கடந்த ஆட்சியில் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் சிலருக்கு சமூக சேவர்கள் என்ற பெயரில் முறைகேடாக வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதில் விதிகள் கடைப்பிடிக்கவில்லை என்றும் புகார் கூறப்பட்டது.
இது பற்றி தமிழக மக்கள் உரிமை கழக செயலாளர் புகழேந்தி போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜத்தை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அவர் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார். லஞ்ச ஒழிப்பு ஐ.ஜி. குணசீலன் மேற்பார்வையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி தகவல்கள் சேகரித்தனர்.
இது தொடர்பாக இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினார்கள். முன்பு உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்து தற்போது மண்டபம் அகதிகள் முகாம் அதிகாரியாக பணியாற்றும் ஜாபர்சேட் அவரது நண்பர் ராஜூ, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜமாணிக்கம், டி.எஸ்.பி.க்கள் பாண்டியன், வினோதன், கணேசன், அறிவழகன், கவர்னர் பர்னாலா மகனின் நண்பர் உள்பட 9 பேர் வீடுகளில் இந்த சோதனை நடந்தது.
50-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் 9 இடங்களில் இந்த சோதனை நடத்தினார்கள். சோதனை நடைபெறுவதைத் தொடர்ந்து வீடுகள் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் வரை சோதனை நீடித்தது. யாரும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. வீட்டுமனை ஒதுக்கீடு தொடர்பாக வீட்டில் இருந்தவர்களிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
வீட்டில் இருந்த ஆவணங்களையும் கைப்பற்றி விசாரித்தனர். சோதனைக்குள்ளான கூடுதல் டி.ஜி.பி. ஜாபர் சேட் வீடு சென்னை அண்ணா நகர் 14-வது மெயின் ரோடு ஆர்.பிளாக்கில் உள்ளது. இவரது வீட்டின் அருகில் ஜாபர்சேட் நண்பர் ராஜூ என்பவரது வீடும் உள்ளது. இந்த 2 வீடுகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
ஜாபர்சேட்டுக்கு முகப்பேரில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 4 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருவான்மியூரிலும் அவருக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வீட்டு வசதி வாரியமனை ஒதுக்கப்பட்டது. இதை அவர் ரத்து செய்து விட்டு சமூக சேவகர் என்ற பெயரில் தனது மகள் ஜெனிபர் பெயருக்கு அந்த வீட்டு மனையை மாற்றியுள்ளார். இதற்காக ஜெனிபர் பெயரில் ஒரே நாளில் ரூ. 1 1/2 கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளது.
இது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதால் அதை மீண்டும் ரத்து செய்து விட்டு மனைவி பர்வீன் பெயருக்கு மாற்றியதாகவும், இதற்காக 3 முறை அரசாணை வெளியிடப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் ஜாபர்சேட் வீட்டில் சோதனையிடப்பட்டு விசாரணை நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசு அதிகாரிகள் வீட்டுமனை வாங்கும்போது அது பற்றி அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். இது போன்ற விதிகளும் சரியாக பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஐ.பி.எஸ். அதிகாரியான ஜாபர்சேட் கடந்த ஆட்சியில் போலீஸ் துறையில் முக்கிய பங்கு வகித்தார். திருச்சி மண்டல ஐ.ஜி. யாக இருந்த அவர் சென்னையில் உளவுப் பிரிவு ஐ.ஜி. யாக நியமிக்கப்பட்டார். அப்போது கூடுதல் டி.ஜி.பி. பதவி காலியாக இருந்தது.
ஜாபர் சேட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே உளவுப் பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி.நியமிக்கப்படாமல் இருந்தார். அதன் பிறகு ஜாபர் சேட்டுக்கு பதவி உயர்வு அளித்து உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஆனார். தமிழக சட்டசபை தேர்தலின்போது ஆளுங்கட்சிக்கு விசுவாசியாக இருப்பதால் இவரை மாற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவரை மேற்கு வங்காளத்துக்கு தேர்தல் பார்வையாளராக தேர்தல் கமிஷன் நியமித்தது.
ஜாபர்சேட் அங்குபணியாற்ற மறுத்து விடுமுறையில் சென்றார். தேர்தல் முடிந்ததும் அவர் மீண்டும் பணியில் சேர்ந்தார். புதிய அரசு அவரை உளவுத்துறையில் இருந்து அதிரடியாக மாற்றி மண்டபம் அகதிகள் முகாம் அதிகாரியாக இடமாற்றம் செய்தது. ஜாபர்சேட் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜாபர்சேட் வீட்டில் நடந்த சோதனை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சோதனை நடந்த மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜமாணிக்கம் முன்பு செய்தித்துறை செயலாளராக இருந்தார். கடந்த ஆட்சியில் கருணாநிதியின் செயலாளர்களில் ஒருவராக பணியாற்றி ஓய்வு பெற்றார். நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி வீட்டில் வசித்து வருகிறார்.இன்று இங்கு போலீஸ் அதிகாரிகள் முற்று கையிட்டு சோதனை நடத்தினார்கள்.
இதே போல் சோதனைக்குள்ளான டி.எஸ்.பி.க்கள் பாண்டியன், வினோதன், கணேசன், அறிவழகன் ஆகியோர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றியவர்கள். மேலும் கவர்னர் பர்னாலா மகனின் நண்பர் நஜிமுதீன், வீட்டிலும் கீழ்ப்பாக்கத்தில் சண்முகம் என்பவரது மகள் பத்மா வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. இவர்கள் வீட்டுமனை பெற்றது தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சரிபார்த்து வருகிறார்கள்.
இதில் தவறு நடந்து இருந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், வீட்டு மனைகளை திரும்ப பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment