Friday, July 29, 2011

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் வழக்கம்போல நடைபெற்றன: 95 சதவீத மாணவர்கள் வருகை தந்தனர்

சமச்சீர் கல்விக்கு ஆதரவாக போராட்டம் அறிவித்து இருந்தபோதிலும் நேற்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல நடைபெற்றன. 95 சதவீத மாணவ- மாணவிகள் வந்திருந்தனர்.  
 
 `சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தி 29-ந்தேதி (நேற்று) அறப்போராட்டம் நடைபெறும் என்றும் இதில் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் வகுப்புகளை புறக்கணிக்கவேண்டும் என்றும் பெற்றோர்களும் ஆதரவு தரவேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
இந்த அறிவிப்பையொட்டி எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் பாதுகாக்க அந்தந்த கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரிடம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனைத்து பள்ளிகளும் பாதுகாப்புடன் நடைபெற பாதுகாப்பு கேட்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி, தொடக்ககல்வி இயக்குனர் ப.மணி ஆகியோர் அறிவுரை வழங்கி இருந்தனர்.  
 
 இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடங்கள் முன்பு போலீஸ் அதிகாரிகள் ரோந்து சுற்றி வந்தனர். பள்ளிக்கூடம் செல்லும் ஆசிரியர்கள், மாணவர்களை யாராவது தடுத்து நிறுத்துகிறார்களா என்று போலீசார் கண்காணித்தனர். இதற்காக அவர்கள் காலை 7 மணி முதல் ரோந்து சுற்றி வந்தனர். இதன்காரணமாக பெரும்பாலான பள்ளிகளின் முன்பு ஆசிரியர்களையோ அல்லது மாணவர்களையோ தடுக்க யாரும் இல்லை.
 
பள்ளிக்கூடங்களுக்கு ஆசிரியர், மாணவர்கள் தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை. சில மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பள்ளியின் செயல்பாடு நேரத்தை போர்டில் எழுதி வைத்திருந்தனர். அதாவது காலை 8-20மணிக்கு முதல் மணிஅடிக்கப்படும், காலை 8-25மணிக்கு 2-வது மணி அடிக்கப்படும் என்றும், காலை 8-30மணி முதல் 8-45மணிவரை பிரார்த்தனை நடைபெறும் என்றும்,காலை 11-45 மணி முதல் 12-20 வரை சாப்பிட ஒதுக்கப்படும் என்றும், பிற்பகல் 3-30மணிக்கு பள்ளி விடப்படும் என்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது.   இதனால் எந்த பிரச்சினையும் இன்றி ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்கு சென்றனர்.
 
அங்கு வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்றன. ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்கு வந்த பின்னர் மாலை வகுப்பு முடியும்வரை வெளியில் செல்லவில்லை. தமிழ்நாடு முழுவதும் எத்தனை சதவீதம் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர்? என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:-
 
   "29-ந்தேதி (நேற்று) தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளும் திறந்திருந்தன. ஆசிரியர்கள் வருகை தந்தனர். மாவட்டம் வாரியாக முதன்மை கல்வி அதிகாரிகள் மாணவர்கள் வருகை சதவீதத்தை தந்துள்ளனர். எத்தனை மாணவ-மாணவிகள் வந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் 95 சதவீத மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வந்துள்ளனர்.
 
கோவை மாவட்டம் சரவணப்பட்டி, தருமபுரி மாவட்டம் ஒட்டம்பட்டி, காஞ்சீபுரம் மாவட்டம் மொரப்பாக்கம், கடலூர் மாவட்டம் வடலூர், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஆகிய இடங்களில் பள்ளிகளுக்கு சென்ற மாணவர்களை சில அரசியல் கட்சியினர் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் மாணவ- மாணவிகள் அதை பொருட்படுத்தாமல் பள்ளிகளுக்கு வந்து சேர்ந்தனர்.'' இவ்வாறு வசுந்தராதேவி தெரிவித்தார்.
 
தொடக்க கல்வி இயக்குனர் ப.மணியிடம் கேட்டதற்கு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொடக்க கல்வி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறந்திருந்தன. எந்தவித அசம்பாவிதமும் இன்றி பள்ளிகள் நடைபெற்றன. ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் வந்திருந்தனர். மாணவர்கள் 94 சதவீதம்பேர் வந்திருந்தனர்'' என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...