சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ளது அங்கம்மாள் காலனி. இந்த நிலத்தை சிலர் மிரட்டி அபகரித்து கொண்டதாகஅந்த பகுதி மக்கள் புகார் செய்தனர். இதையடுத்து அங்கம்மாள் காலனியை சேர்ந்தவர்கள், மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தனர்.
இதுகுறித்து சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு மீட்பு குழுவினர் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, உலக நம்பி, மற்றும் ஜிம்.ராமு. மகேந்திரன், அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சித்தானந்தம், கனகராஜ், ஆட்டோ முருகன், கறிகடை பெருமாள், கொண்டலாம்பட்டி முன்னாள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், முன்னாள் ஆர்.டி.ஓ. பாலகுரு மூர்த்தி ஆகிய 13 பேர் மீது போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, ஆட்டோ முருகன், கனகராஜ், கறிக்கடை பெருமாள் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவின் பேரில் 12 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் முகாமிட்டு தீவிரமாக தேடிவருகிறார்கள். நில மீட்பு படை உதவி கமிஷனர் பிச்சை தலைமையில் ஒரு குழுவினர் சென்னையில் முற்றுகையிட்டுள்ளனர். மற்றொரு குழுவினர் திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் வீரபாண்டி ஆறுமுகத்தை தேடிவருகின்றனர்.
இதற்கிடையே வீரபாண்டி ஆறுமுகத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது. இதில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுமா? இல்லை என்று தி.மு.க. வினர் எதிர்பார்த்து உள்ளனர்.
இதற்கிடையே போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
கடந்த 16-ந் தேதியே வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுப்பற்றி 19-ந் தேதி தான் வெளியில் தகவல் வெளியானது. வழக்குப்பதிவு செய்தததில் இருந்து 4 நாட்கள் அவர் சேலத்தில் தான் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் எப்.ஐ.ஆர். உள்ளிட்ட ஆவணங்களின் நகல்கள் அனைத்தும் பெற்ற பின்னரே தலைமறைவாகி இருக்கிறார். முன் கூட்டியே நடவடிக்கை எடுத்து இருந்தால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட அன்றோ அல்லது மறு நாளோ கைது செய்து இருக்கலாம். ஆனால் தப்பி சென்ற பிறகு அவரை பிடிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
எங்களுக்கு கிடைத்த தகவலின்படி வீரபாண்டி ஆறுமுகம் தமிழகத்திலேயே இல்லை. அவர் வெளிமாநிலத்தில் பதுங்கி உள்ளார். அங்கு அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் முற்றுகையிட்டு உள்ளனர். எந்த மாநிலம் என்று சொன்னால் அவர்கள் உஷாராகி விடுவார்கள் என்பதால் அதை கூறுமுடியாது என்றார்.
இதுகுறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திடம் கேட்டபோது, வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவரை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அவரைப்பற்றிய தகவல்கள் யார் வேண்டுமானாலும் கூறலாம் என்றார்.
இதற்கிடையே வீரபாண்டி ஆறுமுகம் பெங்களூர் புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் கிருஷ்ணகிரி அருகே கிராணைட் குவாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர். போலீசார் தேடுவதை அறிந்த வீரபாண்டி ஆறுமுகம் வேறு இடத்துக்கு தப்பி இருக்கலாம் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment