Wednesday, July 27, 2011

ஜெயலலிதாவை விமர்சிக்கலாமா?...

புரட்சித்தலைவி, அம்மா, தங்கத்தாரகை, தைரியலட்சுமி என்று பலவிதமாய் காலகாலமாய் புகழப்பட்டுக் கொண்டிருக்கும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு மேல் ஓடிவிட்ட நிலையில் இதுவரை தமிழகத்தில் நடந்த ஆக்கப்பூர்வமான விஷயங்கள் ஏதேனுமுண்டா?... தி.மு.க வுக்கு எதிராக அவர் செய்யும் விஷயங்களும், நடவடிக்கைகளுமே ஆக்கப்பூர்வமானதுதானே என்று அவரது கட்சிக்காரர்கள் வேண்டுமானால் சொல்லலாம்… சாமானியர்களான நாமும் அதே ஜால்ராவைத் தட்ட முடியுமா?...

இந்தமுறை பதவியேற்றவுடன் ஊழலற்ற ஒளிவு மறைவற்ற நேர்மையான ஆட்சி நடத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். அவருக்கு வாக்களித்த சாமான்யர்களும், நடுநிலையாளர்களும் நிஜமான சந்தோஷம் கொண்டனர். இந்த முறை ஜெயலலிதா நிச்சயம் ஒரு நல்லாட்சியைத் தருவார் என்றுதான் நம்பினர். இன்னமும் நம்பிக்கொண்டுதான் இருக்கின்றனர். கலைஞரும் அவருடைய குடும்பமும் அடித்த கூத்துக்களை மனம் வெம்பி பார்த்துச் சலித்த ஒவ்வொரு தமிழனும் இனி நிச்சயம் நல்ல நேர்மையான, திறமையான நிர்வாகம் நடக்கும் என்று நம்பினர். படித்த பண்பாளர்களும், அரசியல் நோக்கர்களும் கூட ஏற்கனவே கருணாநிதியின் தோல்வியில் நிச்சயம் ஜெயலலிதாவும் பாடம் கற்றிருப்பார். எனவே எதுவும் அநாவசிய ஆட்டம் போடாமல் உருப்படியான திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று நம்பினர்.

ஒருவேளை அரசியல்வாதிகளே நினைத்தாலும் திருந்த முடியாத சாக்கடைதான் அரசியலோ என்னவோ தெரியவில்லை. ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் போதும் பழைய ஆட்சியாளர்களால் தொடங்கப்பட்ட பல நல்ல திட்டங்களையும் கூட அரசியல் சாக்கடையில் அமிழ்த்து அழிக்கும் அவல மனப்பான்மை அரசியல்வாதிகளிடம் எப்போதுதான் மாறப்போகிறதோ தெரியவில்லை. ஜெயலலிதா மட்டும் விதிவிலக்கா என்ன? அவருடைய ஒரு மனது மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்று விரும்புவதாகவும், இன்னொரு அடி மனது நான் இன்னமும் பழைய ஜெயலலிதாதான் என்பதை நிரூபிப்பது போலவும் காரியங்கள் மாறி மாறி நடக்கின்றன.

எடுத்த எடுப்பிலேயே மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடிகளைக் கொட்டிக் கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை நிராகரித்தார்.ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கிய கருணாநிதிக்குப் போட்டியாய் இலவச அரிசித்திட்டத்தை உடனடியாக அமல்படுத்தினார். தமிழகத்தில் மீண்டும் மேலவையைக் கொண்டு வரும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இலவசத் தொலைக்காட்சி வழங்கிய கருணாநிதிக்குப் போட்டியாக மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்துக்கு மும்முரமாய் காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதிகாரிகள் இங்கும் அங்குமாய் மாற்றி மாற்றி பந்தாடப்பட்டனர். ஜெயலலிதாவுக்கு அருகிலிருக்கும் பல முட்டாள் ஆலோசனையாளர்களால் இன்றும் அவரால் சரியான நேர்திசையில் நிலையான முடிவெடுக்க முடியாமல் அதிகாரிகளை மாற்றிக்கொண்டேயிருக்கிறார். செயலிழந்து கிடந்த காவல்துறை தி.மு.க.வுக்கு எதிராக மட்டுமே முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. மதுபான விற்பனையை தொடர்ந்து அரசே நடத்திக்கொண்டு மேலும் அரசின் வருமானத்தை பெருக்கும் வழியாய் 4200 கோடி ரூபாய்க்கு மேல் வரிவிதிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. (யாருக்கு என்ன வரி விதித்தாலும் அது இறுதியாய் விடிவது மக்கள் தலையில்தான் என்ற உண்மை மட்டும் இங்கே பெரும்பாலானவர்களுக்கு உரைப்பதேயில்லை.)

ஆரம்பத்தில் இதெல்லாம் சகஜம்தான் என்று கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பிய சந்தோஷத்திலிருக்கும் பத்திரிக்கைகளும், பொதுமக்களும், நடுநிலையாளர்களும் இன்னமும் மனதைத் தேற்றிக் கொண்டேயிருக்கிறோம். ஆனாலும் பெரிதான மாற்றங்களை, நிர்வாகச் சீர்திருத்தங்களை இன்னமும் ஜெயலலிதாவால் கொண்டுவர முடியவில்லை. இனிமேலும் கொண்டு வருவாரா என்பதும் சந்தேகமாகிக் கொண்டேயிருக்கிறது.

