Monday, March 18, 2019

அனுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு இங்கே பதில்:

ரஜினி அவர்களின் ரசிகர்களை பாஜகவுக்கு வாக்கு செலுத்த மாரிதாஸ் தந்திரம் செய்கிறார் என்று சிலர் கூறுகிறார்களே?
ஒரு கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர் - அதற்கு என்ன உங்களால் செய்ய முடியும் என்று யோசிக்கவும் அதைத் தான் நான் செய்கிறேன். என்னால் நரேந்திர மோதி அவர்கள் பிரதமராக வேண்டும் என்று 10பேர் கூடுதலாகச் சிந்தித்தால் கூட அது தான் என் முயற்சியின் வெற்றி. அந்த வகையில் ரஜினி அவர்கள் ரசிகர் பெரும் சதவீதம் இங்கே இருக்கிறது - அதை நரேந்திர மோதி அவர்களுக்கு வாக்காக மாற்ற நான் முயற்சி செய்வதில் எந்த தவறும் இல்லை.
ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்து ஆதரவு கேட்பது என் கடமை - அது சரியா என்று சிந்திக்க வேண்டியது ரஜினி அவர்களின் ரசிகர்கள் கடமை. அவ்வளவு தான்.
ரஜினி ரசிகர்களைப் பகைத்துக் கொண்ட திமுக போல் முட்டாள்தனமாக அரசியல் செய்வதை நான் விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை நம்மால் கூடுதலாக 10வோட்டு சரியான வழியில் வாங்கி கொடுக்க முடியும் என்றால் அதை முழுவதும் முயல வேண்டும் அவன் தான் சரியான தொண்டன். நான் அதே மனப்பான்மையில் தான் இதைச் செய்கிறேன்
எனவே ஆம் ரஜினி ரசிகர்களை நரேந்திர மோதி அவர்களுக்கு வாக்கு செலுத்தக் கேட்டுக் கொள்கிறேன் அதற்காக முயற்சிக்கிறேன். ரஜினி அவர்கள் ரஜினி ரசிகர்கள் நோக்கி இதைச் செய்யாதே மாரிதாஸ் என்று சொன்னால், நிச்சயம் நிறுத்தி கொள்வேன். ஆனால் ஒரு மிகச் சிறந்த தேசியவாதியான தலைவர் ரஜினி அவர்கள் என் முயற்சியை நிறுத்தமாட்டார்.
----------------------------------------------------------
திராவிட கட்சிகளே மொத்தமாக எதிர்த்துப் பேசிய மாரிதாஸ் இன்று அதிமுகவுக்கு ஆதரவாகப் பேசுகிறார்? இது முரண் இல்லையா?
நீங்கள் கேட்பதால் கூறுகிறேன் அதிமுக ராஜேந்திர பாலாஜி என்ற அமைச்சரால் அவருடைய ஆதரவு கும்பலால் என் தொழில் நேரடியாக பாதிக்கப்பட்டது. ஓராண்டுக்கு மேல் இன்னும் எனக்கு அந்த பிரச்சனை முடியவில்லை. இந்த பிரச்சனை சார்ந்து மத்திய அமைச்சர் வரை விவாதம் சென்றும் இன்றும் தீரவில்லை. இது விவரம் அறிந்த சிலர்க்கு நன்கு தெரியும். நான் நினைத்தால் ராஜேந்திர பாலாஜி அவர் கும்பல் அட்டகாசத்தை என்றோ உடைத்து எழுதி இருக்க முடியும். அதைச் செய்யாததற்குக் காரணம்
ஆம் பாதிக்கப்பட்டுள்ளேன் ஆனால் என் தனிப்பட்ட பாதிப்பை அரசியலாக்கி விட விரும்பவில்லை. பல கோடி மக்கள் வாழ்வு மேம்பட நரேந்திர மோதி என்ற மனிதர் மீண்டும் பிரதமர் ஆக இதைச் சகித்துக் கொண்டுள்ளேன் தவிர "இரண்டு திராவிட கட்சிகளும் ஒரே குளத்தில் ஊறிய இரு மட்டைகள்". ஆனால் திமுக என்ற கொடூரமான தீய சக்தியை விட அதிமுக கொஞ்சம் தேவலை அவ்வளவு தான் என் எண்ணம்.
