P.ஜெயச்சந்திரன் அவர்கள் மலையாளத் திரையிசை உலகில் கே.ஜே.ஏசுதாஸ் அவர்களுக்கு நிகராக வைத்து கொண்டாடப்படும் அளவிற்கான மிக பிரபலமான பின்னணிப் பாடகர் . 'உணர்ச்சிகளின் பாடகன்' என்று பொருள்படும்படியான 'பாவ (Bhava) காயகன்' என்கிற அடைமொழியோடு அழைக்கப்படும் ஜெயசந்திரன் அவர்களின் குரலுக்கும் பாடும் முறைக்கும் சக பின்னணிப் பாடகர்கள் உட்பட கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. 1967ல் தனது வயது இருபதுகளின் மத்தியில் இருந்தபோது திரையிசையுலகில் பாட ஆரம்பித்தவர், வயது எழுபதினைக் கடந்த பிறகும் இன்றும் திரையிசைத்துறையில் மார்கண்டேயக் குரலுடன் அதே வசீகரத்தோடு பாடிவரும் ஆச்சர்யக் கலைஞனாய் இருக்கிறார்.
1972ல் எம்.எஸ்.வியின் இசையில் வெளியான 'பனிதீரத்த வீடு' என்கிற மலையாளத் திரைப்படத்தில் பாடிய 'சுப்ரபாதம்' என்னும் பாடலுக்காக கேரள அரசின் சிறந்த பின்னணிப் பாடகர் விருதினைப் பெற்று பெரும் கவனிப்பிற்குள்ளானதைத் தொடர்ந்து , எம்.எஸ்.வி தனது இசையில் அலைகள் படத்தின் 'பொன்னென்ன பூவென்ன' மற்றும் மணிப்பயல் படத்தின் 'தங்கச் சிமிழ் போல' என 1973ல் ஒரே சமயத்தில் வெளியான இரண்டு படங்களில் வாய்ப்புகளை வழங்கியதன் மூலம் தமிழில் ஜெயச்சந்திரன் அவர்களின் அறிமுகம் நிகழ்கிறது. தொடர்ந்து எம்.எஸ்.வி இசையில் இந்தக் காலக்கட்டத்தில் பாடல்களை வரிசையாக தமிழிலும் பாட ஆரம்பித்தவருக்கு மூன்று முடிச்சு படத்தின் 'வசந்தகால நதிகளிலே' மிகப் பெரிய ஹிட் பாடலாக அமைந்ததில் மற்ற இசையமைப்பாளர்களின் கவனத்திற்கும் வர ஆரம்பித்தார் எனலாம்.
இப்பாடலின் வெற்றியைத் தொடர்ந்து அன்றைய இசையமைப்பாளர்கள் பலரின் இசையிலும் பாடல்கள் பாடும் வாய்ப்பினை ஜெயச்சந்திரன் அவர்கள் பெற்று வந்திருந்தாலும் 1977ல் வெளியான காற்றினிலே வரும் கீதம் படத்தின் 'சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்' மற்றும் 'ஒரு வானவில் போலே' , 1978ல் வெளியான ’கிழக்கே போகும் ரயில்’ படத்தின் 'மாஞ்சோலை கிளிதானோ' , 1979 ல் வெளியான நல்லதொரு குடும்பம் படத்தின் 'செவ்வானமே பொன்மேகமே', முதல் இரவு படத்தின் 'மஞ்சள் நிலாவுக்கு' , ’அன்பே சங்கீதா’ படத்தின் 'கீதா சங்கீதா' என இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் பாட ஆரம்பித்த பிறகே தீவிர இசை ரசிகர்களுக்கே P.ஜெயச்சந்திரன் என்கிற பெயர் குறித்த அறிமுகம் கிடைக்க ஆரம்பித்தது எனலாம்.
குறிப்பாக 1984ல் வெளிவந்த ’வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் இவர் பாடிய 'ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு' பட்டிதொட்டியெல்லாம் இவரின் குரலைக் கொண்டு சேர்த்தது என்றால் மிகையில்லை. இதே படத்தில் இவர் பாடிய 'இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே' மற்றும் 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி' ஆகியவையும் மிகப் பெரிய கவனிப்பினைப் பெற்ற பாடல்களாக அமைந்தன.
பொதுவாக மலையாளப் பாடகர்களின் குரல்களுக்கிடையே நிறைய ஒற்றுமைகள் காணக் கிடைக்கும். ஏசுதாஸ் அவர்களின் வருகைக்குப் பிறகு, இந்த மலையாளக் குரல் ஒற்றுமையை ஏசுதாஸின் குரலை அளவீடாகக் கொண்டு அணுகும் இயல்பு திரையிசை ரசிகர்களிடம் ஒட்டிக் கொண்டது எனலாம். 'ஒரு கைதியின் டைரி’ படத்தில் விஜய் என்ற பெயரில் பாடகராக அறிமுகமான பாடகர் உன்னி மேனன் பாடிய 'பொன்மானே கோபம் ஏனோ' பாடலை ஏசுதாஸின் ஹிட்ஸில் வைத்திருப்போர் உண்டு.
2000 த்திற்குப் பிறகு தமிழ்த்திரையுலகில் பாட வந்த மதுபாலகிருஷ்ணனின் 'கனா கண்டேனடி தோழி' பாடலைக் கேட்டு ஏசுதாஸ் இன்றும் அதே போல பாடுகிறார் என குழம்பியதும் கூட இந்த மலையாளக் குரல் குழப்பத்தால் நிகழ்ந்தது. அப்படியான இந்தக் குரல் குழப்பத்தில் முதலில் சிக்கியவர் P.ஜெயச்சந்திரன் அவர்கள். கடல் மீன்கள் படத்தின் 'தாலாட்டுதே வானம்' , சூரக்கோட்டை சிங்கக்குட்டியின் 'காளிதாசன் கண்ணதாசன்', ’நானே ராஜா நானே மந்திரி’யின் 'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்' போன்று இவர் பாடிய பிரபல பாடல்களை மேற் சொன்ன குரல் குழப்பத்தினால் ரசிகர்கள் ஏசுதாஸ் அவர்களின் கணக்கில் வரவு வைத்ததால் இவரின் பாடல்கள் பிரபலம் அடைந்த அளவிற்கு இவரின் பெயர் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவிலான பிரபலம் அடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜெயச்சந்திரன் அவர்களின் குரல் எடுத்த எடுப்பில் ஏசுதாஸ் அவர்களின் குரலையொத்ததொரு தோற்றத்தைத் தந்தாலும், அவரின் பாடல்களைக் கேட்க கேட்க கீதாரியின் பனையோலைக் கூடாரத்தில் இருந்து வெளியேறும் செம்மறிக் குட்டிகள், ஒன்று போலவே இருக்கும் செம்மறி ஆடுகளில் தங்களது தாயினை சரியாக அடையாளம் கண்டு ஓடுவதைப் போல முற்றிலும் தனித்த அடையாளம் கொண்ட ஜெயச்சந்திரன் அவர்களின் குரல்வளம் நமக்குப் பிடிபடும். இவரின் குரலுக்கான தனித்துவங்களில் குறிப்பிட வேண்டியவை வரிகளின் பொருள் உணர்ந்து கொடுக்கிற உணர்ச்சிகளும், துல்லியமான உச்சரிப்பு சுத்தமும்.
ஜெயச்சந்திரன் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மலையாள வாடையே இல்லாத தெள்ளத் தெளிவான வகையிலானது. இந்த உச்சரிப்பின் பின்னணிக் குறித்து மலையாளத் தொலைக்காட்சி நேர்கணல் ஒன்றிலும்கூட வியந்து கேட்டிருந்தார்கள். அதற்கான பதிலாக அவர் சொன்னது தனது வளர் பருவத்தில் தமிழ்த் திரைப்படங்கள் பார்த்து வளரும் சூழல் இருந்ததும், அதன் வழி தமிழ் மீது அமைந்த நேசமும் காரணமாகக் கூறியிருந்தார். போலவே தமிழில் பாடுவதை மிகவும் நேசிப்பவராக இருப்பதும் அவரைக் குறித்த தேடலில் அவதானிக்கக் கிடைத்த விஷயங்களில் ஒன்று. தமிழில் பாடல் வரிகள் பெரும்பாலும் இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கமாக அமைந்திருக்கும் என்பதால் அனுபவித்து பாட இயலும் என்பதை அந்த தமிழ்ப் பாடல் நேசிப்பின் காரணமாக அவர் சொல்லியிருந்தார்.
