கேள்வி: எத்தனை தொகுதியிலே பணம் கட்டியிருக்கீங்க?
பதில்: தளபதி, உதயநிதி தளபதி, சபரீசன், கனிமொழி, தயாநிதின்னு கழகக் குடும்ப உறுப்பினர்கள் 35 பேருக்கு கட்டியிருக்கேங்க. என் அளவு யாரும் கட்டலை. கட்சியிலே எனக்கு அவ்வளவு ஈடுபாடு.
கே: என்ன படிச்சிருக்கீங்க?
ப: முரசொலி தினமும் படிக்கிறேனுங்க. ‘நெஞ்சீக்கு நீதி’யும் படிச்சிருக்கேன். மற்றபடி, அந்த காலத்திலே ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே கலந்துகிட்டு, எட்டாவதோடு படிப்பை நிறுத்தி உருப்படாமப் போயிட்டதாலே, நேரா அரசியலுக்கு வந்துட்டேன். நாமதான் படிக்கலை, மத்தியிலே ஒரு கல்வி மந்திரியாவது ஆகலாமேன்னு ஒரு ஆசைங்க.
கே: கழகக் கொள்கை என்னன்னு தெரியுமா?
ப: அண்ணா காலத்திலே, ‘அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு’தான் கொள்கையா இருந்தது. கலைஞர் காலத்திலே, மாநில சுயாட்சி, தனி ஈழம், டெசோன்னு மாறிசசு. இப்ப, மோடி கிட்டேயிருந்து இந்தியாவை மீட்டு கலைஞர் சமாதியிலே வெக்கறதும், பா.ஜ.க. கையிலேர்ந்து ஜனநாயகத்தைக் காப்பாத்தி, ராஹுல் கையிலே கொடுக்கிறதும்தான் கொள்கை. தேர்தலுக்குப் பிறகு என்ன கொள்கைன்னு இப்ப சொல்ல முடியாதுங்க.
கே: அரசியல் தெரியுமா?
ப: தெரியும்ங்க. பரோட்டா கடை, பிரியாணி கடை, டாஸ்மாக் கடையிலே எல்லாம் அட்டாக் பண்ணப்போ, எல்லா பேப்பர்லேயும் என் பேர் வந்தது. அப்படியே அரசியல்லே ஃபேமஸ் ஆயிட்டேன்.
கே: எவ்வளவு செலவு பண்ண முடியும்?
ப: எவ்வளவு வேணாலும் பண்ண முடியும். எந்தத் தேர்தல்லேயும் மாட்டினதில்லை. ஆனால், சட்டத்தை மதிச்சு, தேர்தல் கமிஷன் நிர்ணயிச்ச தொகைக்கு ஒரு ரூபா கம்மியாத்தான் கணக்கு காட்டுவேன். இதுக்காகவே எக்கச்சக்கமா சம்பளம் குடுத்து தனி ஆடிட்டரையே போட்டிருக்கேன்.
கே: ஏது அவ்வளவு பணம்?
ப: 25 வருஷமா ஒன்றியச் செயலாளர், கவுன்ஸிலர்னு மக்கள் பணி ஆற்றிருக்கேனுங்களே. ஆனா என் மேலே எந்த ஊழல் வழக்கும் இல்லை. அவ்வளவு நேக்கா வேலை செய்வேன்.
கே: நம்ம கூட்டணி ஜெயிச்சா யார் பிரதமர்னு தெரியுமா?
ப: தளபதி யாரை கை காட்டறாரோ, அவரைத் தாங்க ஜனாதிபதி பிரதமரா நியமிப்பாரு. இதுவரைக்கும் கலைஞர் கைகாட்டி 12 ஜனாதிபதி, 18 பிரதமர் வந்திருக்காங்க. இம்ரான் கான் பிரதமரானதுக்கே கலைஞருக்கு கிரிக்கெட் மேலே இருந்த ஆர்வம்தான் காரணம். இந்தவாட்டி அநேகமா ராஹுலைத்தான் தளபதி கை காட்டுவார். தவறினா, மம்தா, மாயாவதி, தேவ கௌடான்னு யாருக்கு சான்ஸ் அடிக்குதோ அவரை கை காட்டுவாரு.
கே: ஒருவேளை பா.ஜ.க.வே அதிக இடங்களைப் பிடிச்சுட்டா?
ப: அப்போ மோடியைத் தவிர வேறே யாரையாவது தளபதி கை காட்டுவாரு. மீறி மோடியே வர்ற மாதிரி இருந்தா நாட்டு நலனுக்காக தளபதி அவரை கை காட்டிட்டு, ஒரு அஞ்சாறு மந்திரி பதவி வாங்கிடலாம். தி.மு.க. இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காதுன்னு சி.எஸ்.ஸே சொல்லியிருக்காரே.
கே: தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே சேக்கறதுக்கு நல்லதா ஒரு யோசனை சொல்லுங்க, பாக்கலாம்.
ப: தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், குடும்பத்துக்கு ஒரு ஏ.டி.எம். கார்டு தரப்படும்னு சொல்லலாம்ங்க. நம்பறவங்க ஓட்டு விழும் இல்லே!
கே: வெக்கம் மானம் இல்லாம வைகோவை சேத்துக்கிட்டீங்கன்னு, அ.தி.மு.க. பேசினா எப்படி பதிலடி கொடுப்பீங்க?
ப: வைகோவை நாமா சேத்துகிட்டோம்? அவர்தானே வெக்கம் மானம் இல்லாம சேர்ந்தாரு? நாம ஏன் பதில் தரணும்?
