Thursday, December 31, 2015

கோபிநாத்.. கூச்சமில்லாத பொம்மை! : உடைபடும் உண்மைகள்!


விஜய் டிவி “நீயா நானா” பார்த்து ரசித்து கலங்கி அழும் ரசிகரா நீங்கள்? அவசியம் இந்த கட்டுரையை படியுங்கள்.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவிஞரும் எழுத்தாளருமான கார்த்திக் புகழேந்தி இந்த நிகழ்ச்சி குறித்து தனது முகநூல் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
“இந்த நிகழ்ச்சியில் தங்கள் நிறுவன ஊழியருக்கே வயதானவர் வேடமிட்டு பேச வைக்கிறார்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை கூட்டத்தில் கலந்துவிட்டு அவர்களைப் பிழியப் பிழிய அழவைக்கிறார்கள்” என்று அதிர்ச்சி கருத்துக்களையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதோ அவரது கருத்து:

“நீயா? நானா? நிகழ்ச்சி பற்றிய அதிருப்தியை எழுதலாமா வேண்டாமா என்ற கேள்வி நான்கைந்து நாட்களுக்கு மேலாக மனதைக் குடைந்துகொண்டேதான் இருக்கிறது.

ஒண்ணு அழவைப்பாங்க; இல்ல சண்டைபோட வைப்பாங்க என்பதெல்லாம் கடந்து ஆக்கப்பூர்வமாக சில கருத்துகள் தான் அந்நிகழ்ச்சியின் மீதான விமர்சனங்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

கடந்தவாரம் “உட்கார்ந்து வேடிக்கைபார்த்ததில்” நீயா நானாவின் பல குட்டுகளை அனுபவப்பூர்வமாக உணர முடிந்தது.  கலந்துகொண்ட மற்ற நண்பர்களும் தங்கள் கசப்பனுபவங்களைக் கொட்டியும் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பரிந்துரைத்தவரின் மீதிருந்த மரியாதையும், தன்னார்வலர்களைச் சந்திக்க வாய்ப்பமையும் என்ற எண்ணத்திலும் சென்றிருந்தேன்.

காலவரையில்லாமல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்களின் நேரத்தை தின்று தீர்ப்பதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. மாலை 5.30க்கு தொடங்கவேண்டிய ஒளிப்பதிவு 8.00மணிக்குத் தொடங்கியது. 11மணிக்கு முடியும் என அறிவுறுத்தப்பட்ட நிகழ்ச்சி நள்ளிரவு 2.30மணி வரைக்கும் நீண்டுகொண்டே போனது.

ஊடக தர்மத்தில் நேரம் ஒரு பொருட்டில்லை என்றாலும் வெளியூர்களிலிருந்து அழைக்கும் நபர்களைக் கருத்தில் கொண்டு கொஞ்சம் அதுபற்றிய வருத்தங்களோ, உணர்வோ இல்லாமல் நடந்துகொள்வது நாங்கள் அடைய வேண்டிய உயரங்களை எல்லாம் அடைந்து விட்டோம் நீங்களென்ன சுண்டைக்காய் என்பது போலத்தான்.

ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை கூட்டத்தில் கலந்துவிட்டு அவர்களைப் பிழியப் பிழிய அழவைப்பது. அவர்கள் மூலம் ஒரு கனமான சூழலை உருவாக்கிவிட்டு மற்ற பெண்களை நோக்கி கவனத்தைத் திருப்பி அவர்களையும் அழச்செய்வது. தப்பித் தவறி அழுதுவிட்டால் போதும் “மைக்கை அவர்கிட்டே கொடுங்கள்” என்று விடாமல் சொல்லுங்க எப்படி இருக்கு உங்கள் மனநிலை சொல்லுங்க என்று துன்புறுத்துவது.

நாற்பது சொச்சம் இருக்கைகளை நிரப்பி இருப்பவர்கள் நிலை ஜென் நிலைதான். யார் யாரை எங்கே உட்கார வைப்பது என்ற தேர்ந்தெடுத்த பட்டியலை வைத்து இயக்குனருக்கு முன்கூட்டியே தகவல்கள் போய்விடும். “லகான் படத்தில் இவன் நம்மாளு இவன் பக்கம் பவுண்டரி அடி புடிக்க மாட்டான்” என்பது போல அவரை வைத்து தங்கள் ஸ்க்ரிப்ட்டைப் பேச வைத்துவிடுவது.
கௌரவ அழைப்பாளர்களிடம் பட்டுக்கோட்டைக்கு வழிகேட்க, அவர் கொட்டைப்பாக்கு விலை இவ்வளவு என்பார். உடனே அங்கிருந்து இயக்குனர் சூப்பர் சொல்லி கை குடுங்க என்று நெறியாளர் கோபியை உசுப்பிவிட, நம்மவர் உட்கார்ந்த இடத்திலிருந்து உணர்ச்சிபொங்க எழுந்துவந்து, “அருமை இதான் எதார்த்தம் கையக்குடுங்க உங்க பேரு என்ன” என்று இயக்குனர் செய்யச் சொன்னதை அப்படியே அப்பட்டமாக நடிக்குட நாசாமா போனவனுங்களா” என்று தலையில் அடித்துக்கொள்ள வேண்டியதுதாம்போது வாய்மூடி மௌனிகளாக மற்றவர்கள் இந்த நாடகத்தை வேடிக்கைபார்த்து விட்டு ”.

வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் வரிசையில் “இவர்” எங்கப்பா வந்தாரு என்று நண்பர் ஒருவர் கேட்டார். அங்கே அமர்ந்திருந்தது நம்ம கிஷோர் கே சுவாமி. நண்பரை எப்படி கலாய்க்க முடியும் அதனால் தான் புதிய தலைமுறையில் தமிழிசை சவுந்தர்ராஜன் சொன்ன “அதே கதையை” எடுத்துச் சொன்னதும் என்னை முறைத்துக்கொண்டே நகர்ந்தார். எவ்வளவு டிராபிக் ஜாம்கள்.

கேமிராக்களுக்குப் பின்னே உட்கார்ந்து இயக்குனர் நம் கருத்துகள் மீது கோலோச்சுவதாகட்டும், நீ என்னய்யா/ம்மா புதுசா கருத்து சொல்றது, எங்களுக்கு உங்கள் வாயிலிருந்து என்ன வேண்டுமோ அதைச் சொல்லுங்கள் அதற்காகத்தானே உங்களை அழைத்துவந்தோம் என அதிகாரத் தொனியில் போட்டுவாங்குவது என்று அத்தனை நாடகத்தனமும் நம் கண்முன்னே பல்லைக்காட்டும் நிகழ்ச்சி தான் நீயா நானா? கார்த்திக் புகழேந்தி.



ரியாலிட்டி ஷோ. டாக் ஷோக்களில் கலந்துகொள்பவர்களை மகா மட்டமான மனநிலையோடு நடத்தும் நடைமுறை நீயா நானாவுடையது என்பது என் சொந்தக் கருத்தாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

முன்னர் கலந்துகொண்டவர்கள் கூட இந்தப் பதிவை ஒரு குறுஞ்சிரிப்போடுகூட கடந்துபோகலாம். யார் கண்டது. நிமிட நேரங்களில் தொலைக்காட்சியில் வருகிறோம் என்ற ஒரே தேவைக்காக ஊடக அழிச்சாட்டியங்களை வாய்திறந்து பேசாமல் இருப்பது நியாயமானதாகப் படவில்லை.

நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மழைவெள்ளத்தில் இயங்கிய தன்னார்வலர்கள், என்.ஜி.ஓக்கள், மற்றும் பொதுமக்கள் ஆகிய தரப்புகளிலிருந்து சிலரை அழைத்துவந்து “மழை கற்றுக்கொடுத்த பாடம் என்ன?” என்பதுபோன்ற தலைப்பைச் சூட்டி அதன் மூலம் இந்த அரசாங்கம் வெள்ள நிவாரணப் பணிகளில் விரைந்து செயல்பட்டு நோய் பரவாமல் தடுத்திருக்கிறது என்று ஒரு மருத்துவர் வாயாலே சொல்லவைத்து உஷ்ஷ்ஷ்ஷ்… ஒரு பக்கா நாடகம்.

ஆதங்கத்தோடு வடசென்னை பற்றிய கருத்துகளையோ, இருளர்கள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய பேச்சையோ, கடலூரில் நடந்த அடாவடிகளைப் பற்றிய கருத்தையோ நீங்கள் முன்வைக்கவே முடியாத கூடத்தில் அரசியல் ஜால்ராகளை மட்டும் அடி பின்னி எடுக்கலாம். கொஞ்சம் அங்கங்கே, மானே தேனே அழுகை. எக்ஸ்ட்ரா பிட்டிங்காக “வாலண்டியர்ஸ் உங்களை நீயா நானா மனதாரப்பாராட்டுகிறது” என்று பசப்பு வார்த்தைகள் இதெல்லாம் தான் அன்றைய நிகழ்ச்சியில் வேகவைக்கப்பட்டது.

மாற்றுக்கருத்துகள் எங்கள் டி.ஆர்.பியை ஏற்றுமெனில் அதுபோதும் என்ற மனநிலையோடு ரட்சகர் வேடம்போட்டுக்கொண்டு கேள்விகளை முன்வைத்து, தங்களுக்குச் சாதகமான பதிலை நம் மனதில் பதிய வைப்பதன் மூலம் நம் ஆழமான கருத்துகளுக்கும், ரோசத்திற்கும் ஆண்மைநீக்கம் செய்துவிடும் இந்நிகழ்ச்சியைத் தான் சமூகமாற்றத்திற்கான நிகழ்ச்சிகளில் முதன்மையானதாக நம்பிக்கொண்டிருக்கிறது ஒருபாதித் தலைமுறை.

இன்னும் சொல்லாத நிறைய ஏமாற்றுவேலைகள் இருக்கிறது. தங்கள் நிறுவன ஊழியருக்கே வயதானவர் வேடமிட்டு முன் வரிசையில் உட்கார வைத்து விசமக் கருத்துகளை கலந்துவிடுவது தொடங்கி, ஏகப்பட்ட சித்துவேலைகளைக் கைக்கொண்ட இவ்விளம்பரதாரர்களின் நிகழ்ச்சி ஆனமட்டும் ஒரு ஆள்பிடிக்கும் கும்பலாக மாறிக் கொழுத்து, தங்களுக்கு எதிரான கருத்துகளை ஒழித்துக்கட்டி, இன்றைக்கு மக்களின் சுய அறிவைச் சிதைக்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்துகொண்டிருக்கிறது என்பதே என்னளவில் உணர்ந்தது.

இங்கே கோபிநாத் ஒரு பொம்மை. அவரை இயக்கும் எல்லாம்வல்ல வலிமையைக் கைக்கொண்ட இயக்குனர் மற்றும் நிர்வாகம் அனைத்திற்கும் கூச்சமே இல்லாமல் தலையாட்டும் பொம்மை. அவரைத்தான் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நீயா நானா புகழ் கோபிநாத் என்று பேனர் கட்டி அழைக்கிறார்கள் என்றபோது சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.”

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...