Monday, October 7, 2019

கைவிட்டு போகுமோ!: இளையராஜா கண்ணீர்!

பிரசாத் ஸ்டுடியோவில் இளையாராஜா இசைமையக்க, ஸ்டுடியோ இயக்குநர் சாய் பிரசாத் இடையூறு செய்வதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இளையராஜாவின் உதவியாளர் புகார் அளித்துள்ளார்.
இதன் பின்னணி குறித்து திரையுலக வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:
இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோவுக்குமான பந்தம் 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது. இந்த ஸ்டுடியோவுக்கு இளையராஜா வந்ததன் பின்னணி பல நெகிழ்வான சம்பவங்களைக் கொண்டது.
1980களின் ஆரம்பத்தில் பெரும்பாலும் ஏவி.எம்.ஸ்டுடியோ, பிரசாத் ஸ்டுடியோ, கோதண்டபாணி ஸ்டுடியோ ஆகியவற்றில்தான் தனது பாடல்களை பதிவு செய்து வந்தார் இளையாராஜா.
ஒருமுறை ஏவி.எம். ஸ்டுடியோவில் அரசியல் தலைவர் ஒருவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. அதற்கு இளையராஜாவும் அழைக்கப்பட்டிருந்தார்.
நிகழ்ச்சிக்கு சென்ற இளையராஜாவை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, “வாயிலிலேயே காரை நிறுத்திவிட்டு நடந்து செல்லுங்கள்” என்றனர் காவலர்கள்.
இதனால் அதிர்ச்சியான இளையராஜா, “இது நான் வாழும் இடம். நான் நடந்து செல்ல வேண்டுமா?” என்றவர், அந்நிகழ்ச்சையை புறக்கணத்து திரும்பினார்.
அப்போதுதான் தனக்கென ஒரு ஸ்டுடியோவை உருவாக்க நினைத்தார். இதற்காக வெளிநாட்டில் இருந்து பல புதிய இசைக்கருவிகளை தருவித்தார். ஆனால் சென்னை விமான நிலையத்தில் அந்தக் கருவிகளுக்கு பல மடங்கு அதிகமாக சுங்கக்கட்டணம் கட்டுமாறு கூறப்பட்டது. இளையராஜாவுக்கு நெருக்கமானவர்கள், “அதிகாரத்தில் உள்ளவர்களை தொடர்புகொள்ளுங்கள். இப்பிரச்னை தீரும்” என்றனர்.
ஆனால் தனக்கா யாரிடமும் கோரிக்கை வைக்க விரும்பாத இளையராஜா, விலை மதிப்பு மிக்க அக்கருவிகளை விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு சோகத்துடன் வீடு திரும்பினார்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட பிரசாத் ஸ்டுடியோ அதிபர் எல்.வி.பிரசாத், இளையராஜாவை சந்தித்து, “இனி எனது பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு அரங்கத்தை உங்களுக்காக ஒதுக்குகிறேன். இனி அது உங்களது அரங்கம்” என்று உரிமையேடு கட்டளையிட்டார்.
தனது இறுதிக்காலத்தில் தனது மகன்களிடும், “இளையராஜா வாழும்வரை அந்த ஸ்டுடியோ அரங்கு அவருக்குத்தான். அவருக்கு யாரும் எந்தவித இடையூறும் தரக்கூடாது” என்றார்.
காலம் உருண்டோடியது. இளையராஜா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்தன. தவிர டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட சூழலில், பழமையான பிரமாண்ட ஸ்டுடியோக்களை நிர்வகிக்க பெரும் பணம் செலவழிக்க வேண்டியிருந்தது. ஆகவே ஸ்டுடியோவை நவீனமாக மாற்ற நினைத்த நிர்வாகம், தனது ஆடியோ பிரிவை மூடிவிட தீர்மானித்தது.
இது குறித்து இளையராஜாவிடம் சொல்லப்பட, அவரோ, “இது என் தாய்வீடு போல ஆகிவிட்டது. நான் இருக்கும்வரை இங்கேயே இசைமயைக்க விரும்புகிறேன். இதற்கான செலவை நான் ஏற்கிறேன்” என்றார்.
அவரது இசைப்பயணம் பிரசாத் ஸ்டுடியோவில் தொடர்ந்தது.
இந்நிலையில்தான் பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஸ்டுடியோ 1 அரங்கத்தில் அனுமதி இன்றி பொருட்களை கொண்டுவந்து வைத்து இசையமைக்க இடையூறு செய்வதாக பிரசாஸ் ஸ்டுடியோவின் தற்போதைய இயக்குநர் சாய் பிரசாத் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இது இளையராஜாவுக்கு பெரும் வேதனையை அளித்தது. காரணம், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது ஸ்டுடியோ 1 அரங்கத்தை உயிரில்லா வெறும் கட்டிடமாக அவர் பார்க்கவில்லை. அதன் ஒவ்வொரு சுவரும், சுவரின் செங்கற்களும் அவருக்கு நெருக்கமானவை. மானசீகமாக அவற்றுடன் பேசுவார்; அவையும் பேசும்.
நம் மனக்கவலைகளைப் போக்கும் மாமருந்தாக பல மெட்டுகளை இளையராஜா உருவாக்கியது அங்குதான். பல இசையமைப்பாளர்கள் இசை கோர்ப்புக்காக வெளிநாடுகளுக்கு பறந்தபோதும், அவர் பிரசாத் ஸ்டுடியோவில்தான் தன் இசைத்தவத்தை தொடர்கிறார்.
திரைப்பாடல்களோடு, சிம்பொனி இசையையும் இங்குதான் அமைத்தார்.
அவர் பிறந்தநாளின் போது பிரசாத் ஸ்டூடியோ திருவிழா கோலத்தில் இருக்கும். பாமரர்கள் முதல் பிரபலங்கள் வரையிலான இளையராஜாவின் ரசிகர்கள் இங்கு கூடி இளையராஜாவை வாழ்த்துவார்கள்.
தன்னைவிட இந்த இசைக்கூடத்தை அதிகமாக நேசிக்கிறார் இளையராஜா. அங்கிருந்து தான் விரட்டப்படுவோமோ என்ற அதிர்ச்சியில் கண்ணீர்விட்டு அழுதுவிட்டார்.
இளையராஜா தனது இசையினால் நம்மை மகிழ வைத்திருக்கிறார், நெகிழ வைத்திருக்கிறார், அழ வைத்திருக்கிறார்!
அவரை அழ வைப்பது நியாயமல்ல!
- என்றனர் நம்மிடம் பேசியவர்கள்.
ஏதோ ஒரு தேநீர் கடையில் இருந்து இளையராஜாவின் பாடல் ஒன்று காற்றில் அலைந்து வருகிறது…
“யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்...”

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...