கே: அட இருக்கட்டும்யா. நாம சேர்த்துக்கிட்டோம்ன்றதும் உண்மைதானே? பதில் சொல்ல வேண்டிய கடமை நமக்கும் இருக்குதில்லே?
ப: பொடாவிலே வைகோ ஜெயில்லே இருந்தப்போ, கலைஞர் போய் பார்த்து கண்ணீர் விட்டாருன்றதுதாங்க வரலாறு. அந்த பாசம் திடீர்னு ஞாபகத்துக்கு வந்ததும் பழையபடி நண்பர்களாயிட்டோம். நட்பை கொச்சைப்படுத்தாதீங்கன்னு பதில் சொல்லிக்கலாம்.
கே: ஒருவேளை வைகோவுக்கும், நமக்கும் ஸீட் பிரச்னையிலே தகராறு வந்து, வழக்கப்படி அவர் வெளியே போயிட்டா?
ப: அப்ப மறுபடியும் மாத்திக்கலாம்ங்க. மக்கள் நலக் கூட்டணி அமைத்து, தி.மு.க. ஆட்சியை வரவிடாமல் தடுத்த துரோகிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு, நாங்கள் வெட்கம் மானம் அற்றுப் போய்விடவில்லைன்னு வீரமா பதில் சொல்லலாம்.
கே: இலங்கைப் பிரச்னை சம்பந்தமா கேள்வி வந்தா எப்படிப் பேசணும்னு தெரியுமா?
ப: இலங்கைப் பிரச்னையிலே கலைஞரோட அத்தனை கொள்கைகளையும் நெட்டுரு பண்ணி வெச்சிருக்கேனுங்க. எல்லாத்தையும் கலந்து ஒரு முக்கா மணி நேரத்துக்கு பதில் சொன்னா, அவங்களே கன்ஃபூஸ் ஆகி வேற மேட்டருக்கு போயிடுவாங்க.
கே: தி.மு.க.வின் குறிப்பிடத்தக்க சாதனையா எதை நினைக்கிறீங்க?
ப: நாலஞ்சு தடவை ஆட்சி செஞ்ச பிறகும், நம்ம ஓட்டு வங்கியிலே இன்னும் மினிமம் பேலன்ஸ் இருக்குதே. அதாங்க பெரிய சாதனை.
கே: ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ பலன் பா.ஜ.க.வுக்குப் போய்விடாமல் தடுக்க, எப்படி தேர்தல்லே பிரச்சாரம் செய்வீங்க? பேசிக் காட்டுங்க பார்க்கலாம்.
ப: ‘தேர்தலுக்காகத்தான் மோடி இந்த ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். உண்மையில் சர்ஜிகல் ஸ்டிரைக் நடக்கவே இல்லை. மோடியின் திறமைக்குறைவால்தான் புல்வாமாவில் நாற்பது இந்திய வீரர்களை பலி கொடுத்தோம். நமது விமானப்படை வீரமாகச் செல்பட்டு எல்லை தாண்டிச் சென்று பதிலடி கொடுத்ததற்கு, ஐ.மு.கூட்டணி ஆட்சியின்போது தரப்பட்ட பயிற்சிதான் காரணம். ஆனால், அப்படி ஒரு தாக்குதல் நடந்ததற்கு மோடி ஆதாரம் வழங்க வேண்டும். மோடியின் தவறுகளால் அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிக் கொண்டார். அவர் தமிழர் என்பதால்தான் மோடி திட்டமிட்டு தமிழனை பாகிஸ்தானுக்கு காட்டிக் கொடுத்து விட்டார். எனவே, தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்ற முடியாது. ஜெனிவா ஒப்பந்தப்படி, அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்ததே தவிர, இதற்கு மோடியின் ராஜதந்திரம் காரணமல்ல. மோடியைவிட இம்ரான்கான் நல்லவர், நம்பகமானவர் என்பது இந்த உலகத்துக்கே தெரியும். ஆகவே இந்த விவகாரத்தை மோடி அரசியலாக்கக் கூடாது’ - இந்த பாயின்ட்ஸ் போதுங்களா?
கே: அருமையா இருக்குதே. எதுக்கும் இதை தனிப் பேப்பர்லே எழுதிக் குடுத்துடுங்க. பிரச்சாரத் திலே தளபதி யூஸ் பண்ணிக்குவார். கட்சியிலே யாரையாவது தெரியுமா?
ப: என்ன அப்படிக் கேட்டுட்டீங்க? உதயநிதி ஸாரோட மாமாவின் சித்தப்பா சம்பந்தி வீட்டு கார் டிரைவரோட மச்சானுக்கு, என் சம்சாரத்தோட ஒண்ணு விட்ட தங்கச்சி பொண்ணைத்தான் குடுத்திருக்கோம்.
கே: ஹா! ஏன் ஸார், இவ்வளவு பெரிய இடம்னு மொதல்லேயே சொல்லியிருந்தா, இத்தனை கேள்வி கேட்டிருக்க மாட்டோமே? உங்களுக்கு ஸீட் கேரண்ட்டி. வேறே ஏதாவது சொல்லணுமா?
ப: வந்து... 21 சட்டசபைத் தொகுதி தேர்தல் நடந்தா, என் பையனுக்கு ஒரு எம்.எல்.ஏ. ஸீட் குடுங்கய்யா. ‘தந்தை மகற்காற்றும் உதவி’ன்னு வள்ளுவரே சொல்லியிருக்காரு. நான் வள்ளுவர் வழியிலே நடக்கிறவன்.
No comments:
Post a Comment