Tuesday, May 30, 2023

பக்காத் திருடனும், படுபக்காத் திருடனும்.

 ஊரிலிருக்கிற பக்காத் திருடனுக்கு வயதாகிவிட்டது. அப்பன் செத்துப் போனால் இனி யார் இந்தத் தொழிலைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுவது என்று அவனுடைய மகனுக்கு ஒரே கவலை. எனவே எப்படியாவது தன்னுடைய அப்பனுடைய திருட்டுத் தொழில் ரகசியங்களைப் படித்துத் தானும் ஒரு பக்காத் திருடனாக மாற முடிவெடுத்தான் மகன். மகனுடைய நச்சரிப்பைத் தாங்க முடியாத பக்காத் திருடன், ஊரில் மின்சாரமில்லாத ஒரு நாள் இரவில் மகனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு அந்த ஊரிலிருக்கிற பெரிய வீட்டுக்குத் திருடப் போகிறான்.

இரண்டு பேரும் வீட்டுச் சுவரில் கன்னம் வைத்து, ஓட்டை போட்டு வீட்டினுள் நுழைகிறார்கள். அங்கிருந்த ஒரு பெரிய பெட்டியை உடைத்த பக்காத் திருடன், தன்னுடைய மகனை பெட்டிக்குள் இறங்கி அதிலிருக்கும் துணிகளை பொறுகியெடுத்துப் போடும்படி சொல்கிறான். அதன்படி பெட்டியினுள் மகன் இறங்கிய மறுகணம் பக்காத் திருடன் அந்தப் பெட்டியை அடித்து மூடி, அவன் தப்பி வெளியே வராமலிருக்க வெளியில் பூட்டையும் பூட்டி வைத்துவிட்டு, " திருடன், திருடன்...." என்று கத்திக் கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டான்.
இந்த சத்தத்தால் கண் விழித்த வீட்டுக்காரர்கள் மெழுகுவத்தியைக் கொளுத்தி வைத்துக் கொண்டு வீடெல்லாம் தேடிக் கடைசியில் திருடன் சுவற்று ஓட்டையில் புகுந்து தப்பி ஓடிவிட்டதைக் கண்டுபிடிக்கிறார்கள். பெட்டிக்குள் அடைபட்டுக் கிடந்த திருடனுடைய மகனுக்கு பயங்கரக் கோபம். அப்பன் இப்படித் தன்னை மாட்டி வைத்துவிட்டுப் போய்விட்டானே என்று குமைகிறான். முதலில் இங்கிருந்து எப்படி வெளியேறுவது என்று யோசித்த அவன், பெட்டிக்குள் எலி கொறிப்பது போலச் சத்தம் கொடுக்கிறான்.
வீட்டுக்காரர்கள் வேலைக்காரியிடம் ஒரு மெழுகுவர்த்தியைக் கொடுத்து பெட்டியைச் சோதிக்கும்படி சொல்ல, வேலைக்காரி பெட்டியைத் திறக்கிறாள். உள்ளே அடைபட்டுக் கிடந்த திருடனின் மகன் மெழுகுவர்த்தியை வாயால் ஊதி அணைத்து விட்டு, வேலைக்காரியையும் கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடுகிறான்.
மொத்த ஊரும் அவனை விரட்டிக் கொண்டு ஓடுகிறது. போகிற வழியில் வழியில் ஒரு கிணற்றைப் பார்க்கும் திருடனின் மகன் அருகிலிருந்த ஒரு பெரிய கல்லைத் தூக்கிக் கிணற்றுக்குள் எறிய, திருடன் கிணற்றில் குதித்துவிட்டதாக நினைத்து ஊர்க்காரர்கள் அனைவரும் கிணற்றைச் சுற்றி நின்று உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட திருடனின் மகன் அங்கிருந்து தப்பி வீடு போய்ச் சேருகிறான். அங்கிருந்த அப்பனான பக்காத் திருடனை வாயில் வந்தபடி ஏச, பக்காத் திருடன் மகனை நோக்கி "அதெல்லாம் இருக்கட்டும். நீ எப்படி அங்கிருந்து தப்பினாய் என்று சொல்லு" என மகனிடம் கேட்க, அவனும் நடந்ததைச் சொல்கிறான்.
பக்காத் திருடனான அப்பனுக்கு பயங்கர சந்தோஷம். "படுபக்காத் திருடனடா நீ! இவ்வளவு சீக்கிரம் தொழிலைக் கற்றுக் கொண்டு பக்காத் திருடனான என்னையே மிஞ்சி விட்டாயே" என்கிறான்.
இனி அடுத்த தலைமுறைக்கும் ஒரு பக்காத் திருடன் உருவாகிட்ட சந்தோஷத்தில் குடும்பமே குலைவையிட்டு மகிழ்கிறது.
All reacti

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...