Friday, March 15, 2019

பூஜ்ஜியம்: இடப்பக்கமும், வலப்பக்கமும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சிறப்பு பேட்டி.

ஜெயலலிதா இருந்தால், இந்நேரம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பிரசாரத்தை துவக்கி இருப்பார். தற்போதைய தலைமை தடுமாறுகிறதா?

அது, அவருடைய கொள்கை. வேட்பாளரை அறிவிப்பார்; மாற்றுவார். தேர்தலில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு என, கடைசி நாள் உள்ளது. அதற்கு முன், வேட்பாளர்களை அறிவிக்க 
வேணடும்; அவ்வளவு தான். எனவே, ஏன் முன்னதாக அறிவிக்கவில்லை என, கேட்பது சரியல்ல. தலைமை தடுமாற்றம் என்ற, பேச்சுக்கு இடமில்லை.

இரட்டை தலைமை என்பதால், முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படுகிறதா?



இரட்டை தலைமை இருந்தாலும், ஒரே கருத்து தான். தற்போதைய தலைமை, இரட்டை குழல் துப்பாக்கி. அதன் இலக்கு, துாரம், வேகம் அனைத்தும் ஒன்று தான்.



ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த, பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சி
களை, கூட்டணியில் சேர்த்தது ஏன்?

அரசியலில் விமர்சனம் செய்தவர்கள், கூட்டணியில் சேருவது; கடுமையாக விமர்சனம் செய்தவர்கள், கட்சிக்குள் வருவது; கட்சியின் முக்கிய பொறுப்பிற்கு வருவது போன்றவற்றை, கடந்த காலங்களில் கண்டுள்ளோம். இதில், எதுவும் புதுமை இல்லை.
ஜெயலலிதா தலைமையில் தனி அணி ஆரம்பித்த போது, மறைந்த காளிமுத்து பேசியதை, யாராலும் ஏற்க முடியாது. அவரையே, ஜெ., மன்னித்தார்; பதவி கொடுத்தார். அவர் உடல் நலமின்றி இருந்தபோது, ஐதராபாதில் இருந்து விமானம் பிடித்து பார்க்க வந்தார். அரசியல் விமர்சனம், காலம் பூராவும் இருக்க வேண்டும் என்பது கிடையாது.

இதே பாணி, தினகரனுக்கு பின்பற்றப்படுமா?


மற்ற கட்சிகள் விமர்சனம் என்பது, புறநோய். தினகரன் விமர்சனம் என்பது, அக நோய்; புற்றுநோய். தினகரனை முற்றிலுமாக, ஜெ., ஒதுக்கி வைத்திருந்தார். வீட்டுக்கு வர, தடை விதித்திருந்தார். ஜெ., மறைவுக்கு பின், அவர் வந்து சேர்ந்தார்.

'தமிழக அரசுக்கு தர வேண்டிய நிலுவை தொகைகளை தராமல், மத்திய அரசு இழுத்தடிக்கிறது. கஜா புயலுக்கு கேட்ட நிவாரணம் அளிக்க வில்லை' என, பா.ஜ., மீது குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு, தற்போது, கூட்டணி சேர்ந்துள்ளீர்களே?


'கஜா' புயலை பொறுத்தவரைக்கும், தற்காலிக நிதி, நிரந்தர பரிகார உதவி கேட்டோம். தற்காலிக நிதியுதவியை வழங்கி விட்டனர். நிரந்தர உதவியை வழங்குவர் என, எதிர்பார்க்கிறோம். காங்., ஆட்சியாக இருந்தாலும், பா.ஜ., ஆட்சியாக இருந்தாலும், நிதி வழங்குவதில், ஒரே மாதிரி தான்.

ஜெ., மறைவுக்கு பின், இ.பி.எஸ்., அரசு செயல்பாடு இல்லாமல், முடங்கி இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே?


முதல்வர், இ.பி.எஸ்., அனைவரும் விரும்பும் அரசாக நடத்தி வருகிறார். ஜெ., காட்டிய வழியில், சிறப்பான ஆட்சியை, அவர் தந்து வருகிறார்.

அமைச்சர்கள், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதா?

காய்க்கிற மரம் கல்லடி படும். எதிர்க்கட்சிகள், தங்களை வளர்த்துக் கொள்ள, ஆளும் கட்சியை 
குறை கூற, வாயை திறந்தால்,அவர்கள் பயன்படுத்தும், முதல் வார்த்தை ஊழல். இது தான் தற்போது நடக்கிறது. தமிழக அரசை பொறுத்தவரை, வெளிப்படையான ஆட்சி நடக்கிறது. அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை.

ஜெ., இருந்தபோது, எப்போது மாற்றுவாரோ என்ற பயம், அமைச்சர்களுக்கு உண்டு. தற்போது, பயமின்றி, தன்னிச்சையாக செயல்படுகிறீர்களா?

அப்போது, 'அடிமையாக உள்ளனர்; வாயை திறக்க பயப்படுகின்றனர்' என, எதிர்க்கட்சிகள் கூறின. தற்போது, பேச ஆரம்பித்ததும், அடக்கம் இல்லை என்கிறீர்கள். எது சரி என்று, நீங்களே சொல்லுங்கள்.

அ.தி.மு.க., கூட்டணிக்கு, மக்களிடம் வரவேற்பு இருக்குமா?

இ.பி.எஸ்., எளிமையானவர். அமைதியாக, ஆர்ப்பாட்டம் இல்லாமல், ஆட்சி நடத்தி வருகிறார். எதையும் புரிதல் இல்லாமல் கூறுவதோ, அறிவிப்பை வாபஸ் பெறுவதோ இல்லாமல், சிறப்பான ஆட்சியை தருகிறார். ஏழைகளின் நண்பனாக உள்ளார்.

அ.தி.மு.க.,விற்கு தனிப்பட்ட செல்வாக்கு குறைந்ததால், கூட்டணி அமைத்தீர்களா?

பாம்பு சிறியதாக இருந்தாலும், பெரிய தடி கொண்டு அடிக்க வேண்டும் என்பது பழமொழி. ஏனெனில், பாம்பு தப்பி விடக் கூடாது.

தி.மு.க., கூட்டணியை, எப்படி பார்க்கிறீர்கள்?


கருணாநிதி இருந்தவரை, அக்கட்சிக்கு இருந்த மதிப்பு, மரியாதை வேறு. ஸ்டாலின் தலைமை ஏற்ற பின், அக்கட்சி தலைகீழாக மாறியுள்ளது. இது, மக்களின் கருத்தாக உள்ளது. தலைமைப் பண்பு, அவரிடம் இல்லை. சட்டையை கிழித்து வந்து நிற்கிறார்.
சட்டசபையில் வெளிநடப்பு செய்வதையே, தொழிலாக வைத்துள்ளார். பேட்டி கொடுக்கும்போது, 'ரோஷம் இருக்கா, மானம் இருக்கா' என்று கேட்பது, தலைவருக்குரிய பண்பல்ல. ஆளும் கட்சியின் குறைகளை, நாகரிகமான முறையில், சுட்டிக்காட்ட வேண்டும்.தி.மு.க., கூட்டணியை பொறுத்தவரை, ஓட்டு வங்கி இல்லாத கட்சிகள் இணைந்துள்ளன. தி.மு.க., மற்றும் அதனுடன் இணைந்துள்ள தலைவர்கள், மக்களிடம் செல்வாக்கை இழந்தவர்கள்.
அவர்களின், ஓட்டு வங்கியும் சரிந்து உள்ளது. தி.மு.க.,வுடன் இணைந்துள்ள கட்சிகளின் எண்ணிக்கை, இடப்பக்கம் போடப்படும் பூஜ்ஜியங்கள். அ.தி.மு.க.,வுடன் இணைந்துள்ள கட்சிகள், வலப்பக்கம் போடப்படும் பூஜ்ஜியங்கள்.

அ.ம.மு.க.,வால், அ.தி.மு.க., வெற்றி பாதிக்கப்படுமா?


தேர்தல் பரபரப்பில், அடங்கி போன கட்சி, அ.ம.மு.க., களத்தில் இப்போதே, காணாமல் போய் விட்டது.அக்கட்சியால், எந்த பாதிப்பும் இல்லை.
வட மாவட்டங்களில் மட்டும் செல்வாக்காக உள்ள, பா.ம.க.,விற்கு ஏழு தொகுதிகள் அதிகமில்லையா?

கொடுப்பது, கொடுக்காதது, கட்சி தலைமை எடுக்கிற முடிவு. இதில், என்ன அதிருப்தி உள்ளது. யார் வேண்டும் என நினைக்கிறோமோ, அவர்களுக்கு கொடுக்கிறோம்.

தே.மு.தி.க., மற்றும் த.மா.கா.,விற்காக காத்திருந்தது ஏன்?


தேர்தலை பொறுத்தவரை, ஒரு கட்சிக்கு, இரண்டு ஓட்டு இருந்தால் கூட, அந்த ஓட்டு, வேறு கட்சிக்கு சென்றால், எங்கள் கட்சி, அந்த இரண்டு ஓட்டோடு, கூடுதலாக ஒரு ஓட்டு வாங்கினால் தான், வெற்றி பெற முடியும். எனவே, எந்த ஓட்டையும் இழக்க விரும்பவில்லை.

தி.மு.க.,வை போல, அ.தி.மு.க., விலும் ஏராளமான வாரிசுகள், 'சீட்' கேட்டுள்ளனரே?

நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல், பிரியங்கா என வருவதை, வாரிசு அரசியல் என்கிறோம். அதேபோல், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, மருமகன் சபரீசன் என்பதை, வாரிசு 
அரசியல் என்கிறோம். எங்கள் கட்சியில், தலைமையில் வாரிசு இல்லை. 
தேர்தலில் போட்டியிடுவதை, வாரிசு என்று கூற முடியாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...