முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று ஆந்திரா அரசு சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட்டது. கண்டலேறு அணையில் இருந்து இப்போது நிமிடத்துக்கு 1800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையில் 840 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரிக்கு 718 கன அடி தண்ணீர் வருகிறது. இதுவரை 681 மில்லியன் கனஅடி கிருஷ்ணா தண்ணீர் வந்து இருக்கிறது. பூண்டி ஏரியில் தற்போது 1329 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
புழல் ஏரியில் 1794 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. செம்பரம்பாக் கம் ஏரியில் 2196 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 90 மில்லியன் கன அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது.
வீராணம் ஏரியில் பராமரிப்பு பணி நடந்ததால் கடந்த 4 மாதங்களாக ஏரியில் தண்ணீர் இருப்பு வைக்கவில்லை. இதனால் கடந்த 4 மாதங்களாக வீராணம் தண்ணீர் சென்னைக்கு வர வில்லை. மேட்டூர் அணை திறக்கப் பட்டதால், காவிரி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வருகிறது. இன்று காலை 1800 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏரியில் 409 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. வீராணம் ஏரியின் மொத்த உயரம் 15.60 அடி இப்போது 10.5 அடி தண்ணீர் இருக்கிறது. சென்னைக்கு வினியோகம் வீராணம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வருவதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே மீண்டும் வீராணத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட் டுள்ளது. எனவே வீராணத்தில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் குழாய் பாதையை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திங்கட்கிழமை சோதனை அடிப்படையில் வீராணத்தில் இருந்து சென்னைக்கு தண்ணீர் விடப்படுகிறது. கூடுதல் சப்ளை 8-ந்தேதி முதல் தொடர்ந்து சென்னைக்கு வீராணம் குடிநீர் வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகருக்கு சராசரியாக 685 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் சென்னைக்கு குடிநீர் சப்ளை அதிகரிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வாரியம் மூலம் தினமும் 790 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. குடிநீருக்காக மட்டும் 710 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment