லோக்சபா தேர்தல் கூட்டணி பிரச்னையால் தே.மு.தி.க. நிர்வாகிகள் மத்தியில் கோஷ்டிபூசல் வெடித்துள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 2011 தேர்தலில் இருந்து கூட்டணி தொடர்பாக மாவட்ட செயலர்களிடம் கருத்து கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார். 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க மாவட்ட செயலர்கள் விரும்பினர்; அதை நிறைவேற்றினார். கடந்த 2014 லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர மாவட்ட செயலர்கள் ஆசைப்பட்டனர். ஆனால் பா.ஜ. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது. 2016 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும் என மாவட்ட செயலர்கள் வலியுறுத்தினர். மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க. தோல்வியை சந்தித்தது.
இத்தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணியில் இணைவதற்கு விஜயகாந்த் விரும்பினார். இதற்காக அக்கட்சி தலைமைகளிடம் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் பேச்சு நடத்தி வந்தார். அதில் உடன்பாடு காண்பதற்கு முன் பா.ம.க.வுக்கு அதிக தொகுதிகளை அ.தி.மு.க. வழங்கியதால் தே.மு.தி.க. அதிர்ச்சி அடைந்தது. அதேபோல தங்களுக்கும் தொகுதிகளை வழங்கும்படி தே.மு.தி.க. தலைமை வலியுறுத்த துவங்கியது; அதற்கு அ.தி.மு.க. உடன்படவில்லை.
இந்நிலையில் தே.மு.தி.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் பலரும் தி.மு.க. கூட்டணியில் சேர வலியுறுத்தினர். ஆனால் சுதீஷ் தொடர்ந்து அ.தி.மு.க. அணியில் சேரவே பேச்சு நடத்தி வந்தார். இதில் உடன்பாடு எட்டப்படாததால் மாவட்ட செயலர்கள் கடுப்படைந்துள்ளனர். விஜயகாந்தை சந்தித்த மாவட்ட செயலர்கள் வெங்கடேசன் மோகன்ராஜ் இளங்கோவன் முருகேசன் ஆகியோர் தி.மு.க. கூட்டணிக்கு நாங்கள் முயற்சி எடுக்கலாமா என கேட்டுள்ளனர். அதற்கு விஜயகாந்த் 'சரி முயற்சித்து பாருங்கள்' என கூறியுள்ளார். இதையடுத்து நேராக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டுக்கு இளங்கோவன் முருகேசன் ஆகியோர் சென்றுள்ளனர். இத்தகவலை 'மீடியா'க்களிடம் பரப்பி தே.மு.தி.க.வின் பெயரை கெடுத்து விட்டது துரைமுருகன் தரப்பு.
விஜயகாந்தின் உடல் நலம் விசாரிக்க வந்த போது 'தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எங்களிடம் அரசியல் பேசினார்' என பிரேமலதா கூறியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தி.மு.க. இதை பயன்படுத்தியது. இது தே.மு.தி.க.விற்கு அவப்பெயரை மட்டுமின்றி மாவட்ட செயலர்கள் மத்தியில் கோஷ்டிபூசலையும் ஏற்படுத்தி விட்டது.
இதுகுறித்து தே.மு.தி.க. வட்டாரத்தில் கூறப்படுவதாவது: சுதீஷுக்கு எதிராக வெங்கடேசன் இளங்கோவன் முருகேசன் ஆகியோர் கோஷ்டி அரசியல் செய்து வருகின்றனர். தி.மு.க.விடம் கூட்டணி பேசுவதாக கூறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி விட்டனர். துரைமுருகன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சுதீஷை மொபைல் போனில் அழைத்து துரைமுருகனிடம் பேச செய்து அவரையும் மாட்டி விட்டுள்ளனர்.
இதனால் மாவட்ட செயலர்கள் இரு பிரிவாக உள்ளனர். சுதீஷ் ஆதரவாளர்கள் தனி அணியாகவும் வெங்கடேசன் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட ஆரம்பித்துள்ளனர். சிகிச்சை முடிந்து ஆறு மாதம் ஓய்வெடுக்க வேண்டிய விஜயகாந்த் இந்த நெருக்கடியால் நிம்மதி இழந்துள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. மறந்து போன பழைய வசனம்!
தே.மு.தி.க.வை துவங்கிய பின் ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் பேசிய வசனங்கள்:
* 2006 சட்டசபை தேர்தல்: மக்களுடனும் தெய்வத்துடனும் தான் கூட்டணி. மாநிலத்தில் ஊழலையும் வறுமையையும் ஒழிப்பேன்; நல்லாட்சியை தருவேன்
* 2009 லோக்சபா தேர்தல்:என் தொண்டர்களின் தன்மானத்தை எந்த கட்சியிடமும் அடகு வைக்க மாட்டேன். தொண்டர்களை தங்க தட்டில் வைத்து தாலாட்டுவேன்
* 2011 சட்டசபை தேர்தல்:என் அரசியல் வழிகாட்டி எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி வைத்துள்ளேன். தி.மு.க. ஊழல் கட்சி. தி.மு.க. தலைவர் கருணாநிதி 'தான் ஊழலுக்கு நெருப்பு என்கிறார்; அவர் ஊழலுக்கு நெருப்பு அல்ல; பொறுப்பு'
* 2014 லோக்சபா தேர்தல்: அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து தமிழகத்தை சீரழித்து விட்டன. மோடியை பிரதமராக்க பா.ஜ. கூட்டணிக்கு நான் ஓட்டு கேட்கிறேன். சட்டசபை தேர்தலில் என்னை முதல்வராக தேர்ந்தெடுக்க இவர்களுடன் ஓட்டு கேட்டு மீண்டும் வருவேன்
* 2016 சட்டசபை தேர்தல்: அ.தி.மு.க. - தி.மு.க.விற்கு ஓட்டு போட்டு மக்கள் ஏமாற்றம் அடைந்து விட்டனர். மாற்றத்தை எங்களிடம்மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே மக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு.தி.க. சேர்ந்து உள்ளது
* 2019 லோக்சபா தேர்தல்: உடல் நல பாதிப்பால் கூட்டணி தொடர்பாக எதுவும்பேச முடியாத நிலையில் விஜயகாந்த் உள்ளார்.
No comments:
Post a Comment