சென்னையின், முக்கிய சாலைகளில் ஒன்றான, சர்தார் படேல் சாலையில், 2.2 கி.மீ., துாரத்தை கடக்க, அரை மணி நேரத்திற்கும் மேல் ஆவதால், சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
சென்னையில், நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப, சாலையின் அகலமும், கட்டமைப்புகளும் இருக்கிறதா என்றால், இல்லை என்பதே நிதர்சனம்.இதனால், தினமும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வேலைக்கு செல்வோரும், மாணவ - மாணவியரும், கடும் துயர் அனுபவித்து வருகின்றனர்.
வி.ஐ.பி.,க்கள்
சென்னையின் முக்கிய சாலைகளின் ஒன்றான, சர்தார் படேல் சாலையின் நிலைமையும் இது தான். இந்த சாலையில், கவர்னர் மாளிகை சந்திப்பில் இருந்து, மத்திய கைலாஷ் சந்திப்பு வரை, 2.2 கி.மீ., துாரம் கொண்டது.தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு, சைதாப்பேட்டை உள்ளிட்ட, வெவ்வேறு சாலைகளில் இருந்து, அடையாறு, கோட்டூர்புரம் மற்றும் ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., நோக்கி செல்லும் வாகனங்கள், சர்தார் படேல் சாலை வழியாக தான் செல்கின்றன.
குறிப்பாக, இ.சி.ஆர்., வழியாக புதுச்சேரி மற்றும் ஓ.எம்.ஆரில் உள்ள, ஐ.டி., நிறுவனங்கள் செல்லும் வாகன ஓட்டிகள், துரித பயணத்திற்கு, சர்தார் படேல் சாலையை தேர்வு செய்கின்றனர். இதனால், இந்த சாலையில், ராஜ்பவன் சந்திப்பில் இருந்து, மத்திய கைலாஷ் வரை, கடுமையான போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.
மேலும், கவர்னர், முதல்வர் உள்ளிட்ட, வி.ஐ.பி.,க்கள், இதே சாலை வழியாக செல்கின்றனர். அப்போது, இந்த சாலையில் வாகனங்கள் செல்லாத வகையிலும், வேகத்தை குறைக்கவும், போலீசார், ஆங்காங்கே நின்று ஒழுங்குபடுத்துவர்.
நெரிசல் குறையும்
வி.ஐ.பி.,க்கள் சென்றதும், பல்வேறு சாலையில் இருந்து வரும் வாகனங்களால், சர்தார் படேல் சாலை, ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத வகையில், போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது. இந்த நெரிசல், பல நேரங்களில், நந்தனம், கிண்டி வரை நீண்டு நிற்கும். மேலும், கேன்சர் மருத்துவமனை மேம்பாலத்தை ஒட்டிய, கோட்டூர்புரம் திரும்பும் சந்திப்பில், ஒரு பேருந்து மட்டும் செல்லும் வகையில் தான் சாலை உள்ளது.காலை நேரத்தில், இந்த, 2.2 கி.மீ., துாரத்தை கடக்க, அரை மணி நேரத்திற்கும் மேலாகிறது. இதனால், பணி, மருத்துவமனை மற்றும் அவசர வேலையாக செல்வோர், மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.அடையாறு நோக்கி செல்லும், சர்தார் படேல் சாலை, இரண்டு பேருந்துகள் இணையாக செல்லும் பாதையாக உள்ளன. இதை, மூன்று பேருந்துகள் செல்லும் பாதையாக மாற்றினால், நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
ராஜ்பவன் சந்திப்பில் இருந்து, மத்திய கைலாஷ் சந்திப்பு வரை, 2.2 கி.மீ., துாரத்தில், சர்தார் படேல் சாலையை ஒட்டி, மாநில நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலையம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.
விரிவாக்கம்
இதில், முதல் மூன்று நிறுவனங்கள், மாநில அரசு மற்றும் தோல் ஆராய்ச்சி நிறுவனம் மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.சாலையை ஒட்டி, இந்த நிறுவனங்களின் தடுப்புச் சுவர் தான் உள்ளது; கட்டடங்கள் இல்லை. இதில், 10 அடி எடுத்து, சாலையை விரிவாக்கம் செய்யலாம். கடந்த, 2016ல், சர்தார் பட்டேல் சாலையை விரிவாக்கம் செய்ய, போக்குவரத்து போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து, மேற்கண்ட நிறுவனங்களிடம் பேச்சு நடத்தினர்.
கோரிக்கை
அப்போது, மேம்பாலத்தின் கீழ், கோட்டூர்புரம் திரும்பும் சாலையில், சிக்னலில் நிற்காமல் வாகனங்கள் செல்லும் வகையில், 15 அடி அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதிகாரிகள் மாற்றம் காரணமாக, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.அனைத்து நிறுவனங்களும், அரசு கட்டுப்பாட்டில் உள்ளதால், புரிந்துணர்வு அடிப்படையில் இடத்தை பெற்று, சாலையை விரிவாக்கம் செய்யலாம். இதற்கான நடவடிக்கையை, போக்குவரத்து காவல் துறை, மாநகராட்சி இணைந்து எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
சோழிங்கநல்லுாரில் உள்ள, தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறேன். நான் தினமும் பணிக்கு செல்லும் வழியில், சர்தார் படேல் சாலையில் தான், கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது. வி.ஐ.பி.,க்கள் செல்லும்போது, இந்த சாலையில், ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும். சரியான நேரத்தில் புறப்பட்டாலும், நெரிசல் காரணமாக, பல நாட்கள் தாமதமாக பணிக்கு சென்றுள்ளேன். சாலையை விரிவாக்கம் செய்தால், நெரிசல் குறையும்.
உதவிய ரேஸ்கோர்ஸ் நிர்வாகம்
கிண்டியில் மெட்ரோ ரயில் பணியின்போது, அண்ணாசாலையில் இருந்து, கத்திப்பாரா நோக்கி செல்லும் அனைத்து, மாநகர பேருந்துகளும், ரேஸ்கோர்ஸ் வழியாக திருப்பி விடப்பட்டன. கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து, வெளியே வரும் இடமாக இருப்பதால், கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பேருந்துகள் நிறுத்த, தனி பாதை அமைக்க முடிவு செய்து, 2.10 கோடி ரூபாயில், 1,476 அடி நீளம், 40 அடி அகலத்தில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதற்கான இடத்தை, ரேஸ்கோர்ஸ் நிர்வாகம், மாநகராட்சிக்கு இலவசமாக வழங்கியது. இடித்தபின், ரேஸ்கோர்ஸ் தடுப்பு சுவரை, மாநகராட்சி கட்டி கொடுத்தது. இது போன்று, சர்தார் படேல் சாலையை விரிவாக்கம் செய்து, மாநகராட்சியே, தடுப்பு சுவரை கட்டி கொடுக்கலாம்.
No comments:
Post a Comment