Thursday, August 25, 2016

மக்களை அதிகாரப்படுத்துவது"

மக்களின் சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்கள், அரசாங்க அதிகாரிகளின் மூலமாகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்ற நிலையிலிருந்து, மக்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயித்துக் கொள்வார்கள் என்ற நிலைக்கு, வளர்ச்சிச் செயல்பாடுகளின் அணுகுமுறையை மாற்றியமைக்க வந்ததுதான் 73வது அரசியல் சாசனச் சட்டத் திருத்தமாகும். இந்த நிகழ்வு, உலகில் நடக்கும் மாற்றங்களைப் பின்னனியில் நிறுத்தி நடக்கின்ற ஒன்றாகும். இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள, பொருளாதாரம் உலகளாவிய நிலைக்குச் செல்லும்போது அதிகாரம் பரவலாக்கப்படுகிறது என்பதை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும். இந்தியாவில் இந்த அதிகாரப்பரவலுக்கு ஒரு தனி முக்கியத்துவமும் சிறப்பும் உள்ளது. ஏனென்றால் மற்ற நாடுகளில் இந்த அதிகாரப்பரவல் என்பது மக்களுக்குச் செய்யும் சேவைகளை அரசாங்க அமைப்புகள் துரிதமாகவும், செம்மையாகவும் தரம் வாய்ந்ததாகவும் செய்திட உதவும் வகையில் நடைபெறுகின்றன. இந்தியாவில் இந்த அதிகாரப் பரவல் என்பது இதுவரை சமுதாயத்தல் ஒதுக்கப்பட்ட, ஓரம் கட்டப்பட்ட சமூகக் குழுமங்கள், முடிவெடுக்கும் நிலையில் உள்ள அதிகார அமைப்புகளுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிவிட்டது. இந்த வாய்ப்புகள் ஒரு மிகப் பெரிய சமூக மாற்றத்தை உருவாக்க வல்லமை கொண்டவை என்பதால், இந்த சட்டத் திருத்தம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தச் சட்டத் திருத்தம் "மக்களை அதிகாரப்படுத்துவது" என்ற கொள்கை முழக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். மேற்குறிப்பிட்ட இலக்குகளை எல்லாம், புதிதாக உருவாக்கப்பட்ட பஞ்சாயத்துக்கள் மூலம் அடைந்தோம் என்பதுதான், நமக்கு முன் நிற்கும் கேள்வி; இந்தக் கட்டுரையில் குறிப்பாகத் தமிழகத்தில் நம் பஞ்சாயத்து அரசாங்கம் எப்படிச் செயல்படுகின்றது என்பதைப் பற்றித்தான் நாம் ஆராயவேண்டும்.
அதிகாரப் பரவல் சிறப்புடன் செயல்பட:-
எந்த ஒரு சமுதாய மாற்றத்திற்கும் சட்டம் என்பது இன்றியமையாததுதான். இருந்தபோதிலும் அந்தச் சட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை வைத்தும், அவற்றை மக்கள் எப்படி உபயோகப்படுத்துகிறார்கள் என்பதை வைத்தும் தான், எந்த அளவில் மாற்றத்தினை அந்தச் சட்டம் உருவாக்கியுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். 73 வது சட்டத்திருத்தம் என்பது, தன்னாட்சி பெற்ற உள்ளாட்சி அமைப்புக்களை உருவாக்க ஒரு கொள்கை வரையறை தான். இந்தக் கொள்கை வரையறையை மாநில அரசுகளும், மக்களும் எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பதில் தான், அதிகாரப் பரவல் எந்த அளவுக்கு நடைபெற்றுள்ளது மற்றும் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். 73வது சட்டத் திருத்தம் முழுமையான விளைவுகளை ஏற்படுத்த, மாநிலச்சட்டம், அரசியல் சாசனத் திருத்தச் சட்டத்தின் உட்கூறுகளையும், முக்கிய அம்சங்களையும், கோட்பாடுகளையும் உள்வாங்கி உருவாக்கப்படல் வேண்டும். மாநில அரசின் சட்டத்தின் மூலம் அதிகாரப்பரவல், அதாவது துறைகளின் அதிகாரங்கள், பொறுப்புகள் அவற்றை நிறைவேற்றத் தேவையான நிதி ஆதாரங்களும் அலுவலர்களும் ஒப்படைக்கப்படல் வேண்டும். இந்த செயல்பாடுகளை எல்லாம் நடத்துவதற்குத் தேவையான வழிகாட்டு நெறிகளை அரசு ஆணைகள் மூலம் வெளியிட வேண்டும். அதன் பிறகு உள்ளாட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்குத் தேவையான திறனையும், ஆற்றலையும் வளர்க்கவேண்டும். பயிற்சியின் மூலம், அதே போல் மக்களைப் பெருமளவில் வளர்ச்சிச் செயல்பாடுகளில் பங்கெடுக்கத் திரட்ட வேண்டும். அவர்களுக்கப் புதிய பஞ்சாயத்து அரசாங்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும். இதற்கு அரசு அதிகாரிகளின் மற்றும் அலுவலர்களின் மனோபாவம் மாறவில்லை என்றால் அதிகாரப் பரவலுக்கு இவர்கள் தடையாகி விடுவார்கள்.
தமிழகத்தில் அதிகாரப் பரவல்:-
73-வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டத்தையொட்டி மாநில அரசு தமிழ்நாடு உள்ளாட்சிச் சட்டத்தை 1994 -ம் ஆண்டில் உருவாக்கியது. இந்தச் சட்டம் 73-வது சட்டத்திருத்தத்தின் அமைப்பு முறைகளை உள்வாங்கிக் கொண்டது. ஆனால் அதன் முக்கியக் கோட்பாட்டுக் கூறுகளைத் தவிர்த்து விட்டது. 73-வது சட்டத் திருத்தம், உள்ளாட்சி என்பது சுயாட்சியாக அமைய வேண்டும் என அறிவுறுத்துகிறது. அதிகாரப்பரவல், சட்டத்தின் மூலம் நடைபெற வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால் தமிழக அரசுச் சட்டம், உள்ளாட்சியை ஆலோசனை கூறும் அமைப்பாகவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைப்பாகவும், அதிகாரிகளின் கீழ் இயங்கும் அமைப்பாகவும் உருவாக்கிவிட்டது.
அதிகாரப்பரவலுக்குப் பரிந்துரை செய்ய, எல்.சி. ஜெயின் தலைமையிலான குழு ஒன்று அமைத்து அதன் மூலம் தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இந்தியாவிலேயே இந்த எல்.சி. ஜெயின் அறிக்கை தான், மிகச் சிறந்த அறிக்கை என அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் அதனை நிறைவேற்ற அரசுக்கு மனமில்லை. ஏனென்றால் இந்த அறிக்கை உள்ளாட்சியை, "உள்சுய ஆட்சியாக" உருவாக்கப் பரிந்துரை செய்தது, இதையடுத்து அப்போதைய உள்ளாட்சி அமைச்சர். கோ.சி. மணி தலைமையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட குழு எல்.சி ஜெயின் குழுவின் பரிந்துரையை நீர்த்துப்போக வைத்தது, இருந்தும் அந்தப் பரிந்துரைகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
மூன்றடுக்குப் பஞ்சாயத்துக்கள் தமிழகத்துக்குத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டைத் திராவிட இயக்கக் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகமும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் எடுத்துள்ளன. ஆகையால்தான், மாவட்டப் பங்சாயத்தையும், மாவட்டத் திட்டக் குழுவையும் பெயரளவில் வைத்துச் செயல்பட முடியாமல் செய்துள்ளது நம் தமிழக அரசு, இந்த இரண்டு அமைப்புக்களுமே பஞ்சாயத்துக்களைத் தன்னாட்சி பெற்ற அரசாங்கமாக மாவட்ட அளவில் திட்டமிட்டு, வளர்ச்சிக்காக மக்கள் செயல்பட உருவாக்கப்பட்டவைகள், இவைகள் இரண்டும் முடக்கப்பட்டு விட்டன. அடுத்து எப்படி மையப்பட்டியல், மாநிலப்பட்டியல், பொதுப்பட்டியல் என்று மைய மாநில அரசுகளுக்கு அதிகார வரம்புகளை அரசியல் சாசனம் உருவாக்கியதோ அதே போல, பஞ்சாயத்துக்களுக்கு மாநில அரசு செய்து தரவேண்டும் என்று சட்டத் திருத்தத்தில் பணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில அரசு 29 துறைகளிலும், பஞ்சாயத்துக்கள், துறைச்செயல்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கலாம், பயனாளிகளைத் தேர்ந்தெடுக்க உதவிடலாம், துறைகள் செயல்படுத்தும் திட்டங்களைப் பார்வையிடலாம். ஆய்வு செய்யலாம் என அதிகாரம் வழங்கியுள்ளதே தவிர, முடிவுகள் எடுக்கும் எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை, இதன் விளைவாக இந்தத் துறைகள் பஞ்சாயத்துக்களுடன் எந்தத் தொடர்பும் இன்றித் தன்னிச்சையாக இயங்கி வருகின்றன. 1958- ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சிச் சட்டத்தில் இருந்த அதிகாரங்கள் கூட புதிய சட்டத்தின் மூலம் வழங்கப்படவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
அதிகாரங்கள் வழங்கியதும் கூட, சட்டத்தின் மூலம் வழங்காமல், அரசு ஆணைகள் மூலம் வழங்கி உள்ளாட்சியின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டது. சட்டத்தை நடைமுறைப்படுத்தப் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு அரசு ஆணைகளாக வெளியிடப்பட்டன. ஆனால் இவைகளெல்லாம் மக்கள் பிரதிநிதிகளுக்குப் போய்ச் சேரவில்லை. அதுமட்டுமல்ல, நிர்வாகத்திற்கான அக்கறை இல்லாமலேயே, ஏனோ தானோவென்று இன்று வரை நிர்வாகம் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், மேற்பார்வையிடுவதற்குமாகப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்குத் தேவையான பயிற்சியை, அவர்கள் பஞ்சாயத்தில் எப்படித் தலைவர்களாகச் செயல்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக, எப்படி அரசு அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற அளவில் முறைப்படுத்தப்படாத பயிற்சியைத் தந்து, ஆற்றல் பெருக்கத்திற்குப் பதிலாக, அச்சுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், கல்வி அமைப்புக்களும் ஒரு சில இடங்களில் நல்ல பயிற்சியினைத் தந்துள்ளனர். அதிகாரிகளின் மனோபாவம் எந்த அளவிலும் மாற்றப்படவில்லை. உள்ளாட்சித் தலைவர்களை முறைப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களை அச்சுறுத்தித் தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யப் பணியவைத்துள்ளனர். ஒட்டு மொத்தமாக உள்ளாட்சி என்பது, அதிகாரிகளின் கையில் இயங்கும் அமைப்பாக மாறிவிட்டது. உள்ளாட்சிக்காக எந்த அரசு அதிகாரிகளோ அல்லது அலுவலர்களோ உருவாக்கப்படவும் இல்லை, மாறுதல் செய்யப்படவும் இல்லை, முன் போலவே எல்லாத்துறைகளும் உள்ளாட்சிக்கு அப்பாற்பட்டு எந்தத் தொடர்பும் உள்ளாட்சியில் இல்லாமல் தான் இயங்கி வருகின்றன. உள்ளாட்சிக்காக உருவாக்கப்பட்ட இரண்டு மாநில நிதி ஆணையங்களும் பல பயிற்சிகளைச் செய்தன. அவற்றில் பல பரிந்துரைகளை நம் மாநில அரசு நடைமுறைப்படுத்தவே இல்லை. இவைகளெல்லாம் மாநில அரசு தருகின்ற அறிக்கைகளைப் படித்தாலே நன்கு விளங்கும். இவைகளைப் பற்றி நம் கட்சிகளும் பெரிதுபடுத்துவதில்லை. தொடர்ந்து தமிழகத்தில் உள்ளாட்ச்சிக்காக குரல் கொடுத்து வேலை செய்யும் கட்சிகள் என்று பார்த்தால் அது இடதுசாரி கட்சிகள் தான். இவற்றைத் தவிர்த்து மற்ற கட்சிகள் ஒரு தெளிவான பார்வையை உள்ளாட்சிகள் மேல் கொண்டிருக்கவில்லை. எனவே ஒட்டு மொத்த அலசலில் நமக்குத் தெரிவது, அதிகாரப் பரவலுக்கான ஒரு சாதகமான சூழ்நிலை. அரசியல் வட்டாரத்திலும் சரி, அரசு வட்டாரத்திலும் சரி, இல்லை என்று நாம் உறுதியாகக் கூற முடியும். இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒரு சில அதிகாரிகள், அமைப்புக்கள், அரசியல்வாதிகள், தன்னார்வ இயக்கங்கள் உள்ளாட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில் உள்ளாட்சியின் செயல்பாடுகளை நாம் ஆய்வு செய்தாக வேண்டும்.
உள்ளாட்சியின் செயல்பாடுகள்:-
ஓர் அரசாங்கம் முழுமையாக உருவாக்கப்படும் முன், அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்வது என்பது முறைமையியலுக்கு எதிர்மறையானது. அந்த வகையில் இன்னும் இந்த உள்ளாட்சி அமைப்புகள் சரியான தளத்தில் அமர்த்தப்படவில்லை. இருந்த போதிலும் இந்த உள்ளாட்சிகள் செய்துள்ள பணிகளை இரண்டு கோணங்களில் பார்க்கமுடியும். சமூக மாற்றத்திற்கு அதன் சாதனைகள் என்னென்ன? மக்களுக்குச் செய்யும் அடிப்படை வசதிகளில் சாதனைகள் என்னென்ன? என்று பார்க்கலாம். கொடுத்த சில குறைவான அதிகாரங்களை வைத்துக்கொண்டு, அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் எந்த அளவுக்குச் சாதனைகள் புரிந்துள்ளன என்பதைக் கிராமச் சபைத் தீர்மானங்களின் மூலமும், திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மூலமும் தெரிந்து கொள்ளலாம். தற்போது அடிப்படை வசதி கேட்டு, மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் மனுச் செய்வது குறைந்துள்ளது என்பதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது இதற்குச் சான்றாகும். அடுத்து கிராமசபையின் ஆரம்பகாலக் கூட்டங்களில் அடிப்படை வசதிகள் பற்றிய திட்டங்களே நிறைவேற்றப்பட்டன. அவைகள் இன்று குறையத் துவங்கிவிட்டன. அடிப்படை வசதிகள் எந்த அளவுக்குக் கூடிக்கொண்டே வருகின்றன என்பதற்கு, அரசின் ஊரக வளர்ச்சித்துறை தரும் அறிக்கையே ஒரு சான்றாகும்.
இன்றைக்கும் தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஜனத்தொகைக்கு ஒத்த அளவில் விகிதாச்சாரத்திலும் தலித்துக்களும் உள்ளாட்சியில் பதவிகளில் அமர்ந்துள்ளனர். குறிப்பாக கீழ்நிலைகளில் இவர்கள் பதவிகளில் இருப்பதே மிகப் பெரிய சாதனை, ஏனென்றால் நம் நாட்டில், தலித் சமுதாயத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினராவதோ, பாராளுமன்ற உறுப்பினராவதோ, அமைச்சர்களாக வருவதோ, ஜனாதிபதியாக வருவதோ, மிகப்பெரிய சாதனை அல்ல. கட்சியின் பின்னணியில் வந்துவிடலாம். உள்ளாட்சியில் அதுவும் கிராமப் பஞ்சாயத்தில் தலைவர் பதவிக்கு பெண்கள் வருவதும், தலித்துக்கள் வருவதும் மிகப் பெரிய மாறுதல். அதேபோல சாதியச் சிந்தனையில் ஊன்றிப்போய் இருக்கும் நம் கிராம சமுதாயத்தில், தலித்துக்கள் கிராமப் பஞ்சாயத்துக்களுக்குத் தலைவராக வருவதும், அவர்களை அந்தச் சமுதாயம் ஏற்றுக் கொள்வதும் மிகப்பெரிய சாதனையாகும். இந்தப் பெண் தலைவர்களும், தலித் இனத் தலைவர்களும், பஞ்சாயத்துக்களில் உள்ள தடைகளைத் தாண்டி பணியாற்றுவதே ஒரு இமாலயச் சாதனையாகும். பெண்களும், தலித்துக்களும்தான் குறிப்பாகப் பல்வேறு சாதனைகளை நம் பஞ்சாயத்துக்களில் நிகழ்த்தியுள்ளனர். பெரும்பாலான பொதுச் சொத்துக்கள் நம் அரசியல் கட்சிக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சொத்துக்களை மீட்டெடுக்க பெண் மற்றும் தலித்துக்களும்தான் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதற்காகப் பலர் உயிர்த்தியாகமும் செய்துள்ளனர். பலர் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புக்களைச் சமாளித்துக் கொண்டுள்ளனர்.
இன்றைக்குத் தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பானாலும் சரி, பாலிதீன் இல்லாத கிராமத்தை உருவாக்குவதானாலும் சரி; குடிசை வீடு இல்லாத கிராமமாக மாற்றுவதானாலும் சரி, கழிவறை இல்லாத வீடே இல்லை எங்கள் கிராமத்தில் என்று சாதனை படைப்பதானாலும் சரி; சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் செல்லாத இடத்திற்கெல்லாம் மின்வசதி செய்து தருவதானாலும் சரி; கிராமத்தில் உருவாகும் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்து பஞ்சாயத்துக்கு வருமானம் சேர்த்து, கிராமத்தையும் சுத்தமாக வைத்து வரலாறு படைபதிலும் சரி, பஞ்சாயத்துத் தலைவர்கள் முன்னுதாரணமாகத் திகழ்வதை சமீப காலங்களில் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளிலிருந்து அனைவரும் அறிவர்.
அது மட்டுமல்ல, பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் சங்கம் அமைத்து, தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பற்றிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முனைந்துள்ளனர். சமுதாய மேம்பாட்டுப் பிரச்சினைகளைத் கையிலெடுத்துள்ளனர். அதே போல் தலித் தலைவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளத் தனியான ஒரு கூட்டமைப்பை உருவாக்கிப் போராடி வருகின்றனர். இந்த அமைப்புகள் அனைத்தும், அதிகாரம் பரவலாக்கப்படும் போது, பெண்களுக்கும் தலித்துக்களுக்கும் ஏற்படும் இடர்பாடுகளை, தடைகளை உடைக்கப் பாடுபடுகின்றன.
இவ்வளவு இடர்பாடுகளுக்கிடையிலும், மிகப்பெரிய சாதனைகள் நடைபெறும் என்றால், அதிகாரப் பரவலுக்கு நல்ல சூழல் இருந்தால், நம் உள்ளாட்சித் தலைவர்கள் மிகப்பெரிய சாதனைகளைப் படைப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதிகாரப் பரவல் கடைசி மனிதர் வரை செல்வதற்குப் பல்வேறு விதமான தடைகளும் இருக்கும் என்பதற்கு, பெண்கள் அமைப்புகளும், தலித் அமைப்புக்களும் தொடர்ந்து போராடுவது ஒரு சான்றாகும். எனவே அதிகாரப்பரவல் என்பது மிகப்பெரிய போராட்டத்திற்கு மத்தியில் தான் நடக்கும் என்பதும்தான் நாம் காணும் உண்மை, எனவே இன்றையச் சூழலில், உண்மையான அதிகாரப் பரவலுக்கு ஆதரவுக்குரல் எழுப்பக்கூடிய பல்வேறு மக்கள் அமைப்புகள் தேவை. எனவே உள்ளாட்சியை வலுப்படுத்த, உள்ளாட்சி ஆதரவு இயக்கங்கள் உருவாக்கப்படல் வேண்டும். இவைகள் தான் நிலைத்த செயல்பாட்டை உள்ளாட்சியிடமிருந்து பெற்றுத்தர முடியும்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளைத் தன்னாட்சி பெற்ற அமைப்புக்களாக மாற்றி மக்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி, கிராம வளர்ச்சிச் செயல்பாடுகளில் மக்களை பங்கெடுக்க வைக்கக்கூடிய சூழலை உருவாக்கவில்லை. அதிகாரப்பரவல் என்பது மாநிலம் வரை தேவை என்பதாக ஆட்சியில் உள்ள நம் அரசியல் கட்சிகள் கருதுகின்றன. மாநிலத்திற்குக் கீழே மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அமைப்பின் மூலம் வளர்ச்சிச் செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என்ற பார்வை அந்தக் கட்சிகளிடம் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. மாநிலத்திற்குக் கீழ் அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அதிகாரங்களை வைத்திருப்பதுதான், தாங்கள் நினைத்த மாதிரி செயல்பாடுகளைத் தீர்மானிக்கவும், நிறைவேற்றிவிடவும் உதவும் என எண்ணுகின்றனர். இந்தச் சூழலிலும் உள்ளாட்சிப் பதவிக்கு வந்தவர்கள், அதிலும் குறிப்பாகக் கீழ்நிலையில் கிராமப் பஞ்சாயத்துக்கு வந்த தலைவர்களில் பலர் உள்ளாட்சி என்பது வளர்ச்சிக்கான களம், சமுதாய மாற்றத்திற்கான களம் என நிரூபித்துவிட்டனர். அதே நேரத்தில் அவர்கள் சந்திக்கின்ற சாவல்கள் எண்ணிலடங்கா. இந்தச் சவால்களைச் சமாளிக்கும் "ஆதரவு அமைப்புக்கள்" இன்றைய இன்றியமையாத தேவையாகும். மாநில அரசாங்கம் தன் துறை அலுவலர்களின் மற்றும் அதிகாரிகளின் மனோபாவத்தை மாற்றி, பங்சாயத்துக்கள் "வளர்ச்சிக்கான அமைப்புகள்" என்று செயல்பட உதவினால் மிகப்பெரிய சமூக மாற்றத்தையும், பொருளாதார மாற்றத்தையும் நம் கிராமங்களில் உருவாக்க முடியும். அதே போல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், மற்றும் சமூகக் குழுமங்களும் ஆதரவுக்கரம் நீட்டினால் பஞ்சாயத்துக்கள், மக்கள் செயல்பாட்டுக்களமாக மாறும் என்பதில் ஐயம் இல்லை. எனவே பங்சாயத்துக்களுக்கு இன்றையத் தேவை ஓர் ஆதரவுச் சூழல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...