காங்., மூத்த தலைவரும், மூன்று முறை டில்லி முதல்வராக பதவி வகித்தவருமான, ஷீலா தீட்ஷித், 81, மாரடைப்பு காரணமாக, டில்லியில் இன்று(ஜூலை 20) காலமானார். அவரது இறுதிச் சடங்குகள், டில்லியில் நாளை மாலை நடக்கின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர், ஷீலா தீட்ஷித். காங்கிரஸ் மேலிட தலைவரான, சோனியாவின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். அவர்களது குடும்ப நண்பராகவும் விளங்கியவர். எம்.பி., - எம்.எல்.ஏ.,வாகவும் பதவி வகித்தவர். ராஜிவ் பிரதமராக இருந்தபோது, பார்லிமென்ட் விவகார துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். தலைநகர் டில்லியில், காங்கிரசின் செல்வாக்கை வளர்த்தவர். 1998 லிருந்து, 2013 வரை, டில்லி முதல்வராக பதவி வகித்து, டில்லி முதல்வராக நீண்ட நாள் பதவி வகித்தவர் என்ற, சாதனையை படைத்தார்.
கேரள மாநில கவர்னராகவும் பதவி வகித்த இவர், உ.பி., யில், கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலின் போது, காங்கிரசின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், டில்லி வட கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். அப்போது, இவருக்காக, காங்., பொதுச் செயலர் பிரியங்கா மற்றும் அவரது மகன், மகள் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.சமீபகாலமாகவே, இருதய கோளாறு உள்ளிட்ட சில நோய்களால், ஷீலா தீட்ஷித், அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், இன்று(ஜூலை 20) அதிகாலை, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, டில்லி, போர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர அளிக்கப்பட்டதை தொடர்ந்து, உடல்நிலையில், ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. மாலை, மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சை பலனின்றி, அவர் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள், டில்லியில் நாளை மாலை நடக்கின்றன. மறைந்த ஷீலா தீட்ஷித்துக்கு, சந்தீப் என்ற மகனும், லடிகா என்ற மகளும் உள்ளனர்.
ஷீலா தீட்ஷித் மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, காங்., மூத்த தலைவர் சோனியா, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், காங்., பொதுச் செயலர் பிரியங்கா மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அஞ்சலி
மறைந்த ஷீலா தீக்சித் உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment