Thursday, July 21, 2011

இராசா உள்ளிட்ட குற்றம் சாற்றப்பட்டவர்கள் மீது ஏமாற்றல்

மத்திய தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சரும், 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் முதன்மைக் குற்றவாளியுமான ஆ.இராசாவிடம், அவருடைய குடும்ப உறுப்பினர்களின் வருவாய் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்ற வருமான வரித்துறையின் கோரிக்கை ஏற்று ம.பு.க. நீதிமன்றம் விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு, ஊழல் வழக்கை விசாரித்துவரும் டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வுக் கழக சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு, வருமான வரித்துறையின் வழக்குரைஞர் சஞ்சீவ் ராஜ்பால், இராசாவை விசாரிப்பதற்கான மனுவை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கில் இராசாவுடன் குற்றஞ்சாற்றப்பட்டுள்ள ஸ்வான் டெலகாம் நிறுவனத்தின் ஷாஹித் உஸ்மான் பால்வா, வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் அடாக் நிறுவனத்தின் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோரையும் விசாரிக்க வருமான வரித்துறையின் தாக்கல் செய்த மனுக்களை ஏற்று, விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஸ்வான் டெலகாம் நிறுவனத்தின் பங்குகளை எடிசலாட் டிபி நிறுவனத்திற்கு விற்றது தொடர்பாக கிடைத்த வருவாய் குறித்து பாலவாவிடம் மும்பை பிரிவு வருமான வரித்துறை விசாரணை நடத்தும்.

இராசா உள்ளிட்ட இந்த 6 பேரிடமும் திகார் சிறையில் வைத்தே ஜூலை 27 முதல் 29ஆம் தேதி வரை வருமான வரித்துறையினர் விசாரணை நடத்துவர் என்று வழக்குரைஞர் சஞ்சீவ் ராஜ்பால் கூறியுள்ளார்.

இதற்கிடையே, 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்குத் தொடர்பான வாதத்தை மத்திய புலனாய்வுக் கழகம் இன்று தொடங்கியது. குற்றஞ்சாற்றப்பட்டுள்ள இராசா, சித்தார்த் பெஹூரா, கெளதம் தோஷி ஆகியோரிடம் ம.பு.க. வழக்குரைஞர் குறுக்கு விசாரணை செய்வார்.

இராசா உள்ளிட்ட குற்றம் சாற்றப்பட்டவர்கள் மீது ஏமாற்றல், மோசடி, குற்றம் செய்யும் நோக்குடன் சதித் திட்டம் தீட்டியது, ஊழல் ஆகிய குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்குத் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவது முழுமையாக முடிந்த பின்னரே வாதத்திற்கும், குறுக்கு விசாரணைக்கும் அனுமதிக்க வேண்டும் என்ற இராசாவின் கோரிக்கையை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...