தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி 41 அக்கட்சியின் இளைஞர் அணி செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சி பொதுச்செயலர் அன்பழகன் நேற்று வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு இணையாக தமிழகம் முழுவதும் அவரது மகன் உதயநிதி தீவிர பிரசாரம் செய்தார். அவரது பிரசாரம் வாக்காளர்களை கவர்ந்ததால் அவரது உழைப்புக்கு பரிசாக இளைஞர் அணி செயலர் பதவி வழங்க வேண்டும் என மாவட்டச் செயலர்கள் சிலர் வலியுறுத்தினர். இதையடுத்து தி.மு.க. இளைஞரணி செயலராக உதயநிதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில் 'தி.மு.க. இளைஞர் அணி செயலராக பணியாற்றி வரும் சாமிநாதனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்கு பதிலாக கட்சி விதிப்படி புதிய செயலராக உதயநிதி நியமிக்கப்படுகிறார்.
கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக சாமிநாதன் நியமிக்கப்படுகிறார்' என கூறியுள்ளார். மேலும் இளைஞரணி இணை செயலராக இருந்த சுபா.சந்திரசேகர் கட்சியின் சட்டத்திட்ட திருத்தக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
நல்ல நாள் நல்ல நேரம்!
* அமாவாசை முடிந்து வளர்பிறை நாளான நேற்று மாலை 3:00 மணிக்கு மேல் நல்ல நேரம் என பிரபல ஜோதிடர் குறித்து கொடுத்த நேரத்தில் பதவி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்பகத்தில் ஒரு வாரத்திற்கு சென்னையில் உள்ள அனைத்து வார்டு நிர்வாகிகளும் உதயநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க ஏற்பாடு செய்யும்படி மாவட்டச் செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
* கடந்த 2018 ஆக. 7ல் கருணாநிதி மறைந்தார். அவரது ஓராண்டு நினைவு தினம் இன்னும் அனுசரிக்கப்படாத நிலையில் உதயநிதிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி வாழையடி வாழையாக தி.மு.க.வில் வாரிசு அரசியல் தொடரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
* உதயநிதி தலைமையில் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது.
No comments:
Post a Comment