Wednesday, March 11, 2020

ஒவ்வொரு மாநிலமாக கழல்வதால் காங்., அச்சம்: கர்நாடகாவில் தலைவர் மாற்றம்.

கர்நாடகாவைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சி அச்சத்தில் உள்ளது. ஒவ்வொரு மாநிலமாக கழல்வதால் அதை தடுப்பதற்கான முயற்சிகளில் அக்கட்சி இறங்கியுள்ளது. உட்கட்சி பிரச்னை ஏற்பட்டுள்ள ராஜஸ்தான், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் குழப்பங்களை தீர்ப்பதற்கான நடவடிக்கை துவங்கியுள்ளது.

கடந்த 2014 லோக்சபா தேர்தலில் காங். தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களிலும் தோல்வி அடைந்தது. ஆறுதல் அளிக்கும் வகையில் 2016ல் புதுச்சேரி யூனியன் பிரதேசம், 2017ல் பஞ்சாப், 2018ல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் காங். வென்றது.

சில மாநிலங்களை வென்றதால் புது தெம்புடன் இருந்த கட்சிக்கு கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் பெருத்த அடியாக அமைந்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். அவரை சமாதானப்படுத்த கட்சி மூத்த தலைவர்கள் நீண்ட காலம் போராடினர். ஆனால் பலனளிக்கவில்லை. அதையடுத்து சோனியா மீண்டும் தலைவரானார்.

கர்நாடகா


இந்நிலையில் காங்.,தயவில் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமி கர்நாடகத்தில் ஆட்சி அமைத்தார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் திடீர் போர்க் கொடி தூக்கி வெளியேறினர். அதையடுத்து ஆட்சி கவிழ்ந்து பா.ஜ.வைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வரானார்.

இருப்பினும் கர்நாடகாவில் காங். கட்சியில் புகைச்சல் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறது. அதையடுத்து கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த தினேஷ் குண்டு ராவ் மாற்றப்பட்டுள்ளார். புதிய தலைவராக டி.கே. சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் கட்சிக்கு பிரச்னை ஏற்பட்டபோது சொகுசு விடுதிகளில் எம்.எல்.ஏ.க்களை பத்திரப்படுத்தி புகழ் பெற்றவர் சிவகுமார்.

தற்போது மத்திய பிரதேசத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில் இருக்கும் மீதமுள்ள கட்சி எம்.எல்.ஏ.க்களை பத்திரப்படுத்தும் மிகப் பெரிய பொறுப்பு இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வரான மூத்ததலைவர் சித்தராமையா சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். அவருக்கென்று தனி கோஷ்டி உள்ளது. அவரைக் கட்டுப்படுத்தும் வகையில் சிவகுமாருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ராஜஸ்தான்

கடந்த 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்றதில் இருந்தே கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. கடும் பேரத்திற்கு பிறகு சீனியரான அசோக் கெலாட் முதல்வரானார்.கட்சிக்கு வெற்றியை உறுதி செய்த சச்சின் பைலட் துணை முதல்வரானார். ஆனாலும் இரு தரப்புக்கும் இடையேயான பிரச்னை நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது.மத்திய பிரதேசத்திலும் சீனியர் கமல்நாத்துக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை.

தற்போது கட்சியில் இருந்து விலகி பா.ஜ.வுக்கு சென்றுள்ளார். அவருடைய ஆதரவாளர்களான 22 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்துள்ளனர். அதனால் கமல்நாத் அரசு எவ்வளவு நாளைக்கு தாக்குப்பிடிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் நடவடிக்கை நடந்து வருகிறது.

மஹாராஷ்டிரா

மஹாராஷ்டிராவில் ஒரு காலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது மற்றவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் 56 இடங்களில் வென்ற சிவசேனாவுக்கு 54 இடங்களில் வென்ற சரத் பவார் ஆதரவு அளித்தார். பா.ஜ. அரசு அமைந்து விடக்கூடாது என 44 இடங்களில் வென்ற காங்.கும் 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணியில் இணைந்துள்ளது.

காங். கட்சியின் பல மூத்த தலைவர்கள் முன்னாள் முதல்வர்களாக உள்ளதால் வேறு வழியில்லாமல் கூட்டணியில் தொடருவது அவர்களுடைய மனதில் கனலாக தகித்து கொண்டிருக்கிறது. சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பாலமாக இருக்கும் சரத்பவார் கூட்டணி உடையாமல் பார்த்துக் கொள்கிறார். அதனால் அவருடன் காங். தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறது. ''மத்திய பிரதேசத்தில் நடந்தது போன்று மஹாராஷ்டிராவில் நடக்காது'' என சரத் பவார் நேற்று கூறியுள்ளார்.

ஜனநாயகத்துக்கு இழிவு!
மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவங்கள் ஜனநாயகத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை கடத்திச் செல்வது, வேட்டையாடுவது பா.ஜ. அல்லாத மாநில அரசுகளை கவிழ்ப்பது என்ற யுக்தியை பா.ஜ. மேற்கொண்டு வருகிறது. அந்தக் கலையில் பா.ஜ. தேர்ச்சி பெற்று வருகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...