Tuesday, March 10, 2020

ம.பியில் 22 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா; ஆட்சி கவிழ்கிறது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் ராஜினாமா செய்துள்ளதையடுத்து மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.





மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங். ஆட்சி நடக்கிறது. மொத்தம் 230 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபைக்கு 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களிலும், பா.ஜ. 109 இடங்களிலும் வென்றன. தனிப்பெரும்பான்மைக்கு இரண்டு இடங்கள் தேவைப்பட்ட நிலையில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் பொதுச் செயலருமான ஜோதிராதித்ய சிந்தியா 49 முதல்வர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் கமல்நாத் முதல்வரானதால் அதிருப்தி அடைந்தார்.





லோக்சபாவுக்கு கடந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில் குணா தொகுதியில் போட்டியிட்டு ஜோதிராதித்ய சிந்தியா படுதோல்வியடைந்தார். அது முதல் கட்சி பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்தார். மத்திய பிரதேசத்தில் மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26ல் நடக்க உள்ளது. இதில் காங்கிரசும் பா.ஜ.வும் தலா ஒரு இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. மூன்றாவது இடத்தை கைப்பற்றுவதில் காங்கிரசும் பா.ஜ.வும் தீவிரமாக உள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் தங்கள் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ. கடத்தியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதை பா.ஜ. மறுத்தது. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் சிலர் திரும்பி வந்தனர். 'தங்களை பா.ஜ. கடத்தவில்லை' என அவர்கள் தெரிவித்தனர்.


இதையடுத்து நேற்று முன்தினம் ஜோதிராதித்ய சிந்தியா அவரது ஆதரவு அமைச்சர்கள் ஆறு பேர் உட்பட 16 எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க டில்லி சென்றிருந்த கட்சியும் அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டடது. கட்சியிலிருந்து சிந்தியா வெளியேறிய நிலையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இதில் ஆறு பேர் அமைச்சர்கள். தங்கள் ராஜினாமா கடிதங்களை கவர்னர் லால் ஜி டாண்டனுக்கும் சபாநாயகர் பிஷாகுலால் சிங்குக்கும் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.



இதையடுத்து மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்தது. மொத்தமுள்ள 230 இடங்களில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததையடுத்து காங்கிரசின் பலம் 92 ஆக குறைந்துள்ளது. எம்எல்.ஏ.க்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால் சட்டசபையின் பலம் 206 ஆகி விடும். அப்போது பெரும்பான்மைக்கு 104 இடங்கள் தேவை. சமாஜ்வாதி பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவு நீடித்தாலும் காங்கிரசால் 106 இடங்களை எட்ட முடியாது. இதனால் மத்திய பிரதேசத்தில் கமல்நாத் அரசு கவிழ்வது உறுதியாகியுள்ளது. இதற்கிடையில் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கூறி ஆறு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய கவர்னர் டாண்டனுக்கு முதல்வர் கமல்நாத் கடிதம் எழுதியுள்ளார்.




மன்னர் குடும்ப வாரிசு

காங். கிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா 1971 ஜன. 1ல் மும்பையில் பிறந்தார். இவரது தந்தை மாதவராவ் சிந்தியா முன்னாள் காங். மத்திய அமைச்சர். இவரது தாத்தா குவாலியர் மன்னர் ஜிவாஜிராவ் சிந்தியா. இவரது அத்தை வசுந்தரா ராஜே சிந்தியா பா.ஜ. சார்பில் ராஜஸ்தான் முதல்வராக இருந்தார். ஜோதிராதித்யா பி.ஏ. பொருளாதாரம் மற்றும் எம்.பி.ஏ. முடித்துள்ளார். 2001ல் தந்தையின் மறைவுக்குப் பின் காங். கட்சியில் சேர்ந்தார். 2002ல் தந்தையின் குணா லோக்சபா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு 4.5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.



2004ல் மீண்டும் வென்ற இவர் 2007ல் மன்மோகன்சிங் அமைச்சரவையில் தொலைத்தொடர்பு மற்றும் ஐ.டி. துறை இணை அமைச்சரானார். 2009ல் வென்று மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சரானார். 2012ல் மின்சார துறை அமைச்சரானார். மன்மோகன் அமைச்சரவையில் பணக்கார அமைச்சராக திகழ்ந்தார். அப்போது இவரது சொத்து மதிப்பு ரூ. 25 கோடி. 2014ல் குணா தொகுதியில் நான்காவது முறையாக வென்றார். 2019ல் தோல்வியடைந்தார். 2018ல் ம.பி. தேர்தலில் காங். ஆட்சியில் அமர்வதற்கு முக்கிய பங்கு வகித்தார். 2019 ஜன. 23 - ஜூலை 7 வரை மேற்கு உ.பி. யின் காங். பொதுச்செயலராக பதவி வகித்தார். மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க தலைவராக பதவி வகித்துள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...