Monday, August 1, 2016

‘தாய்ப்பால்’ என்னும் அருமருந்து!- 'உலக தாய்ப்பால் வாரம்’



உலகின் ஆதி உணவு, தாய்ப்பால்தான். எப்போதும் அதற்கு ஈடான உணவு என்று எதுவும் இல்லை. உயிர் வாழும் கடைசி மணித்துளிகள் வரையிலான ஆரோக்கியத்தை நிர்ணயிப்பது, பிறந்த சில நொடிகளில் குழந்தை பருகும் தாய்ப்பால்தான். வானளவு மகத்துவம் கொண்ட தாய்ப்பாலையும், அன்னையரையும் போற்றும் வகையில், ஆகஸ்ட் முதல் வாரம் ‘உலக தாய்ப்பால் வாரம்’ ஆகக் கொண்டாடப்படுகிறது.
தாய்ப்பால் குறித்த சந்தேகங்களைத் மனதில் தேக்கி வைத்திருக்கும் அன்னையரும், எதிர்காலத்தில் தாய் என்ற நிகரற்ற பொறுப்பேற்கவுள்ள இளம் பெண்களும் அறிந்துகொள்ள, தாய்ப்பால் குறித்த சிறப்புக் குறிப்புகள் இங்கே..!
குழந்தைக்கான முதல் உணவு, தாய்ப்பால். குழந்தையின் உடலுறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சியடைய, புரதச்சத்து நிறைந்த தாய்ப்பால் மிக அவசியம். சுகப்பிரசவம் என்றால் குழந்தை பிறந்த அரைமணி நேரத்திற்குள்ளும், அறுவை சிகிச்சை மூலமாகப் பிறந்த குழந்தை என்றால் இரண்டு மணி நேரத்திலும் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும்.
குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது அவசியம். உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நா சபையின் குழந்தைகள் நல கூட்டமைப்பின் ஆய்வு முடிவுகளின்படி, தாயின் பால்சுரப்பினைப் பொருத்து குழந்தைக்கு 3 வயது வரையில் தாய்ப்பால் கொடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீம்பால் தொடங்கி 3 வயது வரையில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், நோய்க்கிருமிகளிடம் இருந்து சிறப்பான பாதுகாப்பு கிடைக்கப்பெறுவார்கள்.
முதல் ஆறு மாதத்துக்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே உணவு, தண்ணீர்கூட கொடுக்கத் தேவையில்லை. அதன் பிறகு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
பிறந்த குழந்தைக்கு, பசுவின் பாலோ பவுடர் பாலோ தாய்ப்பாலுக்கு இணையான சத்தைக் கொடுக்கக்கூடியது அல்ல என்பதுடன், அளவு, இடைவெளி என கொடுக்கப்படும் முறைகளால் அது சிசுவுக்கு பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகும் இயற்கை உணவு.
குழந்தையின் புத்திக்கூர்மை, மூளைச் செயல்திறன், சுறுசுறுப்பு ஆகியவற்றை நிர்ணயிக்கும் கருவியாக தாய்ப்பால் செயல்படுவதாக உலக சுகாதார நிறுவனமான WHO உரக்கச் சொல்கிறது. மேலும், தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளுக்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்கிறார்கள் மருத்துவர்கள்.
குழந்தையின் அழுகை, சிரிப்பு, ஸ்பரிசம் என இவையெல்லாம்தான் தாய்க்கு பால் சுரப்பினை அதிகப்படுத்தும். இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் இயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட ஓர் அற்புத பந்தம்.
பாலூட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு லிட்டர் தண்ணீர்வரை அருந்த வேண்டியது அவசியம். சத்தான, சரிவிகித உணவினை வேளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் சேய்க்கு மட்டுமல்ல, தாய்க்கு செய்யும் நன்மைகள் பல. பாலூட்டுவதன் மூலம் அந்தத் தாய்க்கு பிரசவத்துக்குப் பிறகான உடல் எடை குறைப்பு இயற்கையாக நிகழும். கருத்தரித்தல் தவிர்க்கப்படும். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் கோபம் தடுக்கப்படும். மிக முக்கியமாக, பாலூட்டும் பெண்களுக்கு பிற்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படுகின்றன.
ஆகவே, அன்பான அம்மாக்களே, எதிர்கால அம்மாக்களே... அழகு போய்விடுமோ என்ற தவறான எண்ணத்தால், உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் முதல் உணவான, முக்கிய உணவான, இணையற்ற உணவான தாய்ப்பாலை கொடுக்கத் தவறிவிடாதீர்கள். தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமே, பெண்களிடம் தாய்ப்பால் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான். வளமான சந்ததியை உருவாக்கும் பொறுப்பு உங்களிடம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...