Monday, March 9, 2020

ராஜ்யசபா எம்.பி., பதவி ஒதுக்கப்பட்ட வாசனுக்கு இன்ப அதிர்ச்சி: மற்ற 2 இடங்களுக்கு தம்பிதுரை, முனுசாமி.

அ.தி.மு.க. தயவில் ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைத்துள்ளதால் வாசனும் அவரது கட்சியினரும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாத த.மா.கா.,வுக்கு அ.தி.மு.க. திடீர் அங்கீகாரம் அளித்துள்ளது.

மற்ற இரு பதவிகளை தங்கள் கட்சியைச் சேர்ந்த சீனியர்களான தம்பிதுரை, முனுசாமிக்கு அளித்துள்ளனர். கடைசி வரை முட்டி மோதிய மற்றொரு கூட்டணி கட்சியான தே.மு.தி.க. ஏமாற்றம் அடைந்துள்ளது. தமிழகத்தில் இருந்து ஆறு ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க. - தி.மு.க. சார்பில் தலா மூன்று எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ராஜ்யசபா, வாசன், அதிமுக, தேர்தல், இன்ப_அதிர்ச்சி, வேட்பு_மனு

தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.பி. சிவா, முன்னாள் அமைச்சர் செல்வராஜ், வழக்கறிஞர் இளங்கோ ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நிலவியது. முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் எம்.பி.க்கள் என பலரும் 'சீட்' கேட்டனர். இதன் காரணமாக யாருக்கு பதவி என்பதை முடிவு செய்ய முடியாமல் அ.தி.மு.க. தலைமை திணறியது.

இதற்கிடையில் கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க. - த.மா.கா. மற்றும் புதிய நீதிக் கட்சி தரப்பிலும் எம்.பி. பதவி கேட்கப்பட்டது. இதில் த.மா.கா., தலைவர் வாசனுக்கு சீட் வழங்கும்படி பா.ஜ. மேலிடம் பரிந்துரை செய்தது. எனவே அவருக்கு மட்டும் வாய்ப்பு வழங்க வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டது. அதனால் தே.மு.தி.க., புதிய நீதி கட்சிகளுக்கு வாய்ப்பு தர மறுத்து விட்டது.

அ.தி.மு.க. சார்பில் துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி; கொள்கை பரப்பு செயலரும் முன்னாள் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை; த.மா.கா. தலைவர் வாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் கே.பி.முனுசாமி 67, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர். ஒரு முறை கிருஷ்ணகிரி லோக்சபா எம்.பி.யாக இருந்துள்ளார். மூன்று முறை எம்.எல்.ஏ.வாகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போது முதல் முறையாக ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார்.

அதே மாவட்டத்தைச் சேர்ந்த தம்பிதுரை 72, இரு முறை கரூர் லோக்சபா எம்.பி.யாக இருந்தார். 2014ல் லோக்சபா துணை சபாநாயகராக இருந்தார். 2019 தேர்தலில் கரூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். த.மா.கா. தலைவர் வாசன் 56, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி த.மா.கா.வை நடத்தி வருகிறார். இரு முறை ராஜ்யசபா எம்.பி.யாகவும் ஒரு முறை மத்திய அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது அ.தி.மு.க. உதவியுடன் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

தோல்வியை தழுவியவர்கள்
கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகிய இருவரும் 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்கள். அவர்களுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்பட்டது கட்சியில் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தோரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட சிலருக்கே மீண்டும் மீண்டும் பதவி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதுமுகங்களுக்கும் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அரசுக்கு உறுதுணை!
வாசன் அறிக்கை: த.மா.கா.,வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. ஒதுக்கிய அ.தி.மு.க.வுக்கு நன்றி. த.மா.கா. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நான் தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் உறுதுணையாக செயல்படுவேன். மக்கள் பணியாற்ற அளிக்கப்பட்டுள்ள இந்த நல்ல வாய்ப்பை த.மா.கா., முழுமையாக பயன்படுத்தும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தே.மு.தி.க. ஏமாற்றம்!
அ.தி.மு.க. ஒதுக்கீட்டில் ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை தே.மு.தி.க. எதிர்பார்த்தது. இதற்காக முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மைத்துனரும் அக்கட்சியின் துணை செயலருமான சுதீஷ் பேசினார். 'கூட்டணி தர்மத்தின்படி எங்களுக்கு ராஜ்யசபா பதவி கிடைக்கும்' என விஜயகாந்த் மனைவி பிரேமலதா நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் வாசனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதால் தே.மு.தி.க,. தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஓட்டுப்பதிவுக்கு வாய்ப்பில்லை



ராஜ்யசபா தேர்தலில் ஆறு எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. சட்டசபையில் தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க.. - தி.மு.க.. சார்பில் தலா மூன்று எம்.பி..க்களை தேர்வு செய்ய முடியும். கூடுதலாக வேட்பாளர்களை களம் இறக்கினால் மட்டுமே மார்ச் 26ல் தேர்தல் நடக்கும். இல்லையெனில் ஆறு எம்.பி..க்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவர். தற்போது தி.மு.க.. சார்பில் மூன்று பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க.. சார்பிலும் மூன்று பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. கடந்த 6ம் தேதி துவங்கிய வேட்பு மனு தாக்கல் மார்ச் 13ல் நிறைவடைகிறது. வேட்பு மனுவை வாபஸ் பெற மார்ச் 16ம் தேதி கடைசி நாள் என்பதால் அன்று முடிவு தெரிந்து விடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...