Tuesday, July 26, 2011

ஆண்டில் சமச்சீர் கல்வி அமலாவதுசாத்தியம் இல்லை:அரசு வழக்கறிஞர்

"சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது. அதை சீரமைக்க அவகாசம் தேவைப்படுகிறது. பாடத் திட்டத்தில் தற்போதுள்ள குறைபாடுகள் தீர்க்கப்பட்டவுடன், படிப்படியாக, இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்தாண்டில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை' என, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.சமச்சீர் கல்வித் திட்ட விவகாரத்தில், சென்னை ஐகோர்ட் பிறபித்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது. இம்மனு, கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
பாடப் புத்தகங்களை வழங்குவதற்கான கால அவகாசத்தை, ஆகஸ்ட் 2ம் தேதி வரை நீட்டித்தும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த மனு மீது, நேற்றும் விசாரணை நடந்தது. ஜே.எம்.பன்சால், தீபக் வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், தமிழக அரசு சார்பில் ஆஜரான, சீனியர் வழக்கறிஞர் பி.பி.ராவ், தனது வாதத்தில் கூறுகையில், ""சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்காக, சட்டத் திருத்தம் கொண்டு வந்தது, நியாயமான நடவடிக்கை தான். சமச்சீர் கல்வித் திட்டம், காலவரையற்று ஒத்தி வைக்கவில்லை. தற்காலிகமாகவே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது'' என்றார்.


அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ""சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா'' என, கேள்வி எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் ராவ், தனது வாதத்தில் கூறியதாவது:மாணவர்கள் புதிதாக கற்றுக் கொள்வதற்கோ, திறமை மிக்க கல்வி கற்கவோ, தற்போதுள்ள பாடத் திட்டம், வகை செய்யவில்லை. தேசிய அளவிலான உயர் கல்வி தேர்வுகள் நடக்கும்போது, தமிழக மாணவர்கள், மற்ற மாநில மாணவர்களை முந்த முடியாத நிலை உள்ளது.
தமிழக அரசு சட்டப்படி , மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியமானது, மத்திய அரசின் கல்விச் சட்டப்பிரிவு 29 ன் படி அமையவில்லை . எனவே, கல்வித்திட்டத்தில் பொதுவான பாடத் திட்டங்களை உருவாக்கவோ , பாடப் புத்தகங்களை தயாரிக்கவோ , ஏற்ற, தகுதியான, தொழில் நுட்பம் கொண்ட அமைப்பு இங்கு இல்லை.



சமச்சீர் கல்வித் திட்டத்தின் பணிகள், பாடத் திட்டங்கள் மற்றும் பாடப் புத்தகங்களை தயாரிப்பதுடன் இல்லாமல், தகுதியான ஆசிரியர்களை நியமிப்பது, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது, தேர்வுகளை நடத்துவது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான நடத்தை விதிமுறைகளை உருவாக்குவது ஆகியவற்றையும் சார்ந்திருக்கிறது.


எனவே, சமச்சீர் கல்வித் திட்டத்தை, இந்தாண்டில் நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. சமச்சீர் கல்வி திட்டத்தில், தற்போதுள்ள குறைபாடுகளை சீரமைக்க அவகாசம் தேவை. சீரமைக்கப்பட்ட பின், ஒரு ஆண்டுக்குள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிபுணர் குழு ஆய்வு செய்தபின், இத்திட்டம், படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு தமிழக அரசு வழக்கறிஞர் வாதாடினார். சமச்சீர் கல்வி திட்டத்தின் வாதம், இன்று தொடரவுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...