Wednesday, August 17, 2016

ஏன் அப்படிச் சொன்னார் சுஜாதா..?

யாரும் எதிர்பாராத ஒரு காரியத்தைச் செய்தார் சுஜாதா..!
அது ஒரு விழா மேடை ... பெரும் கூட்டம் ...!
பேசிக் கொண்டே இருந்த சுஜாதா...
பேச்சின் நடுவே திடீர் என்று இப்படிச் சொன்னார் :
“இப்போது இங்கே நான் ஒரு இளைஞர் எழுதிய கவிதையை வாசிக்கப் போகிறேன்...
கவிதையின் தலைப்பு .. “தூர்.."
இப்படிச் சொல்லி விட்டு , கவிதையை வாசிக்க ஆரம்பித்தார் சுஜாதா :
“வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய் நடக்கும்..”
சுஜாதா வாசிக்க வாசிக்க , கூடி இருந்த கூட்டம் அசையாமல் அமர்ந்து , அமைதியோடு கவிதை வரிகளை ரசித்துக் கொண்டிருந்தது...!
சுஜாதா கடைசி வரிகளை வாசித்தார் :
“இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க!”
.... சுஜாதா வாசித்து முடிக்கவும் பலத்த கை தட்டல் ...!
அந்தக் கை தட்டல்களுக்கு இடையே சுஜாதா சொன்னார் இப்படி :
“இந்த அற்புதமான கவிதையை எழுதியவர் பெயர் நா.முத்துகுமார்..”
மீண்டும் கை தட்டல்...
கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞரைச் சுற்றி சிறு சலசலப்பு ஏற்பட....
சுஜாதா கேட்டார் : “ அந்த முத்துகுமார் இந்தக் கூட்டத்தில் இருக்கிறாரா.. என்ன ?”
ஆம்... !
நா.முத்துகுமார் அந்தக் கூட்டத்தில் இருந்தார்.
கூட்டத்திலிருந்து முத்துகுமார் கைதூக்க ... உடனே அவரை மேடைக்கு வரவழைத்து , எல்லோருக்கும் அவரை அறிமுகப்படுத்தி , ஏராளமாகப் பாராட்டியிருக்கிறார் சுஜாதா.
# அதுபற்றி நா.முத்துகுமார் :
“என் தூர் கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க , என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது.
நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள்.
விளையாட்டாக எழுதத் தொடங்கி , அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் என்கிற நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்.”
# அன்று நா.முத்துகுமார் மேல் விழுந்த அந்த மஞ்சள் வெளிச்சம் , மஞ்சள் காமாலையாக மாறி அவரது உயிரைக் குடிக்கும் என யார் கண்டார்கள்...?
# ஆனால் , முத்துகுமார் பற்றி சொல்லும்போது , இந்த வார்த்தைகளை எதற்காக சுஜாதா சொன்னார் என்று எத்தனையோ முறை யோசித்தும் புரியவே இல்லை எனக்கு ..!
சுஜாதா சொன்னது :
'' நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க
ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன் ''
.
# ஏன் அப்படிச் சொன்னார் சுஜாதா..?
எவ்வளவோ சிந்தித்தும்
புரியவில்லை
எனக்கு...!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...