Sunday, March 10, 2019

தமிழகத்தில் மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை.

 ''தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும். தேர்தல் வழக்கு காரணமாக மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை,'' என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு,இடைத்தேர்தல்

சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் மார்ச், 19ல் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 26 கடைசி நாள். மறுநாள் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். மனு வாபஸ் பெற மார்ச், 29 கடைசி நாள். ஓட்டுப்பதிவு ஏப்.,18ல் நடக்கும். தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும். ஓட்டு எண்ணிக்கை மே 23ல் நடக்கும். தமிழகத்தை பொறுத்தவரை 21 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. லோக்சபா தேர்தலுடன் 18 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். தேர்தல் வழக்கு காரணமாக, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் நடக்காது.

பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், ஓசூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், நிலக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்துார், பரமக்குடி, விளாத்திகுளம் ஆகிய 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கும். தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரி, ஒட்டபிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி; அரவக்குறிச்சியில் கீதா; திருப்பரங்குன்றத்தில் சரவணன் ஆகியோர் தாக்கல் செய்த மனு விசாரணையில் உள்ளது. ஒரே கட்டமாக ஒரே நாளில் லோக்சபா தேர்தலுக்கும், சட்டசபை இடைத்தேர்தலுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெறும். ஓட்டு எண்ணிக்கையும் ஒரே நாளில் நடக்கும்.

மதுரையில் ஏப்., 18ல், மீனாட்சி தேர் திருவிழா நடக்கும் விபரம் தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்படும். தேர்தலுக்கு தேவையான, ஓட்டுப்பதிவு இயந்திரம் உள்ளது. இடைத்தேர்தலிலும் வாக்காளர்கள் தாங்கள் ஓட்டு போட்ட சின்னம் அச்சாவதை கவனிக்கும் வசதியுள்ள, ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. பறக்கும் படை, கண்காணிப்பு குழு போன்றவை அமைக்கப்படும். வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள், மீண்டும் போட்டியிட தடை இல்லை.

கடந்த லோக்சபா தேர்தலில், ஒவ்வொரு தொகுதியிலும், இரண்டு செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இம்முறையும் பின்பற்றப்படும். சமூக வலைதளங்களில், பதிவிடப்படும் தகவல்கள் கண்காணிக்கப்படும். புகார் வந்தால், உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, சத்யபிரதா சாகு கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...