மலையாளத்தில் ழகர சொற்களின் அன்றாடப் புழக்கம் அதிகம் என்பது ஒரு காரணமாகவோ என்னவோ தமிழின் சிறப்பு எழுத்தாகச் சொல்லப்படும் ழகரத்தை மலையாளிகள் சிறப்பாக உச்சரிப்பார்கள். ஜெயச்சந்திரனும் அதில் ஈர்க்கக் கூடியவர். இதற்கு உதாரணமாக சொல்லத் துடிக்குது மனசு படத்தின்,
'எனது விழி வழி மேலே
கனவு பல விழி மேலே'
என்கிற பாடலின் பல்லவியிலும்,
கனவு பல விழி மேலே'
என்கிற பாடலின் பல்லவியிலும்,
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு பாடலில் ,
'தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே'
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே'
என்கிற இசைக்குறிப்பினையும் சொல்லலாம். ஆனால் ஜெயச்சந்திரனின் தமிழ் உச்சரிப்பு என்பது ழகரம் தாண்டியும் வசீகரிக்கக் கூடியது. எப்படி இசைஞானி இளையராஜா அவர்கள் தான் பாடும் பாடல்களில் ழ,ள,ல எழுத்துகளை பாடம் எடுப்பது போல உச்சரிப்பாரோ, கிட்டத்தட்ட அப்படியொரு தொனி ஜெயச்சந்திரனுக்குமானது எனலாம். உறுதி மொழி படத்தின் 'அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே' பாடலை ஜெயச்சந்திரனின் தமிழ் உச்சரிப்பின் உச்சமான ஒரு பாடலாக அணுகலாம்.
'மணிக்குருவி உனைத் தழுவ
மயக்கம் பிறக்கும்'
மயக்கம் பிறக்கும்'
என்கிற இசைக்குறிப்பில் ர, ற வை அவர் வேறுபடுத்திக் கையால்வதையும் , 'இனித்தேன் என் இதயம் தனை இணைத்தேன் என் உயிரே' என்கிற வரியில் 'இணைத்தேன்' சொல்லில், தமிழனே தடுமாறும் ணகரத்தை அழுத்தி தனித்துக்காட்டி மரியாதை செய்திருப்பதெல்லாம் ஆச்சர்யம் கொள்ள வைக்கும் விதத்திலானது. இதன் பின்னணியில் இளையராஜாவின் பங்களிப்பு இருந்திருக்கும் என்றாலும் ராஜாவின் இசையல்லாத பாடல்களிலும் இதே உச்சரிப்புத் துல்லியத்தை ஜெயச்சந்திரன் அவர்கள் இயல்பாகவே கைக்கொண்டிருப்பதையும் அறியலாம்.
டி.ராஜேந்தர் இசையில் ரயில் பயணங்களில் படத்தில் இவர் பாடிய 'வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்' பாடலில் மொத்த பாடலுமே தமிழ்ச் சுவையை பிரவாகமாகக் கொண்ட வரிகளால் அமைந்தவை. 'கருவண்டு நடனம் தருகின்ற நளினம்' என்பது போல அழகிய வர்ணனைகளும் , எதுகை மோனைகளுமாக டி.ராஜேந்தர் தனது எழுத்தால் வியக்க வைத்த இந்தப் பாடலில்,
'தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊறுமடி
இதழ்கள் ஊறுமடி… இதழ்…கள்…ஊறுமடி'
இதழ்கள் ஊறுமடி… இதழ்…கள்…ஊறுமடி'
என்கிற வரிகளில் இதழ்கள் ஊறுமடியை இரண்டு முறை மெட்டின் போக்கில் விறுவிறுவென விரைந்து பாடிவிட்டு இறுதியில் 'இதழ் .. கள்' ஊறுமடி என்று பிரித்து, டி.ராஜேந்தரின் சொல் விளையாட்டினை நின்று நிதானமாக அடையாளம் காட்டும்படியான அந்த இசைக் குறிப்பில் 'கள்'ஐ அவர் உச்சரிப்பது போன்றதொரு பர்பெக்ஷனில் இன்னொரு பாடகரிடம் 'ள்' உச்சரிப்பினைக் கேட்க முடியுமா என்பது சந்தேகமே. இதே போன்று 'இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே' பாடலில் 'ஆலிலையோ தொட ஆள் இல்லையோ' என்கிற கங்கை அமரனின் சொல் விளையாட்டையும் உள்வாங்கி அழகுற கையாண்டிருக்கும் ஜெயச்சந்திரனையும் இந்த இடத்தில் நினைவூட்டத் தோன்றுகிறது.

இவரின் இன்னொரு பலம் குரலின் இனிமை. தென்றலின் மென் வருடலுக்கு நிகராக அதிராத வகையில் உருவாக்கப்படும் பாடல்களில் இவரின் குரல் அத்துனை சுகமாக இருக்கும். குறிப்பாக ராஜாவின் இசையமைப்பில் 'பிள்ளை நிலா' படத்தின் 'ராஜாமகள் ரோஜாமகள்' பாடல் முழுதும் ஜெயச்சந்திரனின் குரலில் உச்சமான ஓர் அழகியலோடு வலம் வரும். இதே போன்று பகல் நிலவு படத்தின் 'பூவிலே மேடை நான் போடவா', முடிவல்ல ஆரம்பம் படத்தின் 'பாடிவா தென்றலே', டிசம்பர் பூக்கள் படத்தின் 'அழகாகச் சிரித்தது அந்த நிலவு' , நதியைத் தேடி வந்த கடல் படத்தின் 'தவிக்குது தயங்குது ஒரு மனது', ’நானே ராஜா நானே மந்திரி’ படத்தின் 'தேகம் சிறகடிக்கும்' போன்ற பாடல்கள் ஜெயச்சந்திரனின் குரலுக்காகவே செய்தவையோ என்றுத் தோன்ற வைக்கும் அழகுடன் இந்த மென் மெட்டுகளில் மனதினை வருடுவார் ஜெயச்சந்திரன்.
ஒட்டு மொத்த பின்னணிப் பாடகிகளின் குரல்களிலேயே மிகவும் மென்மையான குரல் என்கிற ஒர் அடையாளத்தை பாடகி சுனந்தாவின் குரலுக்கு வழங்கலாம். ராஜா தனது இசையில் அதிராத இசைக் கலவைகளைக் கொண்ட மென் மெட்டுகளுக்கு மிக அரிதாகவே சுனந்தாவை தேர்வு செய்வார். புதுமைப் பெண் படத்தின் 'காதல் மயக்கம்' , என் புருஷந்தான் எனக்கு மட்டும்தான் படத்தின் 'பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா' , பொன் விலங்கு படத்தின் 'ஒரு கோலக்கிளி சொன்னதே', செவ்வந்தி படத்தின் 'செம்மீனே செம்மீனே' என சுனந்தா பாடிய மென் மெலடிகளுக்கு அவரின் குரலின் மென்மைக்கு இணையான ஜோடிக்குரலாக ராஜா தேர்ந்தெடுத்திருப்பது பெரும்பாலும் ஜெயச்சந்திரனையே என்பதில்கூட ஜெயச்சந்திரனின் குரலின் மென்மையைக் குறித்த ஒப்பீட்டுக்கான ரசிக அவதானிப்பாக பகிரத் தோன்றுகிறது.
சொற்களுக்கு ஏற்ப பாவங்களைக் கொடுப்பதிலும் ஜெயச்சந்திரன் மிகவும் கவனத்தை ஈர்ப்பார். ராஜாவின் இசையில் ’உன்னை நான் சந்தித்தேன்’ படத்தின் 'தேவன் தந்த வீணை' பாடலில் சரணத்தின் முடிவில் 'இறைவன் சபையில் கலைஞன் நான்' என்கிற இசைக்குறிப்பில் அவர் கொடுக்கிற அந்த ஃபீல் ஜெயச்சந்திரனுக்கே உரிய அழகிய அம்சம். போலவே அம்மன் கோவில் கிழக்காலே படத்தின் 'பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே' பாடலில் 'காத்துல சூடம் போல கரையிறேன் ஒன்னால' இசைக்குறிப்பில் ஜானகியோடு எக்ஸ்பிரஷனில் இவர் கொடுக்கும் போட்டியும் அத்தனை சிலாகிப்பிற்குரியது. கடலோரக் கவிதையின் 'கொடியிலே மல்லிகைப் பூ' பாடலில் 'எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே' என்கையில் ஏசுதாஸின் சாயலைக் கொண்டு ஒலிப்பதாக நம்பும் அந்தக் குரலில் தனித்துவமாய் வெளிப்படும் ஓர் ஏக்கக் குழைவு ஜெயச்சந்திரனை தனித்து அடையாளம் காட்டும்.

