அரசு, 'இ - சேவை' மையங்களில், இடைத்தரகர்கள் குறுக்கீடு அதிகம் இருப்பதாக, சேவையின் தரத்தை மதிப்பீடு செய்த, 'ஏஜென்சி' தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை பெற, டி.என்.இ.ஜி.ஏ., என்ற, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' வழியாக, 'இ - சேவை' மையங்களை நடத்தி வருகிறது.தமிழகத்தில், 600க்கும் மேற் பட்ட, அரசு இ - சேவை மையங்கள் செயல்படு கின்றன. இதில், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உட்பட, 80க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த சேவை மையங்களின் தரம் குறித்து மதிப்பிட, கேபிள், 'டிவி' நிர்வாகம், தனியார் ஏஜன்சியை நியமித்தது. அந்த ஏஜென்சி, மையங்களின் சேவை தரத்தை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல்செய்துள்ளது.
இது குறித்து, அரசு இ - சேவை மைய அதிகாரிகள் கூறியதாவது:அரசு இ - சேவை மையங்கள் மீது, ஆறு மாதங்களில், 16 ஆயிரத்துக்கும் அதிகமாக புகார்கள் வந்தன. இதையடுத்து, சேவை மையங்களின் தரத்தை ஆய்வு செய்ய, ஏஜென்சி நியமிக்கப்பட்டது. இந்த ஏஜென்சி, சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
* முக்கியமான, இ - சேவை மையங்களில், இடைத்தரர்கள் குறுக்கீடு அதிகம் உள்ளது. அவர்களின் குறுக்கீடுகளை தவிர்க்க,நடவடிக்கை எடுக்க வேண்டும்
* தாலுகா அளவில் செயல்படும், சேவை மையங்களுக்கு, அச்சிடுவதற்கான தாள்கள், மை போன்றவற்றை, சரியான நேரத்தில் அனுப்ப வேண்டும்
* 'சர்வர்' செயல் திறனை, ஸ்திரமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
* மையங்களில் பணியாற்றும் பெண்களுக்கு, கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்; அவர்களுக்கு வழங்கும் ஊதியத்தை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு, 15க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு இ - சேவை மையங்களின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment