2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா உள்பட சிலர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
தயாநிதி மாறன் 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தொலைத் தொடர்பு துறை மந்திரியாக இருந்த போது, 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்த ஏர்செல் நிறுவனத்தின் தலைவர் சிவசங்கரனின் விண்ணப்பத்தை பரிசீலிக்காமல் தாமதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிவசங்கரனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறுதான் வற்புறுத்தப்பட்டதாக கூறினார். அப்படி ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் விற்கப்பட்டதை தொடர்ந்து, மாக்சிஸ் நிறுவனம் தயாநிதி மாறனின் குடும்ப நிறுவனத்தில் முதலீடு செய்ததாக சி.பி.ஐ. விசாரணையின் மூலம் தெரிய வந்தது.
இந்த பிரச்சினை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, தயாநிதி மாறன், தான் வகித்து வந்த மத்திய மந்திரி பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், தயாநிதி மாறன் முன்பு தொலைத் தொடர்பு மந்திரியாக பதவி வகித்த போது அவரிடம் தனிச் செயலாளராக இருந்த கே.சஞ்சய் மூர்த்தியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இமாசலபிரதேச மாநில பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தற்போது அந்த மாநிலத்தில் நிர்வாக சீர்திருத்த துறையின் செயலாளராக இருந்து வருகிறார்.
தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு துறை மந்திரியாக இருந்த போது நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பற்றி அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மாக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தயாநிதி மாறனால் தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாக சிவசங்கரன் கூறி இருக்கும் புகார் பற்றியும் கே.சஞ்சய் மூர்த்தியிடம் அவர்கள் விசாரித்தனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணை நேற்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக் கோர்ட்டில் நடைபெற்றது. இதற்காக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுவான் டெலிகாம் நிறுவன அதிபர் சாகித் பல்வா மற்றும் சிலர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு இருந்தனர். நீதிபதி ஓ.பி.சைனி வருவதற்கு முன் அவர்கள் தங்கள் வக்கீல்களுடன் பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது நடுத்தர வயதுடைய ஒரு நபர் தனது செல்போன் கேமரா மூலம் அவர்களை படம் எடுத்தார். உடனே சாகித் பல்வா அந்த நபரின் பக்கம் திரும்பினார். இதை கவனித்த போலீசார் பாய்ந்து சென்று புகைப்படம் எடுத்த நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அந்த நபர் யார்? என்று போலீசாரிடம் நிருபர்கள் கேட்ட போது, அவர் சி.பி.ஐ. யைச் சேர்ந்தவர் என்று கூறிய போலீசார், அவருடைய பெயர் மற்றும் அவரைப்பற்றிய விவரங்களை வெளியிட மறுத்து விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment