மாநில நிர்வாகிகள், அமைச்சர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 250 பேர் இதில் கலந்து கொண்டனர். மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர், முதல்- அமைச்சர் ஜெயலலிதா சுமார் ஒன்றரை மணி நேரம் கட்சியினருக்கு அறிவுரைகள் வழங்கி பேசினார்.
பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அ.தி.மு.க. செயற்குழுவின் தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
* தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் அராஜகங்களையும், அத்துமீறல்களையும் தவிடு பொடியாக்கி, அ.தி.மு.க. ஆட்சியை மலரச் செய்து, மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக பதவி ஏற்றுள்ள கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறது.
* அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மற்றும் புதுச்சேரி வாக்காளப் பெருமக்களுக்கும், வெற்றிக்காக உழைத்த கழக தொண்டர்களுக்கும், தோழமை கட்சியினருக்கும், நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
* சட்டமன்றத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், நடுநிலையோடும் நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறது.
* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், முதல் கட்டமாக, குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி; முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித் தொகையை 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி அறிவிப்பு; மணப் பெண்ணுக்கு திருமாங்கல்யம் செய்ய உதவித் தொகையுடன் 4 கிராம் இலவச தங்கம்; மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், உதவித் தொகை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக அதிகரிப்பு; பெண் அரசு ஊழியர்களுக்கு 6 மாத கால மகப்பேறு விடுமுறை என தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
* சர்வதேச போர் நெறிமுறைகளை மீறி இலங்கையில் இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டமன்றப் பேரவையில் வரலாற்றில் இடம்பெறும் வகையில் மிகத் துணிச்சலாக தீர்மானத்தை நிறைவேற்றி சரித்திர சாதனை படைத்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை செயற்குழு மனதார பாராட்டுகிறது.
* இதுமட்டுமல்லாமல், அமெரிக்க நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் முதல்- அமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்த போது, பன்னாட்டு போர் நெறிமுறைகளை மீறி இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்தும்; அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்தும்; உணர்வுபூர்வமாக தனது கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்தார்.
முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் கருத்தினை கூர்ந்து கேட்ட ஹிலாரி, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க அரசு சிந்தித்து வருவதாகத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பிற்கு பின்னர், இலங்கை போரின் போது ஏற்பட்ட போர்க் குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்று விளக்கம் அளிக்கத் தவறினால், அந்நாட்டுக்கு வழங்கப்படும் அனைத்து நிதி உதவிகளையும் அமெரிக்க அரசு நிறுத்த வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளி விவகாரக் குழு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை சாதுர்யத்துடனும், விவேகத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும் இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கும் வண்ணம் நடவடிக்கை எடுத்து, வரலாற்றுச் சாதனைப் படைத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டினையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறது.
மேல்-சபை தேவையில்லை என்று சட்டசபையில் தீர்மானம், 69 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்ந்து நடைமுறைப்படுத்த ஆணை, சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டி மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ வழி செய்தது, நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்திட தனி நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்தது ஆகியவற்றுக்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டுகிறது.
* முதல்- அமைச்சர் கோரிக்கையினை ஏற்று, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை உடனடியாக மத்திய அரசிதழில் வெளியிடவும், இந்தத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தும் வகையில், கண்காணிப்பு குழுக்களை அமைத்திடவும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
* மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்திற்கு முன்பே பாசனத்திற்கு தண்ணீரை திறந்துவிட்ட முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுதலையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறது.
* இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை, கடலோரப் பாதுகாப்பினை பலப்படுத்துதல், மீனவளத் துறையை நவீனப்படுத்த சிறப்பு தொகுப்பு நிதி, மின் உற்பத்தி திட்டங்களுக்கான நிதியுதவி, மோனோ ரெயில் திட்டத்திற்கு நிதி உதவி, மாணவ-மாணவியருக்கான இலவச மடிக் கணினி திட்டத்திற்கு நிதி உதவி, தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு நிதி உதவி, அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், திட்டக் குழு பொறுப்புரிமை ஒப்படைப்பின் கீழ் வழக்கமான மத்திய அரசின் நிதி உதவியை அதிகரித்தல், பொது விநியோகத் திட்டத்திற்கு கூடுதல் மானியம், சூரிய எரிசக்தியுடன் கூடிய பசுமை வீட்டு வசதித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்- அமைச்சர், பிரதமரிடம் நேரில் அளித்தார். அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
* தமிழகத்துக்கு கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய தொகுப்பிலிருந்து அளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
* காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, அண்மையில் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை கடுமையாக உயர்த்திவிட்டது. இதன் காரணமாக, அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர்த்தப்பட்ட டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
* இந்திய நாட்டிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கு விசாரணையில், பிரதமர் மீதும், மத்திய உள்துறை அமைச்சர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் மத்திய அமைச்சர் நீதிமன்றத்தில் கூறி இருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பல நாட்களாகியும், இதுகுறித்து பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எந்த விதமான பதிலையும் அளிக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக இருப்பவரும் இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவிக்கவில்லை.
இந்த இமாலய ஊழலில் உள்ள உண்மையை தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து முறையான பதிலை இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், பிரதமர் மீதும், உள்துறை அமைச்சர் மீதும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என பிரதமரையும், மத்திய உள் துறை அமைச்சரையும், காங்கிரஸ் கட்சியின் தலைவரையும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
* முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
* வேளாண் உற்பத்தியில் உயரிய இலக்கை எய்தும் வகையில், தமிழ்நாட்டிற்குத் தேவையான டி.ஏ.பி. மற்றும் இதர உரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அரசை செயற்குழு வலியுறுத்துகிறது.
* இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள சூழ்நிலையில், 1983-ம் ஆண்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி - கொழும்பு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்தை தற்போது மீண்டும் துவக்கி இருப்பது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக அமைந்துள்ளது. தூத்துக்குடி - கொழும்பு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
* தி.மு.க. ஆட்சியில் நிலவிய வரலாறு காணாத நூல் விலை உயர்வு காரணமாகவும், தொடர் மின் வெட்டு காரணமாகவும் ஜவுளித்தொழில் முடங்கிப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. பஞ்சு ஏற்றுமதியை மத்திய அரசு அனுமதித்தது தான் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
எனவே பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
* தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக போதுமான அளவு மண்ணெண்ணெயை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
* மாநில சுயாட்சி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான 2011-ம் ஆண்டு வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறை (நியாயம் மற்றும் இழப்பீடு வழங்க வழிவகை செய்தல்) தடுப்புச் சட்ட முன்வடிவை உடனடியாக கைவிட மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
* தி.மு.க. அரசால் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த திருப்பூர் சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூர் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ய நிலையை எட்டும் வகையில் உள்ள இரண்டு தொழில்நுட்பங்களில் எந்த தொழில்நுட்பத்தை கடைபிடிக்கலாம் என்பது குறித்து இரண்டு மாதங்களில் ஆராய்ந்து முடிவு எடுப்பது என்றும்; அதற்குரிய செலவான 200 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தமிழக அரசே வழங்குவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத் தொகையான 18 கோடியே 38 லட்சம் ரூபாயை உடனடியாக தமிழக அரசே வழங்க ஆணையிட்டுள்ளார். திருப்பூர் பகுதியில் ஜவுளித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தி, பல ஆண்டு கால பிரச்சினையை விரைந்து தீர்த்து வைத்த முதல்-அமைச்சருக்கு இச்செயற்குழு தனது பாராட்டுதலையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறது.
* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மாணவ-மாணவியருக்கு இலவச மடிக் கணினி வழங்கும் திட்டத்தையும், தாய்மார்களுக்கு இலவச மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டத்தையும் மற்றும் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி முதல் தொடங்க ஆணையிட்டுள்ள பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாவை இச்செயற்குழு பாராட்டுவதுடன், தனது நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.