எனவே இந்த கேள்வி சரியான புரிதல் இல்லாமல் கேட்கப்படுகிறது.
----------------------------------------------------------
நேரடியாகக் கூறுங்கள் காசு வருகிறதா இல்லையா???
நான் பேச செல்லும் இடங்களுக்கு கூட பைசா வாங்கும் நபர் அல்ல.
என்னிடம் நரேந்திர மோதி அவர்களை ஆட்சிக்குக் கொண்டுவரத் தீவிரமாக வேலை செய்யும் 40க்கும் மேற்பட்ட சிறந்த புத்திசாலிகள் இருந்தனர். ஆனால் அவர்கள் வேலை செய்யும் சூழலுக்குத் தேவையான அடிப்படை நிதி எங்களிடம் கிடையாது. கடந்த வாரம் வரை செலவு போக மீதம் அமைப்பின் தொகை 18,000ரூபாய் தான் இருந்தது. எனவே இதற்கு மேல் என்னால் இழுத்துச் செல்ல முடியாது என்பதால் அவர் அவர் இஷ்டம் போல் வேலை செய்யக் கூறிவிட்டேன். இதற்குக் காரணம் நிதி இல்லாதது.
இது எங்கள் நிலை. அதற்காக எதையும் எவரும் நிறுத்தவில்லை.
எனக்கு உதவி கேட்டதும் செய்வது இரண்டே நபர்கள் தான், அதில் ஒருவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை - இன்னொரு நபர் இன்றும் நான்கேட்டால் தட்டாமல் செய்யும் நபர். அவர்கள் இன்றும் எனக்கு உதவுகிறார்கள் அவர்களால் முடிந்த அளவு. அதை கொண்டு என்னால் முடிந்த அளவு சமாளிக்கிறேன். மற்றவர் தாங்களாக வந்து சிறு சிறு உதவி செய்வர்.
அதனால் தான் Youtube என் Channel விளம்பரம் அனுமதித்துள்ளேன். முடிந்த அளவு யாரையும் எதிர்பார்க்காமல் நிதி நானே எனக்கு கிடைக்கும் அளவு திறமையாக கட்டமைத்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்ததால் தான் விளம்பரம் செய்ய விட்டுவிட்டேன். அதில் இருந்து ஒரு தொகை கிடைத்தால் அது தவறு இல்லையே.
ஆக நிச்சயம் காசு தருகிறார்கள் என்பது சுத்த முட்டாள் தனமான பேச்சு. காசுக்காக எவரிடமும் நான் சென்று நிற்கவும் மாட்டேன், அதை எதிர்பாத்து நான் எழுதவும் இல்லை வீடியோ வெளியிடுவதும் இல்லை. யாரும் உதவவே இல்லை என்றாலும் என் பணி நிற்காது.இது என் இயற்கையான குணம்.
-----------------------------------------------------------
உங்களைப் பலரும் மிக அதிகம் விமர்சனம் செய்கிறார்கள். அதிலும் திமுக தீவிரமாக விமர்சனம் செய்கிறது. மனுச புத்திரன் போன்றவர்கள் தூண்டி விடுவதாக செய்தி. நீங்கள் இவர்களை எப்படிச் சமாளிக்கிறீர்?
விமர்சனம் என்பது வேறு அவதூறாக அசிங்கமாகப் பேசுவது என்பது வேறு. திமுக என்ற கட்சியும் சரி அதன் தாய்க் கழகமான திக என்ற கூட்டமும் சரி விமர்சனம் எல்லாம் செய்யத் தெரியாது அவதூறாகப் பேச மட்டுமே தெரியும். இல்லை வெறுப்பு கிளப்புவர் அதுவும் இல்லை என்றால் மிரட்டுவார். அவ்வளவு தான் இவர்கள்.
விமர்சனம் செய்வோர் என்ன செய்யவேண்டும்???? நான் கொடுக்கும் ஆதாரங்களில் இருக்கும் குறைகள் அதற்குத் தக்க ஆதாரங்களுடன் கூடிய விளக்க வெளியிட வேண்டும். அது என்றாவது இவர்கள் செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்??? மாட்டார்கள்.நேரடியாக வடக்கு வாழுது தெற்கு தேய்கிறது , 15 லட்சம் எங்கே , மோடி தமிழருக்கு எதிரானவர் , மோதி சிறுபான்மையினருக்கு எதிரானவர் , மோடி அதற்கு எதிரானவர் இதற்கு எதிரானவர் என்று வெறும் குற்றச்சாட்டுக்கள் மட்டுமே முன்வைப்பார். அதிலும் ஒரு ஆதாரம் இருக்காது - வெறும் வெறுப்பு மட்டுமே இருக்கும்.
எனவே இவர்கள் மிரட்டல் எல்லாம் பல பார்த்தாகிவிட்டது. அதற்குப் பயந்து விலக முடியாது. திமுக வீழ்த்த வேண்டும் காரணம் மொழி இனம் என்று மக்களைத் திசை திருப்பி கொள்ளை அடிக்கும் கும்பல் அது - கம்யுனிஸ்ட் சிந்தனை நாடு முழுவதும் வீழ்த்த வேண்டும் அதற்குக் காரணம் பெரும் அழிவை உருவாக்க கூடிய அதன் தோல்வி அடைந்த பொருளாதார கொள்கையும் தேசத்திற்கு எதிரான சிந்தனையும்.
இவை எல்லாமே சித்தாந்தம் சார்ந்த மோதல்கள். ஸ்டாலின் அவர்களையோ இல்லை கம்யுனிஸ்ட் தலைவர்கள் மீதோ நான் தனிப்பட்ட வெறுப்பு பேசியது இல்லை. அதையும் ஞாபகம் கொள்ளுங்கள்.
என்னை சில பிஜேபி காரர்களும் ரஜினி அவர்கள் ரசிகர்களுமே கூட விமர்சனம் செய்ய தான் செய்கிறார்கள். இது இயற்கை.
---------------------------------------------------------------------
பாஜக அரசுக்கு இந்த அளவு ஆதரவாகப் பேசும் மாரிதாஸ் ஒரு குறை கூட கூறுவது இல்லையே? இது சரியா? ஒரு கட்சிக்கு ஆதரவாகப் பேசுவது எப்படிச் சரி???
நான் சுமன் போன்ற போலி நடுநிலையாளன் இல்லை. செய்தி நிறுவனம் என்ற பெயரில் விகடன், நக்கீரன் ஆரம்பித்து thehindu, NDTV வரை ஒரு கட்சிக்கு மறைமுகமாக வெக்கமே இல்லாமல் வேலை செய்யும் போது நான் வெளிப்படையாக தான் நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்று ஆதாரக்கிறேன். ஆக நான் மனதில் ஒன்று வைத்துக் கொண்டு நடிக்கவில்லை. வெளிப்படையாகத் தான் ஆதரிக்கிறேன்.
என் புத்தகம் வெளியிடும் போது அப்பட்டமாக நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன் என்று பெயர் வைக்கப் பலரும் இது தேவையான இன்றைய சூழலில் இந்த தலைப்பு அவசியமா என்று கேட்டவர் உண்டு. நான் கூறிய பதில் "அது தானே புத்தகம் முழுவதும் இருக்கிறது. பின் அதில் என்ன வேண்டி இருக்கிறது மறைக்க" - பொய் சொன்னால் உண்மைக்கு மாறாக எழுதினால் சரி பதுங்கலாம். சொல்வது உண்மை பின் எதற்குத் தயக்கம்.
நான் போலி நடுநிலை வேசம் போடவில்லை,எது சரி என்று எனக்குப் பட்டதோ அந்தப்பக்கம் நிற்கிறேன் அதுவும் ஆதாரத்துடன். ஆதாரம் இல்லாமல் வெற்று கோசம் போடுவது இல்லை நான். 50க்கும் மேற்பட்ட அரசு நிர்வாகங்களில் உள்ள 20000மேற்படப் புள்ளிவிவரம் அது கொண்ட உண்மை என்னிடம் உண்டு. எனவே பாஜகவை ஆதரிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை தவறாகவும் தோன்றவில்லை.
------------------------------------------------------------------------
அடுத்து என்ன என்ன செய்யத் திட்டம்?
தேர்தல் முடியும் வரை தேர்தல் வேலை தான். வேறு இல்லை தினமும் 8மணி நேரம் ஒதுக்கி வேலை செய்யத் திட்டம். தொழில் சார்ந்த விஷயங்களை என் சகோதரர்களிடம் விட்டுவிட்டு முழுவதும் இது தான் செய்யப் போகிறேன். ஒரு கை பார்த்துவிடுவது என்று முடிவு.
திமுக காங்கிரஸ் தலைவர்களைப் பிரச்சாரம் ஆரம்பம் ஆகும் போது எதிர் பிரச்சாரம் என்னிடம் இருந்து இருக்கும். எனவே 20ஆம் தேதி முதல் தினமும் இவர்களுக்குப் பதில் கொடுத்து என் பிரச்சாரம் விடியோவாக இருக்கும். இறுதி இரண்டு வாரங்கள் முழுமையாகக் களத்தில் நிற்போம் என் குழுவினர்.
திமுக காங்கிரஸ் கட்சிக்கு கிருஸ்தவர்கள் வாக்கு முழுமையாகக் கிடைக்க அனைத்து விதமான வேலைகள் நடக்கும் போது அதை எதிர்த்து இந்துக்கள் வாக்கு ஒன்றிணைக்கும் வேலையையும் செய்வோம். இந்த முறை லயோலா கல்லூரியும் - நாங்களும் நேரடியாக மோதும் தேர்தல் இது. லயோலா முகத்திரையைக் கிழிக்க வேண்டிய நேரம் இது. எனவே அதுவும் இந்த பிரச்சாரத்தில் முக்கியப்பங்கு வகிக்கும். இதையும் வெளிப்படையாகத் தெரிவிக்கிறேன்.
ஏன் என்றால் இதை மத அரசியலாக்கும் வேலையை நான் செய்யவில்லை லயோலா போன்ற ஒரு டஜன் கல்லூரிகள் வேலை செய்கிறது. அதைச் சகித்துக் கொண்டு செல்ல முடியாது இனியும். எனவே ஒரு கை அவர்களையும் பார்ப்பது என்று முடிவு.
----------------------------------------------------------------
அடுத்த புத்தகம் வெளியிடப் போவதாகத் தகவல்கள் வருகிறதே ??
ஆம் கூடிய விரைவில். அற்பன் நக்சல் எந்தவிதம் நாட்டிற்கும் மக்களுக்கும் ஆபத்தானவர்கள் என்பதை விரிவாக எடுத்து மாணவர்களுக்கும் புரியும் வண்ணம் தொகுக்கப்பட்டுள்ள புத்தகம் அது. போராட்டம், புரட்சி என்பதாலேயே அவை புனிதமாகாது என்று மாணவர்களுக்கு உணர்த்த வேண்டிய காலகட்டம் இது என்பதால் அதை மையமாகக் கொண்டு என் கட்டுரைகளைச் சேகரித்து ஒன்றாகத் தொகுத்து வெளியிட இருக்கிறோம்.
-----------------------------------------------------------------
இறுதியாக :
பல வகையில் நான் அதிகம் அழுத்தத்தில் இருக்கிறேன் என்பதால் அனைவருக்கும் என்னால் பதில் நேரத்திற்குக் கொடுக்க முடியவில்லை. அதை மரியாதைக் குறைவாக எவரும் எடுத்துக் கொள்ளவேண்டாம். கொஞ்சம் தேர்தல் முடியும் வரை தேசியவாதிகள் அனைவரும் வேற்றுமை மறந்து, தனிப்பட்ட லாப நோக்கங்களை விட்டு ஒன்றுபட்டு நின்று நரேந்திர மோதி அவர்களை ஆட்சிக்குக் கொண்டுவர அர்ப்பணிப்போடு வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...