Tuesday, March 19, 2019

தி.மு.க., தேர்தல் அறிக்கை: சாத்தியமில்லாத சத்தியங்கள்!

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல விசித்திரங்கள் இடம்பெற்றன. பத்தாண்டுகளுக்கு மேல் மத்தியில் பல தி.மு.க., அமைச்சர்கள், முக்கிய இலாகாக்களில் கோலோச்சிய போதும், கண்டுகொள்ளாது விட்ட திட்டங்கள், மறந்து போன கொள்கைகள், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நிறைவேற்ற இயலாத கவர்ச்சி திட்டங்கள் என சாத்தியமற்றவைகளை சொல்லி
சத்தியம் செய்திருக்கி
றார்கள்.
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் வென்று, ராகுல் பிரதமரானாலும் பிற கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் அவற்றை நிறைவேற்ற முடியாது. வி.பி.சிங்.,- வாஜ்பாய் ஆட்சிக்காலங்களில் ஏற்படுத்தப்பட்டது போன்ற, குறைந்தபட்ச பொது செயல் திட்டம்(common minimum programme) மூலமே, கூட்டணி ஆட்சியில் எதுவானாலும் நிறைவேற்ற முடியும்.
அந்த செயல்திட்டமும் தேர்தல் வெற்றிக்குப்பிறகு உருவாக்கப்பட்டால் தான் அது தடங்கலின்றி நிறைவேறும். இதை எல்லாம் தெரிந்திருந்தும், 'தேர்தலுக்காகவே', ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது தி.மு.க.,
அதில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களின்
சாத்தியக்கூறுகளை பார்ப்போம்.
* தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்படத்தக்க வகையில், இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க சட்ட
திருத்தம் கொண்டு வரப்படும்.

 தி.மு.க., தேர்தல் அறிக்கை: சாத்தியமில்லாத சத்தியங்கள்!
முதலில் தமிழக அரசு அலுவலகங்களில் தமிழ் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா. இன்னும் அரசாணைகள் ஆங்கிலத்தில் வெளிவருகின்றன. சாதாரணமான உயர் அதிகாரிகள் மாற்றம் போன்ற உத்தரவுகள் கூட, தி.மு.க., ஆட்சியிலும் ஆங்கிலத்தில் தானே வெளியிடப்பட்டன. மத்திய காங்., அரசில் தொடர்ந்து பத்தாண்டுகள் பதவியில் இருந்த போது முயற்சிக்காது, இப்போது திடீர் தமிழ் பாசம் ஆச்சரியம் தருகிறது. தமிழை இணை அலுவல் மொழியாக்க வேண்டும் என்றால், மத்திய அரசு மெஜாரிட்டியாக இருந்து அரசியலமைப்பு சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்.
* வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட்
வேளாண்மை துறை என்பது மத்திய அரசு பட்டியலில் இல்லை. அது மாநில அரசின் பட்டியல் சார்ந்தது. அதற்கொன்று தனிபட்ஜெட் என்பது சாத்தியமற்றது. ரயில்வே துறையின் தனி பட்ஜெட் முறையே தற்போது நீக்கப்பட்டுள்ளது.
* காஸ் சிலிண்டர் மானியம் வங்கி கணக்கில் சேர்க்கப்படாமல், காஸ் விலை குறைக்கப்படும்.
காஸ் சிலிண்டர் மானியம் தற்போது முறையாக வங்கி கணக்கில் சேர்கிறது. இந்த முறை நீக்கப்படும் போது, மானிய விலை அல்லாது சிலிண்டர் பெறும் பொருளாதார வசதி படைத்தவர்களுக்கு விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் என்பது கேள்விக்குறி.
* ஜி.எஸ்.டி., அதிக பட்சம் 28 சதவிகிதம் வரை இருப்பதால், வரிவிகிதம் மாற்றி அமைக்கப்
படும்.
ஜி.எஸ்.டி.,யை முதலில் பரிந்துரைத்தது காங்கிரஸ் ஆட்சி தான். ஜி.எஸ்.டி.,யால் தொழில்கள் நலிவடைந்துவிட்டன, ஜி.எஸ்.டி., தேவை இல்லை என்று இது வரை பேசிவந்த தி.மு.க., இப்போது ஜி.எஸ்.டி.யை ஏற்றுக்கொண்டு விட்டதா. அதிகபட்சம் 28 சதவீதம் என்பது, மாற்றி அமைக்கப்படும் என்று மட்டுமே கூறியுள்ளது. ஆனால் இப்போது ஆடம்பர பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் வரி விகிதம் இரண்டு பிரிவுகளாக மாற்றப்படும் என மத்திய நிதி அமைச்சர் ஏற்கனவே உறுதி அளித்துள்ளார்.
* முல்லை பெரியாறு, மேகதாது அணை கட்டும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படும்.
முல்லை பெரியாறு அணை விஷயத்தில், தி.மு.க.,வின் கூட்டணியான, கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒத்துக்கொள்ளுமா. தி.மு.க., வின் கூட்டணியான காங்கிரஸ் கட்சி ஒத்துக்கொள்ளுமா. மேகதாது விஷயத்தில், காங்கிரசின் தயவில் ஆட்சி செய்யும் குமாரசாமியின் கட்சி ஒத்துக்கொள்ளுமா.
இந்த பிரச்னைக்கு மத்திய அரசில் பதவி வகிக்க வேண்டும் என்று இல்லை. தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள் தான் அண்டை மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. அவர்களிடம் இப்போதே பேசி தீர்வு காணலாமே.
* இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
இதனை காங்கிரஸ் ஏற்குமா. ஏனெனில் அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில், குடியேறிய வெளிநாடுகளை சேர்ந்த இந்து, கிறிஸ்தவ மதத்தினருக்கு குடியுரிமை வழங்க பா.ஜ., அரசு உத்தரவிட்ட போது, முதலில் எதிர்த்தது காங்கிரஸ் தான்.
* கீழடியில் தொல்லியல் ஆய்வுகள் தொடரப்படும். அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. எனவே இது புதிதல்ல.
* மீத்தேன், ஹை ட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்கள் கைவிட வலியுறுத்தப்படும்.
மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மேற்க்கண்ட மத்திய திட்டங்கள் அமலாகாது. தமிழகத்தில் ைஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கையெழுத்திட்டதே தி.மு.க., ஆட்சி தானே.
* கடந்த 11 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள சேதுசமுத்திர திட்டம் அமல்படுத்தப்படும்.
கடந்த 5 ஆண்டுகளாக தான் பா.ஜ., ஆட்சி உள்ளது. அதற்கு முந்தைய காங்., ஆட்சியில் ஏன் முடக்கப்பட்டது.
திட்டம் அமையும் இடம், புராண காலத்தில் ராமர் கட்டிய ராமர் சேது பாலம் இருந்த இடம் என்ற விவாதம் எழுந்து, திட்டத்திற்கு எதிர்ப்பு வந்த போது 'ராமர் என்ன பொறியாளரா' என்று கேட்டு இந்துக்கள் மனதை தி.மு.க., தலைவர் கருணாநிதி புண்படுத்தியதை யாரும் மறக்கவில்லை.
* பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்.
இதை ராகுல் அனுமதிப்பாரா? ஏனெனில் அண்மையில் சென்னையில் அவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்ட போது, அது சட்டத்திற்கு உட்பட்டது; நீதிமன்றம் முடிவு
செய்யும் என்று மழுப்பலாக தானே பதிலளித்தார்.
ஒரு கோடி பேருக்கு சாலைப்பணியாளர் பணி, 50 லட்சம் கிராம பெண்களுக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை, வருமான வரி வரம்பு 8 லட்சம், ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு என்று ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வாக்குறுதியை கற்பனையாய் அள்ளி தெளித்திருக்கிறார் ஸ்டாலின். தி.மு.க.,வின் 39 பேரும் வென்றாலும் இவற்றில் பல விஷயங்கள் சாத்தியம் இல்லை என அனைவரும் அறிந்ததே!
