ஆஹா.. எப்படி ஒரு இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா.. அவரை அநியாயமாக கொண்டு பாஜகவில் தாரைவார்த்து விட்டார்களே இந்த காங்கிரஸ் தலைவர்கள் என்ற முணுமுணுப்பு அந்தக் கட்சிக்குள் விண்ணை முட்டும் அளவுக்கு எழுகிறது.
ஆம்.. தாரைதான் வார்த்து விட்டனர். தலைவர்களை மட்டுமல்ல மொத்த காட்சியையும் என்றுதான் சொல்ல வேண்டும்!
மத்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று முதல்வராக அசைக்க முடியாத செல்வாக்குடன் வீற்றிருந்தார் பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான். அப்பேர்ப்பட்ட மலையை, கடுமையான தேர்தல் உழைப்பால், காங்கிரஸ் வெற்றி பெற பாடுபட்ட இளம் தலைவர்
ஜோதிராதித்ய சிந்தியா.
பரம்பரை பரம்பரையாக காங்கிரஸ் ரத்தம் ஓடக்கூடிய குடும்பத்தில் இருந்து வந்தவர்தான். இவர் தந்தை மாதவராவ் சிந்தியா, ஜனசங்கத்தில் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். பிறகு காங்கிரசில் இணைந்தார். ஆனால், ஒரு கட்டத்தில், பாஜகவுக்கு தாவியவர்தான். அதையும் மறுக்க முடியாது. ஆனால், ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரசுக்காக உண்மையாக உழைத்தவர்.
ரத்தம், வியர்வை என அனைத்தையும் சிந்தி, ம.பி.யில் வெற்றிக்கொடி நாட்டிய இவருக்கு பரிசாக கிடைத்தது ஏமாற்றம் தான். கடைசி நேரத்தில் கமல்நாத்தை முதல்வர் ஆக்கி அழகு பார்த்தது செயற்குழுவில் பெரும்பாலும் வயதானவர்களை கொண்ட காங்கிரஸ் தலைமை..
நியாயமே இல்லை:
விவசாயம் செய்தது ஒருவர், விளைச்சலை அனுபவிப்பவர் இன்னொருவர் என்ற நிலைமையை காங்கிரஸ் கட்சியின் தலைமைதான் உருவாக்கியது. இதன் பலனை லோக்சபா தேர்தல் முடிவுகளிலும் அது கண்டது. அப்படியும் விழித்துக் கொள்ளவில்லை, நாட்டின் பழம் பெரும் கட்சி. ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு தேசிய அளவில் ஒரு நல்ல பதவியை கொடுத்து, அவரை தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வதில் தவறியது தலைமை. பத்தோடு பதினொன்னு.. அத்தோடு இதுவும் ஒன்று.. என்ற ரீதியில் ஜோதிராதித்ய சிந்தியா கழற்றி விடப்பட்டார். அவரும் மனிதர்தானே.. அந்த கோபத்தில் தான் அதிருப்தியாளர்களுடன் மனிதர் எஸ்கேப் ஆகினார்.
பாஜகவில் இணைகிறார் சிந்தியா:
இதோ இன்று ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். அவர் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் கூறுகின்றன. இது நடந்துவிட்டால் இதைவிட மகா கேவலம் காங்கிரஸ் கட்சிக்கு இருக்க முடியாது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, இன்னமும் தலைமைப் பதவிக்கு நிரந்தரமாக ஒருவரை நியமிக்க முடியாமல், உடல் நலக்குறைவு இருந்தாலும் சோனியாகாந்தி இடைக்கால தலைவராக செயல்பட்டு வரும் கட்சியில், இதைத்தான் எதிர்பார்க்க முடியும்..
இப்படி ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருக்க கூடிய ஆணவ, அகங்காரம் மிக்க (சோனியா, ராகுல் )ஒரு தலைமை மீது எந்த இளம் தலைவர்களுக்கு நம்பிக்கை வரும்? அதிலும், இளம் தலைவருக்கே இந்த கதி என்றால், அந்த கட்சியின் எதிர்காலம் இருளாக அல்லவா காட்சியளிக்கிறது. இதனால்தான், ஒவ்வொருவராக கலைந்து செல்ல ஆரம்பித்துவிட்டனர். கர்நாடகாவிலும் இப்படித்தான் நடந்தது. அங்கு காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்த நிலையில் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அமைச்சர்கள் கூட அடங்குவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால், இடைத்தேர்தலில் மக்கள் பெரும்பாலும், கட்சி மாறியவர்களைத்தான் மீண்டும் தேர்ந்தெடுத்தனர். இவ்வளவுதான் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கலைத்துவிட்டு பாஜக ஆட்சியை பிடிப்பது, காங்கிரஸ் கோட்டைவிட்ட இடத்தில் அமித்ஷா கொடி நாட்டுகிறார்.
இன்றல்ல, நாளையாவது காங்கிரஸ் முன்னேறும் என்று எதிர்பார்த்திருந்த அந்த தொண்டர்களுக்கு இளம் தலைவர்களை, இப்படி பிற கட்சிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் காங்கிரஸ் தலைமையின் மெத்தனம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்.. இது காங்கிரஸின் தோல்வி.. படுதோல்வி!!
No comments:
Post a Comment