நடப்பு, 2019 - 20ம் நிதியாண்டிற்கான, மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். அவரது முதல் பட்ஜெட் உரையில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக, நம் நாட்டை உயர்த்தும் இலக்குகளை அடைவதற்கான அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
பட்ஜெட் உரையை ஆரம்பித்த நிர்மலா, ''70 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார நாடாக உயர, 55 ஆண்டுகளை நாம் எடுத்துக் கொண்டோம். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், 70 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து, 210 லட்சம் கோடி ரூபாய் உள்ள பொருளாதாரமாக, நடப்பு நிதியாண்டில் வளர உள்ளோம். 350 லட்சம் கோடி ரூபாய், பொருளாதார நாடாக உயர, பல சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்,'' என்றார்.
பட்ஜெட் உரையை ஆரம்பித்த நிர்மலா, ''70 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார நாடாக உயர, 55 ஆண்டுகளை நாம் எடுத்துக் கொண்டோம். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், 70 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து, 210 லட்சம் கோடி ரூபாய் உள்ள பொருளாதாரமாக, நடப்பு நிதியாண்டில் வளர உள்ளோம். 350 லட்சம் கோடி ரூபாய், பொருளாதார நாடாக உயர, பல சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்,'' என்றார்.
அவரின் அறிவிப்புகளில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:
* முந்தைய, இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல, ஆண்டுக்கு, 5 லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ள தனிநபர்கள், வருமான வரி செலுத்த தேவையில்லை
* வங்கியில், 45 லட்ச ரூபாய் வரை வீட்டுக் கடன் பெறுவோருக்கு, தற்போதைய, 2 லட்சம் ரூபாய் வருமான வரி விலக்கு, 3.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
* பெட்ரோல், டீசலுக்கு, தற்போது முறையே, 17.98 மற்றும் 13.83 ரூபாய் கலால் வரியில், மேலும் 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதோடு சாலை கட்டமைப்புக்கான வரி, 1 ரூபாயும், வாட் வரி, 50 காசுகளும் அதிகரிக்கப்பட்டது. இந்த விலை மாற்றம், நள்ளிரவு, 12:00 மணி முதல் அமலானது
* தங்கம் மற்றும் விலை மதிப்பு மிக்க உலோகங்கள் மீது, 10 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி, 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தங்க நகைகளின் விலை உயரும்
* சிகரெட், புகையிலை பொருட்கள் விலை உயரும் வகையில் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது
* ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மீதான சுங்க வரி, 5ல் இருந்து, 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது
* வங்கியிலிருந்து, 1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால், 2 சதவீத வரி செலுத்த வேண்டும்
* வருமான வரி தாக்கல் செய்ய, 'பான்' எண் மட்டுமின்றி, 'ஆதார்' அடையாள எண்ணையும் பயன்படுத்தலாம்
* நாட்டை காக்கும் ராணுவத்திற்கு, 3.18 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
* நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் மற்றும் அவர்கள் நலனுக்கு, 1.39 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
* கல்விக்கு, 94 ஆயிரத்து, 853 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனம் ஏற்படுத்த, 400 கோடி ரூபாய் கிடைத்துள்ளது
* சுகாதாரத்துறைக்கு, 62 ஆயிரத்து, 398 கோடி ரூபாய்; சுற்றுச்சூழல் பேண, 2,954 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; மாசு கட்டுப்பாட்டிற்கு, 460 கோடி ரூபாய் கிடைத்துள்ளது * ரயில்வே துறைக்கு, 65 ஆயிரத்து, 837 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், 1.60 லட்சம் கோடி ரூபாய், பணிகளுக்காக திட்டமிட்டுள்ளது
* நாட்டில், 1.25 லட்சம் கி.மீ.,க்கு சாலைகள் அமைக்க, 80 ஆயிரத்து, 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது
* உள்துறைக்கு, இதுவரை இல்லாத வகையில், 1.19 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
* உள்நாட்டு முந்திரி விவசாயிகளை காப்பாற்றும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிக்கு, 45 சதவீதமாக இருந்த வரி, 90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது; இது, கடந்த பட்ஜெட்டை விட, 5,858 கோடி ரூபாய் அதிகம்
* மீன் உணவு பதப்படுத்துதல் துறைக்கு, 3,737 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
* உருக்குத் துறைக்கு, 241 கோடி ரூபாய்; நிலக்கரி துறைக்கு, 1,159 கோடி ரூபாய் கிடைத்துள்ளது
* சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறைக்கு, 11 சதவீதம் குறைவாக, 8,885 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல, பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிதியும், 23 சதவீதம் குறைந்து, 43 ஆயிரத்து, 667 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது
* பழங்குடியினர் நலத்துறைக்கு, 15 சதவீதம் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது
* சுயஉதவிக்குழு பெண்கள் ஒவ்வொருவருக்கும், 1 லட்ச ரூபாய் கடன் வழங்கப்படும்
* சுங்கம் மற்றும் கலால் வரி விதிப்பு அதிகரிப்பால், 25 ஆயிரம் கோடி அதிக வரி வருவாயை, மத்திய அரசு எதிர்பார்க்கிறது. 'சூப்பர் ரிச்' எனப்படும், கோடீஸ்வரர்கள் மீதான வரி மூலம், 12 ஆயிரம் கோடி ரூபாய் வரி, கூடுதலாக கிடைக்கும்
* மானியங்கள் எனப்படும் சலுகைகளால், மத்திய அரசுக்கு நிதிச்சுமை, 13.32 சதவீதம் உயர்ந்து, 3.01 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்
* வங்கிகளுக்கு மத்திய அரசு, 70 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்குகிறது
* புதிய துறைகளில், புதிய தொழில் துவங்குபவர்களுக்கு, வரிச்சலுகை உட்பட பல சலுகைகள் வழங்கப்படும்
* வெளியுறவுத்துறைக்கு, 17 ஆயிரத்து, 800 கோடி ரூபாய்; 'ஜல் சக்தி' எனப்படும் புதிய, நீர் வளத்துறைக்கு, 28 ஆயிரத்து, 261 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
* 'ஏர் - இந்தியா' விமான நிறுவனத்தை விற்பதற்கான நடவடிக்கை மீண்டும் துவக்கப்படும்
* உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா, ஆறாவது இடத்தில் உள்ளது; ஐந்தாண்டுகளுக்கு முன், 11வது இடத்தில் இருந்தது. மக்களின் வாங்கும் திறனில், மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக, சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ளோம். மூன்றாவது பணக்கார நாடாக உருவெடுக்க, மத்திய பட்ஜெட்டில் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு, அமைச்சர் நிர்மலா தெரிவித்தார்.
இதுபோல, பல அறிவிப்புகளை உடைய மத்திய பட்ஜெட்டை, பல தரப்பினர் வரவேற்றுள்ளனர்; எதிர்க்கட்சியினர் சாடியுள்ளனர்.
No comments:
Post a Comment