமே! என்று நினைத்தான். உடனே ஒரு தட்டு நிறைய உணவு வந்தது. ஆச்சரியமடைந்த அவன் அதைச் சாப்பிடத் தொடங்கினான்.
உணவு சாப்பிட்டதும், அவனுக்கு உறக்கம் வந்தது. ஒரு தலையணை இருந்தால் நன்றாக இருக்குமே! என்று நினைத்தான். நினைத்தவுடனே தலையணையும் வந்தது. அதை தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டான். நடந்து வந்ததால் கால்கள் மிகவும் வலியாக உள்ளதே, கால்களை இரண்டு பேர் அமுக்கிவிட்டால் சுகமாக இருக்குமே! என்று எண்ணினான். உடனே இரண்டு வான் தேவதைகள் அவனருகில் அமர்ந்து, அவனது கால்களை அமுக்கி விடத் தொடங்கினார்கள்.
அவன் மிகவும் சந்தோஷப்பட்டான். ஆனாலும் இதெல்லாம் எப்படி நடக்கிறது என்பது புரியாமல், மேலும் கீழுமாய்ப் பார்த்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் படுத்து ஓய்வெடுக்க ஆரம்பித்தான்.
சிறிது நேரத்திலேயே உறக்கத்தில் இருந்து எழுந்த அவன் மனதில் ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஆஹh! நாம் ஒரு காட்டில் அல்லவா ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறோம். புலி ஏதேனும் வந்து நம்மை விழுங்கிவிட்டால் என்ன செய்வது? என நினைத்தான். புலி ஒன்று வந்து அவனை அடித்து விழுங்கியது.
மனதில் தூய்மையான எண்ணங்களைக் கொண்டிருந்தால் நல்லதே நடக்கும். எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் தீமை தான் விளையும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...