Monday, July 8, 2019

ராஜ்யசபா தேர்தல் விவகாரம் வைகோ முடிவால் ம.தி.மு.க., கொந்தளிப்பு

ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., சார்பில், நான்காவது வேட்பாளராக, வழக்கறிஞர், என்.ஆர்.இளங்கோ மனுத் தாக்கல் செய்த விவகாரம், ம.தி.மு.க.,வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
வைகோ,ராஜ்யசபா,  மதிமுக , கொந்தளிப்பு, எம்.பி.,க்கள்

ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு, அ.தி.மு.க., - தி.மு.க., சார்பில், தலா, இரண்டு பேர்; பா.ம.க., - ம.தி.மு.க., சார்பில், தலா, ஒருவர் என, போட்டியின்றி தேர்ந்தெடுக்கும் விதமாக, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனுக்கள் மீது, இன்று பரிசீலனை நடக்கிறது.
சிறை தண்டணை:

இதற்கிடையில், தேசத் துரோக வழக்கில், வைகோவுக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை கிடைத்ததால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதனால், முன்னெச்சரிக்கையாக, அவருக்கு பதிலாக, மற்றொரு வேட்பாளரை நிறுத்த, தி.மு.க., திட்டமிட்டது. இதுதொடர்பாக, வைகோவும், ஸ்டாலினும் ஆலோசித்தனர். இதையடுத்து, தி.மு.க., சார்பில், மூத்த வழக்கறிஞர், என்.ஆர்.இளங்கோ, நேற்று, நான்காவது வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டால், வரும், 11ல், என்.ஆர்.இளங்கோ, தன் வேட்புமனுவை வாபஸ் பெற்று விடுவார். வைகோ வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், என்.ஆர்.இளங்கோ, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுவார். வைகோ மனு நிராகரிக்கப்படுமானால், அவரது பதவியை, ம.தி.மு.க.,வில், யாராவது ஒருவருக்கு கிடைக்கும் வகையில், வைகோ செய்திருக்க வேண்டும். ஆனால், தனக்கு மட்டுமே, ராஜ்யசபா எம்.பி., பதவி தருவதற்கு, ஸ்டாலின் சம்மதித்தார் என, வைகோ அளித்த விளக்கம், ம.தி.மு.க.,வினரை குமுற செய்துள்ளது. 'இது, ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட பதவி தானே; அதை, எப்படி, தி.மு.க.,வுக்கு விட்டு கொடுக்கலாம்' என, வைகோ மீது, அவரது கட்சியினர் ஆத்திரப்படுகின்றனர்.

இரட்டை நிலைபாடு:

இது குறித்து, ம.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: 'ராஜ்யசபா தேர்தலில், யார் போட்டியிட போகின்றனர்' என, வைகோவிடம், நிருபர்கள் கேட்டபோது, 'கட்சியின் ஆட்சிமன்றக் குழு முடிவு செய்யும்' என்றார். ஆனால், தற்போது வைகோ, 'எனக்காக தான், ஸ்டாலின் இப்பதவியை தந்தார்' என்கிறார். வைகோவின் இரட்டை நிலைப்பாட்டை, ம.தி.மு.க.,வினரால், ஜீரணிக்க முடியவில்லை. தனக்கு எம்.பி., பதவி கிடைக்கவில்லை என்றால், தன் கட்சியில், வேறு யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்ற, சுயநல மனோபாவம் தான், வைகோவிடம் இருக்கிறது.
குழப்பம்:

அதனால் தான், ஸ்டாலினிடம், தன் கட்சி நிர்வாகிகளுக்காக, அவர் பேசவில்லை. தன்னை, போராட்ட குணம் கொண்ட தலைவராக காட்டிக் கொள்ளும் வைகோ, தன் கட்சியினருக்காக, ஸ்டாலினிடம், ஏன் போராடவில்லை? வைகோவை தவிர, ராஜ்யசபாவில் பேசுவதற்கு, தகுதியானவர் எவருமே, கட்சியில் இல்லையா; கட்சிக்காக உழைத்து, ஓடாய் போனவர்கள் யாருமே இல்லையா என்ற கேள்விகளை, வைகோவுக்கு எதிராக எழுப்புகின்றனர். ஒருவேளை, வைகோ மனு நிராகரிக்கப்பட்டு, இளங்கோ எம்.பி.,யாகும் நிலைமை ஏற்பட்டால், ம.தி.மு.க.,வில் பெரும் குழப்பம் வெடிக்கும் என்பது உறுதி. இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
விட்டு கொடுத்தது ஏன்?
ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ, திண்டுக்கல்லில் நேற்று, அளித்த பேட்டி: ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், என்னிடம், 'உங்களுக்காக மட்டுமே, எம்.பி., பதவி வழங்கப்படும்' என்றார். ம.தி.மு.க., தொண்டர்களின் விருப்பத்தோடு, அதை ஏற்று கொண்டேன். இல்லையேல், பேச்சு வேறு விதமாக செல்வதற்கான வாய்ப்பு இருந்தது. இது, எழுதப்படாத ஒப்பந்தம்; லோக்சபா தேர்தல் ஒப்பந்தத்தில், இதை குறிப்பிடவில்லை. தேச துரோக குற்றச்சாட்டில், என் மீது தண்டனை வராது என, நம்பினேன். சுதந்திரத்திற்கு பின், இன்று வரை, இந்தியாவில், இந்த சட்டப்பிரிவின் கீழ், யாரும் தண்டிக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டிக்கப்பட்டால், தேர்தலில் போட்டியிட முடியாது. அதனால், என் மனு, நிச்சயம் ஏற்று கொள்ளப்படும் என, நம்புகிறேன். இருந்த போதும், 'நான் தண்டிக்கப்பட்டு, போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், மாற்று ஏற்பாட்டை செய்து கொள்ளுங்கள்' என, நான்தான் ஸ்டாலினிடம் வலியுறுத்தினேன். அதனால், தி.மு.க., சார்பில், என்.ஆர். இளங்கோவை, வேட்பு மனுத் தாக்கல் செய்ய வைத்துள்ளனர். என் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால், என்.ஆர்.இளங்கோ மனுவை திரும்ப பெற்று கொள்வார் என, சொல்லப்பட்டுள்ளது. தேவையற்ற விவாதங்களுக்கு, ம.தி.மு.க., தொண்டர்கள் இடம் கொடுக்கக் கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...