Tuesday, May 16, 2023

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு .

 அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து மோசடி தொடர்பாக மூன்று வழக்குகள் பதியப்பட்டன. அதில் ஒரு வழக்கில் செந்தில் பாலாஜி, அவரது அண்ணன் அசோக்குமார் , உதவியாளர் சண்முகம், போக்குவரத்து கழக பணியாளர் ராஜ்குமார் ஆகியோர் மீது நேரடியாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த மூன்று வழக்குகளிலும் சென்னையில் உள்ள, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் பணம் கிடைத்து விட்டதாக கூறியதையும், சமரசமாக போக விரும்புவதாகவும் கூறியதை ஏற்று செந்தில் பாலாஜி, அவரது அண்ணன் அசோக் குமார் , உதவியாளர் சண்முகம், போக்குவரத்து கழக பணியாளர் ராஜ்குமார் ஆகிய 4 பேர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் செந்தில் பாலாஜி, அவரது அண்ணன் அசோக் குமார் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை எனவும் தெரிவித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி பொறியாளர் தர்மராஜ் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி ஒய்.பாலாஜி, ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில் கார்த்திகை ராஜன் ஆகியோர் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் வேலைக்காக லஞ்சம் பெற்ற விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியாத சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில் கார்த்திகை ராஜன் என்பவர் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேவேளையில் இந்த லஞ்ச விவகாரத்தில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதிக்ககோரியும், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்ததை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கிருஷ்ண முராரி மற்றும் ராமசுப்பிரமணியம் ஆகியோர் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான போக்குவரத்து துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர். மேலும் தேவைப்படும் பட்சத்தில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும். மேலும் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய உத்தரவிட்டும் அதனை செயல்படுத்தாத சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிய மனுவை முடித்து வைத்தும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...