10000 ரூபாய் இலஞ்சம் வாங்கிய நந்தினி, உதவிப் பொறியாளர், பொதுப் பணித்துறை கைது. இலஞ்சம் வாங்கிய பொழுது கையும் களவுமாக பிடித்தனர் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாிிள் - எல்லாப் பத்திரிகைகளிலும் தலைப்புச்செய்தி
தன் அருமை மகள் கைது என்று பார்த்த பாலகிருஷ்ணன் கதி கலங்கிப் போனார். அவரும் பொதுப்பணித்துறையில் தலைமைப் பொறியாளரக இருந்து ஓய்வு பெற்றவர்தான்.
என்னம்மா இப்படி ஆயிடுச்சே என்று கதறி அழுதார்.
இப்ப அழுது என்னப்பா பிரயோஜனம். நீ காட்டிய வழியை தான் பின் பற்றினான். நீ எப்படியோ சாமர்த்தியமாக தப்பிச்சுட்டே. நான் மாட்டிக்கிட்டேன் அவ்வளவுதான்.
முப்பது வருடங்களுக்கு முன்
சார் 5 பில் பாஸ் பண்ணனும் - உதவிப் பொறியாளர் சங்கர்
ஓகே அவங்க எல்லோரும் நம்ம வழக்கப்படி குடுக்க வேண்டியதைக் குடுத்துட்டாங்களா?
வாங்கியாச்சு சார்.
உடன் பில் பாஸ் செய்யப் பட்டது.
பாலகிருஷ்ணன் ரொம்ப கரெக்ட்பா, குடுக்க வேண்டியதைக் கொடுத்துட்டா, பில் டிலே ஆகாது - காண்டிராக்டர்கள்
மாதவன் ஃபோன், பாலகிருஷ்ணனுடன் வேலை பார்த்தவர்.
என்ன பாலா என்ன ஆச்சு?
தெரியலப்பா? யார் எம் பொண்ண மாட்டி விட்டான்னு தெரியல.
மாதவனும் பாலகிருஷ்ணனும் ஒன்றாகப் பொதுப்பணித்துறையில் பொறியாளர்களாகச் சேர்ந்தனர்.
பாலகிருஷ்ணன் இரண்டு கைகளையும் நீட்டி வாங்கினார். அவருடைய வாதம், நான் என்ன செய்ய, மந்திரிகள் வந்தால் அவர்கள் தங்குவது துறையின் பயணியர் மாளிகையில், ஆனால் அங்கு சாதாரண சாப்பாட்டை சாப்பிட மாட்டார்கள். அவர்கள் வந்த உடனே காவலாளி ஒடி வந்து விடுவான். அந்தக் காலக் கக்கன் போன்றவர்களா இவர்கள். அவர்களுக்கும் அவர் கூட வரும் அவர்கள் கட்சி ஆட்களுக்கும் சிக்கன் மட்டன் என்று சமைக்க வேண்டும். இரவில் உற்சாக பானம் வேறு. உயரதிகாரிகள் வந்தாலும் இதே கதைதான். ஆனால் என்ன அவர் படாடோபமாக வாழவும் சேர்த்து வாங்கினார். பிள்ளைகள் எல்லாம் விலை உயர்ந்த வாகனங்களில்தான் பவனி வருவார்கள்.
எப்படியோ மேலே உள்ள அதிகாரிகளையும் அமைச்சர்களையும் கவனித்து தன் மேல் எந்த வழக்கும் வராமல் பார்த்துக் கொண்டார்.
மாதவனுக்கும் மந்திரிகளின் தொந்தரவு உண்டு. ஆனால் அவர் செலவுகளை காண்ட்ராக்டர்களை நேரடியாக கவனித்துக் கொள்ளச் சொல்லி விடுவார். அவருக்கென்று ஒரு பைசா கூட வாங்க மாட்டார். அவர் பிள்ளைகள் இன்று அமெரிக்காவில்.
No comments:
Post a Comment