வழக்கமாக தி.மு.க., குறிப்பிடும் கச்சத்தீவை மீட்போம், இலங்கை தமிழர்கள் உரிமை, இலங்கை இனப்படுகொலை, ஹிந்தி திணிப்பு என்பது பற்றியெல்லாம் ஒரு வார்த்தை கூட தேர்தல் அறிக்கையில் இல்லை. ஏன் காங்கிரஸ் கோபம் கொண்டு விடுமோ?
* மத்திய அரசு வருமானத்தில் 60 சதவீதம்
மாநிலங்களுக்கு தர வேண்டும்.
மாநில கட்சிகளின் பழைய கோரிக்கை. அவ்வப்போது நேரும் நெருக்கடிகளை சமாளிக்க மத்திய அரசின் உதவியை நாட மாட்டோம் என்று மாநிலங்கள் உறுதி அளித்தால், மாநிலங்களில் நிறைவேற்றப்படும் அனைத்து மத்திய திட்டங்களுக்கான செலவில் பாதியை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள முன்வந்தால், நிதி பங்கீடை அதிகரிப்பது குறித்து விவாதிக்கலாம் என வெவ்வேறு மத்திய ஆட்சிகள் முன்னரே தெரிவித்துள்ளன.
* மத்திய நிதிக்குழுவின் பணிகள் மாநிலங்கள் மன்றத்தால் வரையறுக்கப்பட வேண்டும்.
அத்தகைய மன்றத்தால் நிதி நிர்வாகத்தில் எந்த ஒழுங்கையும் நிலைநாட்ட முடியவில்லை என்ற சூழல் ஏற்பட்டதன் விளைவுதான் மாற்று ஏற்பாட்டுக்கே காரணம். பொறுப்பில்லாத மாநிலங்களின் நிதி நிர்வாகத் தவறுகளால் நேரக்கூடிய இழப்புகளை சரிக்கட்ட வழி தெரியாமல், நாட்டின் ஒட்டுமொத்த நிதி மேலாண்மையை சீர்குலைத்து விடும் என்பதால், எந்தக் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் இந்த கோரிக்கையை ஏற்கப்போவதில்லை.
* தொழிலாளர் ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.8,000 ஆக நிர்ணயிக்கப்படும்.நியாயமான கருத்து. பத்தாயிரம் என்பது இன்னும் வரவேற்கப்படும்.
* பொருளாதாரத்தை மீட்டெடுக்க வல்லுனர்கள் குழு அமைக்கப்படும்.
இன்றைக்கும் பட்ஜெட் தயாரிப்புக்கு முன்னதாக பொருளாதார வல்லுனர்களோடு ஒவ்வொரு நிதியமைச்சரும் ஆலோசனை நடத்துகிறார். பொருளாதார வல்லுனர்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் விவாதிக்கின்றனர். இது தவிர அதிகாரம் கொண்ட வல்லுனர் குழுவை அமைப்பதால் கருத்து மோதல்கள் உருவாகி, திட்டமிடுதல் தாமதத்துக்கு வழி திறக்குமே தவிர, பெரிய பலன்கள் கிட்ட வாய்ப்பில்லை.
* தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.86,689 ல் இருந்து ரூ.1,50,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சபாஷ். ஆனால், எப்படி செய்வீர்கள்? 130 கோடி மக்கள் வாழும் நாட்டில் தனி நபர் சராசரி வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவது என்பது மந்திரவாதிகளால் மட்டுமே சாத்தியம். அதற்கான வழிமுறை இதுதான் என்று வரைந்து காட்டி உறுதி செய்தால் ஒரு தமிழருக்கு
பொருளாதார நோபல் நிச்சயம்.
* பெட்ரோல், டீசல், காஸ் விலையை மீண்டும் பழைய முறைப்படி நிர்ணயம் செய்வோம்.
அன்றாடம் செய்தித்தாள் பார்த்து விலையை தெரிந்து கொள்ள அவசியம் இருக்காது என்பதை தவிர எந்த பலனும் கிடையாது.
* குறைந்தபட்ச தொகை வைக்காதவர்களிடம் வங்கிகள் வசூலித்த அபராதத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுப்போம்.
நடுத்தர வர்க்கத்தின் கைதட்டலை பெற்றுத் தரும் வாக்குறுதி.
* தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலேயே ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் பிரச்னைகள் எழுந்து கோர்ட்டில் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, தனியார் நிறுவனங்களில் எப்படி திணிக்க முடியும்? குறைந்தபட்ச கூலி உள்ளிட்ட தொழிலாலர் நல சட்டங்கலையே இன்னமும் முழுமையாக செயல்படுத்த மத்திய மாநில அரசுகளால் இயலவில்லை என்பதுதான் எதார்த்தம்.
* மதுரை, திருச்சி, கோவை, சேலத்தில் மெட்ரோ ரயில்.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நடக்கப் போகிறது. ஏற்கனவே ஒப்புதல் பெற்ற திட்டங்கள்.
* இயற்கை சீற்ற நிவாரணத்துக்காக பட்ஜெட்டில் அரை சதவீதம் நிதி ஒதுக்கப்படும்.
முதல்வர் நிவாரண நிதி எதற்காக இருக்கிறதாம்?
* கடலோர மக்களை புயலில் இருந்து காப்பாற்ற சட்டம்.
புயலுக்கு தடை விதிப்பது புதுமையான முயற்சி. வாழ்த்துவோம்.
* கம்பெனிகள் ரூ.10,000 சம்பளத்தில் 50 லட்சம் பேருக்கு வேலை.
முன் உதாரணமாக அரசு 5 கோடி பேருக்கு ரூ.30,000 சம்பளத்தில் வேலை கொடுத்தால், இதுவும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இதையும் மக்கள் நம்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு அபாரம்.
* சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டம்
தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கிறது. ஒரு ட்ரையல் பார்க்கலாமே. நடக்குமா இது. காங்கிரஸ் ஏற்குமா.
* காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.
காசா பணமா, அறிவிப்புதானே.. தாராளமாக செய்யட்டும்.
* ஊரக வேலை திட்டத்தில் வேலை நாள் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும்.
பரந்த அளவில் உற்பத்தி பாதிப்புக்கு காரணமாகிறது என்ற ஆய்வுகளை பரிசீலனைக்கே எடுக்காமல், வேலை நாட்களை மட்டும் நீட்டிப்பது எதிர்பாராத சமூக, பொருளாதார சேதங்களுக்கு அடித்தளம் அமைக்கக்கூடும். அப்படி இல்லை என்றால், முன்பே செய்திருக்கலாமே.
* மத்திய மாநில அரசுகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
தேவைக்கு அதிகமாக அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அடுத்தடுத்த அரசு நிர்வாக சீர்திருத்த குழுக்கள் மற்றும் ஊதிய நிர்ணய குழுக்களின் கண்டுபிடிப்பு. ஊழியர் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட வேண்டும் என்ற நிபுணர்கள் பரிந்துரைக்கு முற்றிலும் முரணான வாக்குருதி. நடைமுறை சாத்தியங்கள் மிகவும் குறைவு.
* மத நல்லுறவை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்து சடங்குகளை கேலி செய்வது, கோயில் வாசலில் நெற்றி விபூதியை அழிப்பது.. என்று தி.மு.க., தலைமைக்கு தெரிந்த சகல வித்தைகளும் மத நல்லுறவை வளர்க்கும் என்பதில்
ஐயமில்லை.
* கேபிள் 'டிவி' கட்டணம் குறைக்கப்படும்.முகேஷ் அம்பானி புண்ணியத்தில் வீடுகளில் 'டிவி' யை ஆன் செய்வதே குறைந்துவிட்டது. கட்டணத்தை குறைத்து 'டிவி'யை காப்பாற்றலாம்.
* மனித கடத்தலை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்.
அடடா.. இப்போது
அப்படி சட்டமே இல்லையா.. சரி சரி.
* பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சுப்ரீம் கோர்ட்டே சொன்ன பிறகு அரசு செய்துதானே ஆக வேண்டும்.
* நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.நீண்ட இடைவெளிக்கு பிறகு காஞ்சிபுரம் ஞாபகம் வருகிறதோ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...