'முதல்வர் பதவியை ஏற்க மாட்டேன்; 50 வயதுக்கு உட்பட்டோருக்கு ஆட்சி பதவி; டெண்டர் கமிஷன் போன்றவற்றுக்கு இடமளிக்க மாட்டேன்; ஆட்சி செயல்பாட்டை தனிக் குழு கண்காணிக்கும்; இதுதான் என் அரசியல்' என மாவட்ட செயலர் கூட்டத்தில் நடிகர் ரஜினி தன் கொள்கையை வெளிப்படையாக அறிவித்தார். இதற்கு சம்மதம் என்றால் கட்சி துவக்குவதாக அவர் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

'தமிழகத்தில் 2021ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் கட்சி ஆரம்பித்து போட்டியிடுவேன்' என நடிகர் ரஜினி கூறியிருந்தார். 2017 ஆண்டு இறுதியில் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திய ரஜினி இதற்காக தன் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். ஏப்ரலில் கட்சி பெயரை அறிவிக்க இருந்த நிலையில் மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்டி 'கட்சி ஆரம்பித்தால் கட்சிக்கு மட்டுமே நான் தலைமை ஏற்பேன். ஆட்சிக்கு வேறு ஒருவர் தலைமையேற்று முதல்வர் பதவியேற்பார். கட்சியில் அதிக பதவிகள் இருக்காது. தேர்தலில் 50 வயதுக்கு உட்பட்டோருக்கு 65 சதவீதம் இடம் தரப்படும்' என்றார்.
இங்குள்ள 'சிஸ்டம்' மாறினால் எல்லாமே மாறும் என்பது ரஜினியின் எண்ணம். இது மாறாமல் அரசியலுக்கு வந்தால் ஓட்டுக்களை பிரிக்க மட்டுமே தானும் தன் கட்சியும் பயன்படும் என்பதை ரஜினி தெளிவாக உணர்ந்திருக்கிறார்; அதை தன் ரசிகர்களுக்கும் நேற்று உணர்த்தி இருக்கிறார். 'திறமையான கண்ணியமிக்க 50 வயதுக்கு உட்பட்டோருக்கு மட்டுமே 65 சதவீத பதவி' எனக் கூறிய ரஜினி அதற்கு முன்மாதிரியாக 71 வயதாகும் தனக்கு கட்சி பதவியை எடுத்துக் கொண்டு ஆட்சி அதிகாரப் பதவியை இளைஞருக்கு தரப் போவதாக கூறியிருக்கிறார்.
'பதவிக்காகவும் பணம் சம்பாதிக்கவும் என் கட்சிக்கு வராதீர்கள்' என ஏற்கனவே ரஜினி கூறியிருந்தார். அதிகப்படியான தேவையற்ற பதவிகளால் ஊழல் உருவாகிறது என்பதை மன்ற நிர்வாகிகளிடம் சுட்டிக்காட்டிய அவர் ஆட்சிக்கு வந்தால் 'டெண்டர் கமிஷன்' விவகாரத்தில் கட்சியினரின் தலையீட்டுக்கும் தடை போட்டுள்ளார்.
அதேநேரத்தில் ஆட்சித் தலைமையை கண்காணிக்க தனிக் குழு இருக்கும் என்பதால் ஆட்சி தலைமை நிஜமாகவே மக்களுக்கான தலைமையாக இருக்கும் என்றும் அவர் நம்புகிறார். 'மாற்றம் மக்களிடம் உருவாக வேண்டும்; அந்த மாற்றம் எழுச்சியாக மாற வேண்டும்; அது புரட்டியாக வெடிக்கும்போது நான் அரசியலில் இருப்பேன்' என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் ரஜினி.
'ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவி ஏற்க மாட்டேன்' என்ற ரஜினியின் அறிவிப்பு தமிழக அரசியலில் புது புரட்சிக்கு வித்திட்டுள்ளது. மற்ற கட்சிகளில் முதல்வர் பதவிக்கு முட்டி மோதும் தலைவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment