வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள, மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில், பெரும்பாலான தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டு, தனக்கு சாதகமான, எம்.எல்.ஏ.,க் கள் அதிகம் உள்ள, வட மாவட்டங்களில், தி.மு.க., அதிக தொகுதிகளில் களம் இறங்குகிறது.

தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, முஸ்லிம் லீக், கொ.ம.தே.க., ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தவிர்ப்பு
தி.மு.க., 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பலமான கூட்டணி என, தி.மு.க., அறிவித்தாலும், கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில், தி.மு.க.,விற்கு செல்வாக்கு குறைவாக இருப்பதால், அங்கு போட்டியிடு வதை, கவனமாக தவிர்த்துள்ளது. மேற்கு மண்டலத்தில்,சேலம்,கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, பொள்ளாச்சி, கரூர் ஆகிய, லோக்சபா தொகுதி கள் உள்ளன. இவற்றில், சேலம், நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளில் மட்டுமே, தி.மு.க., களம் இறங்குகிறது.
நீலகிரி தொகுதியில், ஏற்கனவே, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா போட்டியிட்டிருந்த தால், மீண்டும் போட்டியிட விரும்பி, அந்த தொகுதியை பெற்றுள்ளார். பொள்ளாச்சி பாலியல் விவகாரம், தங்கள் கட்சிக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில், அந்த தொகுதியில் போட்டியிட, தி.மு.க., முன்வந்துள்ளது.
மற்ற தொகுதிகளை, வலுக்கட்டாயமாக, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. அந்தப் பகுதியில், அ.தி.மு.க.,விற்கு செல்வாக்கு அதிகம். அதேபோல், அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளான, பா.ம.க., - பா.ஜ., - தே.மு.தி.க., ஆகியவற்றுக்கும் குறிப்பிட்ட சதவீதம், ஓட்டு வங்கி உள்ளது.எனவே,அங்கு வெற்றி பெறுவது சுலபமல்ல என்பதால், தி.மு.க., விஷப்பரிட்சை யில் இறங்கவிரும்பவில்லை.
அதனால், கோவையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், திருப்பூரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ஈரோட்டை, ம.தி.மு.க.,விற்கும், நாமக்கல்லை, கொ.ம.தே.க.,வுக் கும், கரூரை காங்கிரசுக்கும் தள்ளி விட்டுள்ளது.
அதேபோல், தென் மாவட்டங்களிலும், தி.மு.க., அதிக தொகுதி களில் போட்டியிடவில்லை. தென் மாவட்டங்களை பொறுத்தவரை, குமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாத புரம், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் தொகுதிகள் உள்ளன.இவற்றில், துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல் தொகுதிகளில் மட்டும், தி.மு.க., களம் இறங்குகிறது.
கன்னியாகுமரி,விருதுநகர், தேனி, சிவகங்கை தொகுதிகள், காங்கிரசுக்கு தரப்பட்டு உள்ளன. மதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ராமநாதபுரம், முஸ்லிம் லீக்கிற்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.மேற்கு மாவட்டம், மற்றும் தென் மாவட்டங்களில், அதிக தொகுதிகளில் களம் இறங்காத, தி.மு.க., வட மாவட்டங்களில், அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது. தி.மு.க., போட்டி யிடும், 11 தொகுதிகள், வட மாவட்டங் களிலும், இரு தொகுதிகள், டெல்டா மாவட்டங்களிலும் உள்ளன.
வெற்றி பெற்றது
ஒட்டுமொத்தமாக பார்த்தால், வன்னியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில், தி.மு.க., இம்முறை களம் இறங்குகிறது. அதற்கு காரணம், 2016 சட்டசபை தேர்தலில், வட மாவட்டங்களில் தான், தி.மு.க., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அப்பகுதிகளில் தற்போது, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அதிகம் இருப்பதாலும், பா.ம.க., மீது, வன்னியர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாலும், வட மாவட்டங்களில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என, தி.மு.க., கணக்கு போடுகிறது. மேற்கு மண்டலத்திலும், தென் மாவட்டங்களிலும், நிறைய தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தது, அப்பகுதி, தி.மு.க.,வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: மேற்கு மண்டலத்திலும், தென் மாவட்டங்களிலும், அ.தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. முதல்வர், மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், அ.தி.மு.க.,அங்கு அதிக கவனம் செலுத்தும். எனவே, வட மாவட்டங்களில், இம்முறை, எங்களுக்கு வெற்றி எளிதாகும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அழகிரியின், 'உள்ளடி' பயம் காரணமா?
மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் போட்டியிடாமல், தி.மு.க., ஒதுங்கிக் கொண்டது. கட்சியில் அழகிரி இல்லாத நிலையில் அவரது, 'உள்ளடி' வேலைகளுக்கு பயந்து இத்தொகுதிகளை, காங்., உட்பட கூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க., தள்ளிவிட்டதா என, கேள்வி எழுந்துள்ளது.
தி.மு.க.,வில் அழகிரி இருந்த போது, மதுரை, திருமங்கலம் உட்பட, தென் மாவட்டங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் அக்கட்சி எளிதாக வென்றது. இந்த வெற்றிக்கு, அழகிரி வகுந்த வியூகமே காரணம் என்று பாராட்டி, அவருக்கு, தென் மண்டல அமைப்புச் செயலர் பதவியை கருணாநிதி வழங்கினார்.
இந்நிலையில், 2011 சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், கட்சிக்கு எதிரான கருத்துக் களை தெரிவித்ததால், அழகிரி நீக்கப்பட்டார். 2014 லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, வைகோ உள்ளிட்ட, ம.தி.மு.க., வேட்பாளர்கள், அழகிரியை சந்தித்து ஆதரவு திரட்டினர். அப்போது, 'தி.மு.க.,வுக்கு மூன்றாம் இடம் தான்' என, அழகிரி, தன் கோபத்தை வெளிப்படுத்தினார். அதன்படியே, சில தொகுதி களில், தி.மு.க., மூன்றாம் இடத்துக்கு தள்ளப் பட்டது. பின், 2016ல், மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும், தி.மு.க., தோல்வி அடைந்தது.
இந்நிலையில், வரும் தேர்தலில், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிட்டு, தி.மு.க., ஒதுங்கிக் கொண்டது. தி.மு.க., கூட்டணியில், மதுரையில், மார்க்சிஸ்ட் வேட்பாளராக எழுத்தாளர், சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். ராமநாதபுரம் முஸ்லிம் லீக் கட்சிக்கும்; தேனி, சிவகங்கை, விருதுநகர் தொகுதிகள் காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தின், 'அரசியல் தலைநகர்' என, கருதப்படும் மதுரையில், அ.தி.மு.க., போட்டி யிடவுள்ள நிலையில், தி.மு.க.,வும் களம் இறங்கும் என, கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், சுற்றியுள்ள தொகுதிகளையும் கூட்டணி கட்சி களுக்கு தாரை வார்த்துள்ளது. அழகிரி உள்ளடி வேலை பார்ப்பார் என்ற அச்சத்தில், தி.மு.க., ஒதுங்கிக் கொண்டதா என, தொண்டர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
No comments:
Post a Comment