ஜெயச்சந்திரன் அவர்கள் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார், வேகமான தாளக்கட்டிலான பாடல்களுக்கான வாய்ப்புகள் வந்தால் பாடத் தயார் என, ஆனால் ராஜா அப்படியான ஒரு சோதனை முயற்சியை எண்பதுகளிலேயே ஜெயச்சந்திரனின் குரலில் செய்து பார்த்திருக்கிறார். நட்பு படத்தின் 'அடி மாடிவீட்டு மானே', ’ஒரு ஓடை நதியாகிறது’ படத்தின் 'ராத்திரி பொழுது ஒன்ன பாக்குற பொழுது', ’எல்லாம் உன் கைராசி’ படத்தின் 'ஆங்காரி ஓங்காரி மாரி' போன்ற வேகமான தாளக்கட்டிலான மெட்டுகளில் ஜெயச்சந்திரனின் குரலினை ராஜா பயன்படுத்தியிருக்கிறார். இவற்றில் ஜெயச்சந்திரனின் குரல் கேட்கும் வகையில்தான் இருக்கும் எனினும் அந்த மெட்டுகளில் எஸ்.பி.பியோ, மலேசியா வாசுதேவனோ பாடியிருந்தால் இன்னும் ரகளையாக இருந்திருக்குமோ என்கிற எண்ணத்தை விதைக்குபடியான அளவிலேயே அந்த மெட்டுக்களில் அவர் கொடுக்கும் அழுத்தமும்கூட மென்மையாகவே பதிவாகியிருக்கும்.
தொண்ணூறுகளில் வந்த ’ஏழைஜாதி’ படத்தில் புரட்சி பாடல்போல வரும் 'ஏழைஜாதி கோழை ஜாதி அல்ல' பாடல் வேகமான தாளக்கட்டு அல்லாத போதும் ஆக்ரோஷமாக பாடுகிற அவசியம் கொண்ட மெட்டமைப்பு.அந்தப் பாடலிலும் ஜெயச்சந்திரனின் குரலில் இருக்கும் மென்மையினை நோக்கும்போது மலேசியா வாசுதேவனுக்கான பாடல் இது என்றுதான் எண்ணம் வரும். ஜெயச்சந்திரன் அவர்களால் பாட முடியாத ஜானர் என்று ஒன்று இருக்க முடியாது எனினும் அவரின் குரலுக்கு பொருத்தமானது மென்மையான மெலடிகளே என்பது இந்த உதாரணங்கள் வழியே கவனிக்கக் கிடைகிற விஷயமாக இருக்கிறது.
தொண்ணூறுகளில் வந்த ’ஏழைஜாதி’ படத்தில் புரட்சி பாடல்போல வரும் 'ஏழைஜாதி கோழை ஜாதி அல்ல' பாடல் வேகமான தாளக்கட்டு அல்லாத போதும் ஆக்ரோஷமாக பாடுகிற அவசியம் கொண்ட மெட்டமைப்பு.அந்தப் பாடலிலும் ஜெயச்சந்திரனின் குரலில் இருக்கும் மென்மையினை நோக்கும்போது மலேசியா வாசுதேவனுக்கான பாடல் இது என்றுதான் எண்ணம் வரும். ஜெயச்சந்திரன் அவர்களால் பாட முடியாத ஜானர் என்று ஒன்று இருக்க முடியாது எனினும் அவரின் குரலுக்கு பொருத்தமானது மென்மையான மெலடிகளே என்பது இந்த உதாரணங்கள் வழியே கவனிக்கக் கிடைகிற விஷயமாக இருக்கிறது.
இந்த மென்மைக் குணத்தினை இயல்பில் கொண்டிருப்பதால் காதல் பாடல்களைப் போலவே அதிராத இசையிலான சோகப் பாடல்களுக்கும் மிகவும் பொருந்துகிற குரல்வளமாகவும் இவரின் குரல் இருந்தது. ராஜாவின் இசையில், ’என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ படத்தில் 'புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்', மற்றும் தெய்வவாக்கு படத்தின் 'ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை', டி.ராஜேந்தரின் இசையில் ’ஒரு தலை ராகம்’ படத்தின் 'கடவுள் வாழும் கோவிலிலே' மற்றும் ’பூ பூவா பூத்திருக்கு’ படத்தின் 'பூப்பூத்த செடியக் காணோம்' , மனோஜ் கியானின் இசையில் ’செந்தூரப் பூவே’ படத்தின் 'சோதனத் தீரவில்ல' , ராஜேஷ் கண்ணாவின் இசையில் நான் வளர்த்த பூவே படத்தின் 'உயிருள்ள ரோஜாப்பூவே' போன்ற பாடல்களில் சோக ரசத்தில் மனதினை அத்துனை ஆதூரமாக வருடும் இவரின் குரல்.
எம்.எஸ்.வி மற்றும் ராஜாவினைத் தொடர்ந்து தமிழில் ஜெயச்சந்திரனின் பெயரை நினைவு கூறத்தக்க வகையிலான பாடல்களை வழங்கியவர்களில் முக்கியமானோர் எஸ்.ஏ.ராஜ்குமார் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான். எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் ’சின்ன பூவே மெல்ல பேசு’ படத்தின் 'சின்ன பூவே மெல்லப் பேசு', மனசுக்குள் மத்தாப்பு படத்தின் 'பூந்தென்றலே நீ பாடிவா' , அவள் வருவாளா படத்தின் 'இது காதலின் சங்கீதம்', பூவே உனக்காக படத்தின் 'சொல்லாமலே யார் பார்த்தது', ’புத்தம் புது பூவே’ படத்தின் 'சாமந்திப் பூவுக்கும் சாயங்காலக் காற்றுக்கும்' போன்ற அழகிய மெலடிகள் குறிப்பிடப்பட வேண்டியவை. சூர்ய வம்சத்தின் ' ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' மற்றும் வானத்தைப் போல படத்தின் 'காதல் வெண்ணிலா' ஆகிய ஹரிஹ்பாடல்களின் சோக வடிவங்களையும் ஜெயச்சந்திரனுக்கு வழங்கியிருந்தார் எஸ்.ஏ.ராஜ்குமார்.
ஏ.ஆர்.ரஹ்மான் ஜெயச்சந்திரன் அவர்களுக்கு ’கிழக்குச் சீமையிலே’ படத்தின் 'கத்தாழங்காட்டு வழி', ’வண்டிச்சோலை சின்ராசு’ படத்தின் 'சித்திரை நிலவு', ’காதலன்’ படத்தின் 'கொல்லயில தென்னை வைத்து' , மேமாதம் படத்தின் 'என் மேல் விழுந்த மழைத்துளியே', ’பாபா’ படத்தின் 'ராஜ்யமா இல்லை இமயமா' என எண்ணிக்கையில் குறைவான பாடல்களை வழங்கியிருப்பினும் அவை ஒவ்வொன்றும் முத்திரைப் பாடல்களாக அமைந்திருந்தன. ரஹ்மானின் இசையில் ஜெயச்சந்திரன் பாடியவற்றில் உச்சமான பாடலாக ’கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தின் 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடலைச் சொல்லலாம். ரஹ்மான், தனது ஒன்பதாவது வயதில் கம்போஸ் செய்த மெட்டு ஒன்று அவரின் தந்தை திரு.சேகர் அவர்களின் இசையில் மலையாளத்தில் வந்த ’பென்படா’ என்னும் படத்தில் இடம்பெற்றது. 'வெள்ளி தேன் கிண்ணம்' என்னும் அந்தப் பாடலை ஜெயச்சந்திரன் பாடியிருந்தார். அந்த வகையில் நோக்க ரஹ்மானின் முதல் மெட்டினைப் பாடிய பெருமையும் கூட ஜெயச்சந்திரன் அவர்களுக்கு உண்டு.
எம்.எஸ்.வியின் இசையில் 'அந்த ஏழு நாட்கள்' படத்தில் பாடிய 'கவிதை அரங்கேறும் நேரம்' மற்றும் 'தென்றலது உன்னிடத்தில்' , ராஜாவின் இசையில் 'உள்ளம் கவர்ந்த கள்வன்' படத்தில் பாடிய 'எம்மனச பறிகொடுத்து', சலீல் சௌத்ரியின் இசையில் 'அழியாத கோலங்கள்' படத்தில் பாடிய 'பூ வண்ணம் போல மின்னும்', கங்கை அமரன் இசையில் ’நாம் இருவர்’ படத்தில் பாடிய 'திருவிழா திருவிழா' , மனோஜ் கியானின் இசையில் 'இணைந்த கைகள்' படத்தில் பாடிய 'அந்தி நேரத் தென்றல் காற்று', வித்யாசாகரின் இசையில் ’நிலாவே வா’ படத்தின் 'கடலம்மா கடலம்மா' மற்றும் ’தம்பி’ படத்தின் 'பூவனத்தில் மரம் உண்டு' , தேவாவின் இசையில் ’சொக்கத்தங்கம்’ படத்தின் 'வெள்ளையாய் மனம் பிள்ளையாய்' போன்றவை ஜெயச்சந்திரனின் குரலில் குறிப்பிட வேண்டிய பாடல்கள். போலவே சிறப்பான மெட்டுகளாக இருந்தும் அதிகம் கவனிப்பிற்குள்ளாகாத மெட்டுகள் என்ற வகையில் மனோஜ் கியானின் இசையில் ’சின்ன மயில்’ என்னும் படத்தில் பாடிய 'செவ்வானம் பூக்கள் தூவும்' பாடலையும், ராஜாவின் இசையில் ’தம்பிக்கு ஒரு பாட்டு’ படத்தின் 'தைமாதம் கல்யாணம்' மற்றும் ’பொண்ணுக்கேத்த புருஷன்’ படத்தின் 'ஜல் ஜல் ஜல் சலங்கைக் குலுங்க' பாடல்களையும் அவரின் பாடலைத் தேடி கேட்போருக்கான பரிந்துரையாகக் கொடுக்கத் தோன்றுகிறது.
எழுபதுகளில் தொடக்கத்தில் எம்.எஸ்.வி , ஜி.கே.வெங்கடேஷ் ஆகியோர் இசையில் பாடத் தொடங்கியவர் இன்றைய இசையமைப்பாளர்களான பரணி, ஶ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ் உட்பட பலரின் இசையிலும் பாடியிருக்கிறார். தமிழில் எண்ணிக்கையில் குறைவான பாடல்களைப் பாடியிருந்தாலும் பெரிய இடைவெளி என்பது இல்லாமல் தொடர்ச்சியாக ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தமிழில் பாடிக்கொண்டே இருந்திருக்கிறார் என்பதும் இந்தக் கட்டுரை மூலமாக நாம் அறிகிற ஒரு விஷயமாக இருக்கிறது.
தேசிய விருது உட்பட கேரள, தமிழக மாநில அரசுகளின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதுகளையும் வென்றிருக்கும் ஜெயச்சந்திரன் அவர்கள் இடையில் ஒரு பத்து ஆண்டுகளாக திரையிசை வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இதற்குக் காரணமாக அவரின் தற்கால இசைக்குறித்த அதிரடி பேச்சுகள் காரணமா? என நேர்காணல் ஒன்றில் கேட்டகப்பட்ட போது ரீமிக்ஸ் கலாச்சாரம், ’ஒய் திஸ் கொலவேறி’ போன்ற பாடல்கள் குறித்தெல்லாம் காட்டமான விமர்சனத்தை வைத்தார். இதன் காரணமாக வாய்ப்பு வரவில்லை எனில் தனக்கு பிரச்சனை இல்லை , தான் பக்தி பாடல்கள் பாடுவதிலும், மேடை கச்சேரிகள் செய்வதிலும் பிஸியாக இருக்கிறேன் அதுவே போதும் என்றார். சமீப ஆண்டுகளில் மலையாளத் திரைப்படங்களில அதே இளமையான குரல் வளத்தோடு மீண்டும் பாட ஆரம்பித்திருக்கிறார்.
தமிழின் மீதும் தமிழ் பாடல்கள் மீதும் ஆழமான நேசிப்பினைக் கொண்டிருக்கும் அந்த அற்புதக் கலைஞனின் குரலின் மீது நம்ம ஊர் இசையமைப்பாளர்களின் பார்வையும் பட்டு அவர் பாடுகிற காலம் வரை தமிழிலும் அந்த சுந்தரக்குரலை வலம் வரச் செய்தலே அவருக்கு தமிழ்த்திரை சார்பாக வழங்கும் சிறந்த மரியாதையாக இருக்கும்.
No comments:
Post a Comment