எப்போதோ படித்த ஞாபகம்… ‘’வேட்டி கட்டிய ஜெயலலிதாதான் கருணாநிதி, சேலை கட்டிய கருணாநிதிதான் ஜெயலலிதா’’. எவ்வளவு நிதர்சனமான தீர்க்கதரிசன வரிகள் என்பது ஆழ யோசித்தால் மட்டுமே விளங்கும் உண்மை.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் கருணாநிதி கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக தனது கூட்டணிக் கட்சிகள், பொதுமக்கள், நடுநிலையாளர்கள் என அனைத்து தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி எப்படியாவது சமச்சீர் கல்வியை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று மும்முரமாய் துடித்துக்கொண்டிருக்கிறார். உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமச்சீர் கல்வியை ஆராய அரசு அமைத்த குழுவில் பணத்துக்காக கல்வியை விற்கும் தனியார் பள்ளி முதலாளிகளும் கல்வியாளர்கள் என்ற போர்வையில் இடம் பிடித்தனர். இதைவிடக்கொடுமை அதில் இடம்பெற்ற ஒரு புறம்போக்கு முதலாளி தனது பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ‘’சமச்சீர் கல்வி வந்தால் ஏழைக்குழந்தைகளையும் உங்கள் குழந்தைகளோடு அமரவைத்து கற்பிக்கப்படுமோ என்று பயப்படவேண்டாம். அப்படியொரு நிலைமையை வரவிடமாட்டோம். அப்படியே வந்தாலும் உங்கள் குழந்தைகளைப் பாதிக்காதவாறு ஏழைக்குழந்தைகளுக்கு பேருக்கு ஏதாவது மாலைநேரத்தில் தனியாக வகுப்புகள் நடத்தப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட புறம்போக்கை சமச்சீர் கல்வியை ஆராய அமைத்த குழுவில் இடம்பெறச் செய்தது யார்?. இது ஜெயலலிதாவுக்கு தெரிந்தே நடந்ததா?... இல்லை, அவருக்கு தெரியாமல் அவரின் நிழல்களால் நிகழ்த்தப்பட்டதா?...

யார் என்ன சொன்னாலும் சரி… சமச்சீர் கல்வியை வரவிடமாட்டேன் என்று ஜெயலலிதா காட்டும் பிடிவாதமே அவர் பெரிதாய் மாறாமல் இன்னும் பழைய ஜெயலலிதாவாகவே இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சினிமாவுக்கு தமிழில் பெயர் வைப்பதால் மட்டுமே வரிவிலக்கு பெறும் திட்டத்தில் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டிருக்கும் சீர்திருத்தங்களும், தி.மு.க.வுக்கு எதிரான நடவடிக்கையாக இருந்தாலும் கூட தனிநாடு போல இருந்த மதுரையை மீட்டு பொதுமக்களை நிம்மதியாக வாழச்செய்ய அவரால் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நடவடிக்கைகளும், தமிழர்களின் அடையாளமாய் தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் கலைஞரே செய்யாத விஷயமாய், தமிழக சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா போட்ட தீர்மானங்களும், பல திரையுலக ஜால்ராக்கள் பாராட்டுவிழா நடத்த அனுமதி கேட்டும் அதை ஜெயலலிதா நாசூக்காய் தவிர்ப்பதும் நிச்சயமாய் மனதாரப் பாரட்டப்படவேண்டியதே.

ஆனால் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே நல்ல விஷயங்களும், மீதி தொன்னூறு சதவிகிதம் பழிவாங்கலும், உறுப்படாத விஷயங்களுமாய் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தால்… ஊடகங்களும், பொதுமக்களும், கூட்டணிக்கட்சிகளுமே ஜெயலலிதாவுக்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் திரும்பக்கூடும் என்பதுதான் நிதர்சனம். ஏற்கனவே கருணாநிதி எதிர்ப்பை வைத்து அரசியல் வளர்த்த விஜயகாந்த், இப்போது பரபரப்பில்லாமல் சத்தமின்றி கிடக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அவருக்கு அரசியல் வளர்க்க ஆளுங்கட்சி எதிர்ப்பு தேவைப்படலாம் என்பதை மறக்கக்கூடாது.

சமச்சீர் கல்வியை எதிர்க்கும் ஜெயலலிதா உண்மையிலேயே நல்லாட்சி தர விரும்பினால் தமிழகத்தில் கல்விக்கொள்ளை நடத்திக்கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளையும், கல்லூரிகளையும் முடிந்தால் அரசுடமை ஆக்கும் வழிகளைப் பார்க்கட்டும். இலவச திட்டங்கள் தவறில்லை. ஆனால் அது இடைத்தரகர்களும், ஊழல்வாதிகளும் கமிஷன் சம்பாதிக்கும் வழியாய் மட்டும் அமைந்து விடாமல் நேர்மையான முறையில் செயல் படுத்தப்பட்டு, போன ஆட்சியில் டி.வி வைத்திருக்கும் எல்லா வீட்டிற்கும் மீண்டும் ஒரு டி.வி வழங்கி மக்கள் பணத்தை நாசமாக்கியதைப் போலல்லாமல் நிஜமாகவே ஏழைப்பயனாளிகளைச் சென்றடையும் வகையில் செயல்படுத்தும் வழிகளைப் பார்க்கட்டும். விவசாயத்தையும், வேலை வாய்ப்புகளையும் பெருக்கி வளர்க்கும் வழிகளைப் பார்க்கட்டும்.

ஒரு பக்கம் தி.மு.க.வை பழி வாங்கிக்கொண்டே இன்னொரு பக்கம் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் வழிகளைப் பார்த்தால் மட்டுமே ஜெயலலிதா தனது ஆசைகளையும், மக்களின் ஆசைகளையும் ஒருசேர நிறைவேற்ற இயலும் என்பதைப் புரிந்து கொள்வாரா? மக்களும், ஊடகங்களும் இன்னமும் அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை குறையாமல் காப்பாற்றுவாரா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...