Thursday, July 18, 2019

ஓ.எம்.ஆரில் விதிமீறி சட்டவிரோதமாக இயங்கும் 250 விடுதிகள்! ஆளுங்கட்சியினர், அரசியல்வாதிகளுக்கு சொந்தம்நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு மிரட்டல்.

சோழிங்கநல்லுார்: ஐ.டி., நிறுவனங்களை மையப்படுத்தி, ஐ.டி., காரிடார் எனப்படும், ஓ.எம்.ஆரில் உள்ள, 300க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில், 250க்கும் மேற்பட்ட விடுதிகள், சட்ட விரோதமாக செயல்படுவதாக, சுகாதாரத் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சோழிங்கநல்லுார் மண்டலம், 193, 194, 195, 197 மற்றும் 200வது வார்டுகள், ஐ.டி., காரிடார் எனப்படும், ஓ.எம்.ஆர்., பகுதிகளை உள்ளடக்கியவை.துரைப்பாக்கம் முதல், செம்மஞ்சேரி வரை உள்ள, 10 கி.மீ., துாரம் கொண்ட இந்த சாலை பகுதியில், 200க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்களும், 300க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும் உள்ளன.தமிழகத்தின், இதர மாவட்டம் மற்றும் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், ஐ.டி., நிறுவனங்களில் பணி புரிகின்றனர். இவர்களில், பெரும்பாலானோர், விடுதிகளில் தங்கி உள்ளனர்.இந்த வகையில், ஓ.எம்.ஆரில், 300க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் விடுதிகள் உள்ளன. இதில், பெண்கள் விடுதிகள் தான் அதிகம். இங்கு, நபர் ஒருவருக்கு, 4,000 - 10,000 வரை, மாத கட்டணம் வசூலிக்கப்படுகிறது.மொத்த விடுதிகளில், 50க்கும் குறைவான விடுதிகள் தான், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, முறையாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

மாநகராட்சி, வருவாய்த் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை மற்றும் தீயணைப்புத் துறையிடம், உரிய அனுமதி பெறாமல், 250க்கும் மேற்பட்ட விடுதிகள் செயல்படுவதாக, சுகாதாரத் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.பெயர் பலகை வைக்காமல், வீடுகளிலும், பல விடுதிகள் செயல்படுகின்றன. கட்டட உறுதித்தன்மை சான்று, தீயணைப்பு சான்று, வரியின் தன்மை அடிப்படையில், சுகாதார சான்று வழங்கப்படுகிறது.ஆனால், பல கட்டடங்கள், மாநகராட்சி விதிப்படி கட்டவில்லை என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. காற்றோட்ட வசதி, அவசர வழி, தீயணைப்பான் கருவி உள்ளிட்ட வசதிகளும் இல்லை.

மேலும், 150க்கும் மேற்பட்ட விடுதிகளில், முறையான சுகாதார கட்டமைப்பு வசதிகள் அமைக்கவில்லை. முறைகேடான விடுதிகளில், பெரும்பாலானவை, அரசியல்வாதிகள், அரசு ஊழியர்களுக்கு சொந்தமாக உள்ளன.இதனால், நடவடிக்கை எடுப்பதில், பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சமீபத்தில், ஓ.எம்.ஆரில் உள்ள, 80 சதவீதம் விடுதிகளை ஆய்வு செய்தோம். மாநகராட்சி விதிப்படி, விடுதிகளை கட்டாததுடன், ஆபத்து நேரிடும் வகையிலான பல அம்சங்கள், விடுதிகளில் உள்ளன. பல விடுதிகள், குறுகலான இடத்தில் செயல்படுவதால், அங்கு சுகாதார பாதிப்பு ஏற்பட, அதிக வாய்ப்புள்ளது. நடவடிக்கை எடுக்க முயன்றால், அடுத்த சில நிமிடத்தில், கட்சிக்காரர்கள், சில உயர் அதிகாரிகளிடம் இருந்து அழைப்பு வருகிறது. அதையும் மீறி நடவடிக்கை எடுத்தால், மிரட்டப்படுகிறோம். எங்கள் மேல் அதிகாரிகளும், எங்களுக்கு உறுதுணையாக இருப்பதில்லை. விடுதிகளில், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தாவிட்டால், தொற்று நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.சுகாதாரத் துறை அதிகாரிகள்மாநகராட்சி வழங்கிய அனுமதி அடிப்படையில், கட்டடத்தை ஆய்வு செய்து, சான்று வழங்குகிறோம். ஓ.எம்.ஆரில், பல விடுதிகளுக்கு, முறையான ஆவணங்கள் இல்லை.

இதனால், விண்ணப்பங்களை திருப்பி அனுப்புகிறோம். 50 சதவீதத்திற்கும் குறைவான விடுதி களுக்கு தான், தீயணைப்பு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால், யார் பொறுப்பு என்ற கேள்வி உள்ளது. முறைகேடான விடுதிகள் மீது, நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.தீயணைப்புத் துறை அதிகாரிகள்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...