Friday, March 8, 2019

சுங்கச்சாவடிகளில் முறைகேடு... அம்பலம்!; ஆர்.டி.ஐ., மூலம் வெளியானது:நலச்சங்கங்கள் போராட முடிவு.

விதிமீறி மூன்று இடங்களில், சுங்கச்சாவடிகள் அமைத்து, வாகன ஓட்டிகளிடம், முறைகேடாக கட்டணம் வசூலிக்கப்பட்டது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 10 ஆண்டுகளாக நடந்த முறைகேடு குறித்து விசாரித்து, அந்த சுங்கச்சாவடிகளை உடனே அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சென்னை, பழைய மாமல்லபுரம் சாலையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், அடையாறு மத்திய கைலாஷ் முதல் மாமல்லபுரம் வரை, ஆறுவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.


இதில், மத்திய கைலாஷ் முதல், சிறுச்சேரி வரை, 20 கி.மீ., துாரம்; சிறுசேரியில் இருந்து மாமல்லபுரம் வரை, 25 கி.மீ., துாரம் என, இரண்டு நிலைகளாக, 'ஐ.டி., காரிடார்' திட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.ஐ.டி., நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் சாலை, ஐ.டி., காரிடார் என, அழைக்கப்படுகிறது.'ஐ.டி., காரிடார்' திட்டம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ள முடிவு செய்து, 2003ல், அரசாணை வெளியிட்டது. 


முதல் நிலைக்கு, 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.நில ஆர்ஜிதம் செய்ய கடும் எதிர்ப்பு கிளம்பியதால், 2008ல் தான், சாலை விரிவாக்கப்பணி முடிக்கப்பட்டது. அச்சாலைக்கு, ராஜிவ்காந்தி சாலை எனவும், பெயர் சூட்டப்பட்டது.இந்த நிதியை, வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கும் வகையில், ராஜிவ்காந்தி சாலையில், பெருங்குடி, சோழிங்கநல்லுார், சிறுசேரி, பல்லாவரம்- - துரைப்பாக்கம் ரேடியல் சாலை, மேடவாக்கம் - -அக்கரை சாலை ஆகிய பகுதிகளில், ஐந்து சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன.


அங்கு, 2008ம் ஆண்டு முதல், சுங்க வரி வசூலிக்கப்பட்டு, இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை, கட்டணமும் உயர்த்தப்பட்டு வருகிறது.ஆறுவழி சாலையான பின், ராஜிவ்காந்தி சாலையில், ஏராளமான, ஐ.டி., நிறுவனங்கள் வர துவங்கின. இதனால் இச்சாலையில், வாகன போக்குவரத்து, 10 ஆண்டுகளில், பல மடங்கு அதிகரித்தது.

1.20 லட்சம் வாகனங்கள்




ராஜிவ்காந்தி சாலையில், மத்திய கைலாஷில் இருந்து, கேளம்பாக்கம் வரை, தற்போது, நாள் ஒன்றுக்கு, 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்கின்றன. அச்சாலையில், 200க்கும் மேற்பட்ட மாநகர பஸ்கள், தினமும், ஆறு நடைகள் இயக்கப் படுகின்றன. 


சுங்கச்சாவடிகளில், 10 வினாடிகளுக்கு, ஒரு வாகனம் கடந்து செல்வதால், ராஜிவ்காந்தி சாலையில், தினமும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதனால், பள்ளி, கல்லுாரி, பணிக்கு செல்வோர், தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பிரச்னைக்கு, துரைப்பாக்கம் பகுதியில் உள்ள சுங்கச்சாடிகளை அகற்றுவது தான், நிரந்தர தீர்வு என, கருத்து எழுந்தது.


ராஜிவ்காந்தி சாலையில், மாநகராட்சி எல்லைக்குள் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுவது தொடர்பாக, பொதுமக்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.தேர்தல் நேரங்களில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும், சுங்கச்சாவடி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, வாக்குறுதி அளிப்பர். ஆனால், இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லை.


இந்நிலையில், ராஜிவ்காந்தி சாலையில் மட்டுமே சுங்கச்சாவடிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்ற விபரம், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இது குறித்து, துரைப்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கங்கத்தின் கூட்டமைப்பைச் சேர்ந்த, பிரான்சிஸ் கூறியதாவது:சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள, சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது, வாகன ஓட்டுகளின் பல ஆண்டு கோரிக்கை.

முறைகேடு




துரைப்பாக்கம், ரேடியல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை, முறைகேடாக கடப்பதற்காக, தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், துரைப்பாக்கம், விநாயகாநகர், ஆனந்தாநகர் குடியிருப்பு வழியாக பயணிக்கின்றன.அவற்றை, கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள், இரைச்சல், புகை உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். 


மேலும், அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.இதனிடையே, சுங்கச்சாவடி குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், தகவல் கோரினோம். அதில், அதிர்ச்சியான செய்தி கிடைத்தது.அதாவது, ராஜிவ்காந்தி சாலையில் மட்டுமே, சுங்கச்சாவடிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ரேடியல் சாலை, மேடவாக்கம்- - அக்கரை சாலையில், சுங்கச்சாவடி அமைக்க, அனுமதிக்கவில்லை என, தெரியவந்தது.


ஆனால், சாலை மேம்பாட்டு நிறுவனத்தினர், இந்த இரண்டு சாலைகளில், 3 சுங்கச்சாவடிகள் அமைத்து, ஆண்டுக்கணக்கில், பல கோடி ரூபாய், முறைகேடாக, வாகன ஓட்டிகளிடம், கட்டணம் வசூலித்திருப்பது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.எனவே, ராஜிவ்காந்தி சாலையை தவிர்த்து, மற்ற இணைப்பு சாலைகளில் உள்ள மூன்று சுங்கச்சாவடிகளையும், உடனடியாக அகற்ற வேண்டும்.


அவற்றை அகற்றும் வரை, நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். சுங்கச்சாவடிகளை அகற்ற, நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர், சுங்கச்சாவடி கொள்ளைக்கு தீர்வு அளிக்காவிட்டால், லோக்சபா தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்து உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்நிலையில், பொதுநலச்சங்கங்களின் கூட்டமைப்பினர், இன்று முதல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...