"சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும்' என்று தி.மு.க., நேற்று போராட்டம் நடத்தியது. தலைமைக்கு "பெப்பே' காட்டும் வகையில், தி.மு.க., அமைச்சர்கள், நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின.'தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், "சமச்சீர் கல்வி அமல்படுத்தக்கோரி, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளை மாணவர்கள் புறக்கணித்து, தங்களது எதிர்ப்பைக் காட்ட வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.
தி.மு.க.,வின் போராட்டத்தை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர், ஆசிரியர் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் எச்சரிக்கப்பட்டது.அதனால், நேற்று தி.மு.க., நடத்திய போராட்டம் பிசுபிசுத்து போனது. அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம்போல இயங்கின. மாணவர்கள், ஆசிரியர்கள் வந்திருந்தனர். ஒருசில இடங்களில் சிறு சலசலப்புகளை தவிர பிரச்னை ஏதும் எழவில்லை.தி.மு.க., நடத்திய போராட்டம் தோல்வியடைய கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள்தான் காரணம் என்று தி.மு.க., மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரியில் இரண்டு பள்ளிகளும், முகப்பேரில் ஆற்காடு வீராசாமியின் குடும்பத்துக்குச் சொந்தமான பப்ளிக் ஸ்கூலும் உள்ளது. முன்னாள் அமைச்சர் நேரு குடும்ப அறக்கட்டளைக்கு சொந்தமாக, திருச்சி அருகே தாயனூரில் "கேர்' பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி செயல்படுகிறது. திருச்சியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் இளங்கோ, நாமக்கல் அருகே நல்லூரில் "கிங்' பொறியியல் கல்லூரியை நடத்துகிறார்.
திருச்சி பொதுக்குழு உறுப்பினர் குணசீலன் குடும்பத்தினர், துறையூரில் விஜிபாரதி மெட்ரிக் பள்ளியை நடத்துகின்றனர். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் விஜயா ஜெயராஜூக்கு சொந்தமாக சமயபுரம் சிறுகனூரில் விஜே கேட்டரிங் கல்லூரி உள்ளது.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவி மகன் பிரபுக்கு, சேலம் அரியானூரில் வி.எஸ்.ஏ., பொறியியல் கல்லூரி உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.,யுமான டி.ஆர்.பாலுவின் மகன், மன்னார்குடி எம்.எல்.ஏ., ராஜாவுக்கு சொந்தமாக தஞ்சை அருகே "கிங்ஸ்' பொறியியல் கல்லூரி உள்ளது. மதுரையில் அழகிரி மற்றும் தயாநிதிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமாக ஐந்து கல்லூரிகள் உள்ளன.
இதேபோல, மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் என சிலர் வெளியில் தெரிந்தும், பலர் வெளியே தெரியாமலும் பள்ளி, கல்லூரிகளை நடத்துகின்றனர்.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் நடத்தும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களை மட்டுமே போராட்டத்தில் ஈடுபடுத்தியிருந்தால், தமிழகமே ஸ்தம்பித்து இருக்கும்.
தி.மு.க., நடத்திய போராட்டத்தை இந்தியாவே திரும்பி பார்த்திருக்கும். சமச்சீர் கல்விக்காக தி.மு.க., நடத்திய போராட்டம் வெற்றியடைந்திருக்கும். தி.மு.க., தலைமையை இந்த முக்கிய தலைவர்களே ஏமாற்றிவிட்டனர்.கட்சியின் மூலம் செல்வந்தராக மாறிய இவர்கள், இன்னும் வருமானம் பார்ப்பதிலேயே குறியாக இருப்பதுதான் உண்மை.ஆரம்பத்தில், மாணவர்களால் தி.மு.க., வளர்ச்சியடைந்தது. தி.மு.க., நடத்திய ஆட்சியினால், மாணவர்களின் ஆதரவு இல்லாமல் போனது இந்த போராட்டம் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.தி.மு.க., நடத்திய முதல் போராட்டம் முற்றிலும் கோணல் போராட்டமாகி விட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment