Tuesday, February 23, 2016

திமுகவுக்கு, அதிமுக பதிலடி : கருணாநிதியை சட்டசபைல பாத்துருக்கிறீங்களா?

மிழகத்தின் அனைத்து பத்திரிகைகளிலும் இன்று காலை முதல் பக்கத்தை ஒரு விளம்பரம் அலங்கரித்தது. அதில், ''அம்மாவை ஸ்டிக்கர்ல பாத்துருக்கிறீங்க, பேனர்ல பாத்துருக்கிறீங்க, ஏன் டிவியில கூட பார்த்துருக்கிறீங்க... ஆனா நேர்ல பார்த்துருக்கிறீங்களா?'' என்று அந்த விளம்பரம் கேட்கிறது. உச்சக்கட்டமாக 'என்னமா இப்படி பண்றீங்களேம்மா? என்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் புகழ்பெற்ற வார்த்தையும் ஸ்லோகனாக அந்த விளம்பரத்தில் இடம் பெற்றிருக்கிறது. திமுக தரப்பில் இருந்து  கொடுக்கப்பட்ட இந்த விளம்பரம்தான் முதல்வரை இப்படி கிண்டலுடன் கேட்கிறது. 

தமிழகத்தில் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னரே திமுக விளம்பரங்களை தட்டி எறிய ஆரம்பித்திருக்கிறது. இப்போதே விளம்பரம் கொடுக்கப்பட்டால், அது தேர்தல் கணக்கு செலவில் வராது. அதனை கருத்தில் கொண்டு மக்கள் மனதில் பதிந்த குறிப்பாக இளைஞர்களையும் இளைஞிகளையும் கவரும் விதத்தில்  'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா ' என்ற வார்த்தையை பயன்படுத்தி இந்த விளம்பரம் கிரியேட்டிவிட்டியாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் இந்த விளம்பரம் மக்களிடம் எடுபடும் என்று கருதிய திமுக, இந்த ஒரு நாள் விளம்பரத்திற்காக சுமார் 18  கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்ல தொலைகாட்சிகளிலும் அடிக்கடி இந்த விளம்பரத்தை பார்க்க முடிகிறது. 

இது இப்படியிருக்க, இந்த விளம்பரம் வெளியிடப்பட்ட அடுத்த நிமிடமே அதிமுக வாட்ஸ்அப் வழியாக திமுகவுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்து விட்டது. வாட்ஸ்அப் பெஞ்ச் என்ற அந்த ஆடியோவில்,'' என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... அதை காப்பியடிச்சு திமுக காரங்க ஒரு விளம்பரம் கொடுத்துருக்கிறாங்களே... அவங்களை நெனைச்சாலே சிரிப்பு சிரிப்பா வருது. அண்ணே இந்த விளம்பரத்துக்கு 18 கோடினே , 18 கோடி செலவழிச்சுருக்காங்க.


முதல்வரை நான் நேர்ல பார்த்துருக்கேன், நீங்க பார்த்துருக்கிறீங்களானு  கேட்க, 18 கோடியானே. வேற வழி இல்ல சமூக வலைதளங்களில் அதிமுகவ அடிச்சுக்க முடியல.  வேற என்னணே செய்ய, கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை செயல்வீரர்களை நியமனம் பண்ணி அதிமுககாரங்க அமர்க்களமாக போய்ட்டுருக்காங்க. அதான் திமுகவுக்கு விளம்பரம் கூட கொடுக்கத் தெரியாம இப்படியெல்லாம் செய்யுறாங்களோனு தோணுது. இத பார்த்தா கட்சி விளம்பரம் மாதிரி தெரியலையே, சோப்பு விளம்பரம் மாதிரிலா இருக்குனு ''  என்று திமுக விளம்பரத்தை நக்கல் அடிக்கிறது. 

இப்படி தேர்தல் தேதி வெளியிடுவதற்கு முன்னரே இரு கட்சியினரும் விளம்பரத்தில் குதித்தாகி விட்டது. திமுக இன்னும் பேப்பர் விளம்பரத்தை நம்பிக் கொண்டிருக்க ,அதிமுகவோ வாட்ஸ் அப்பில் பட்டையை கிளப்பும் விதத்தில் ஆடியோவை வெளியிட்டுள்ளது. இப்போது திமுகவின் விளம்பரம் படுத்து விட,  அதிமுகவின் ஆடியோதான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறதாம். அதுபோல் வாட்ஸ் அப்பில் மற்றொரு விளம்பரத்தையும் அதிமுக பரப்பி வருகிறது. ''கருணாநிதியை நடிகைங்க கல்யாணத்துல பாத்துருப்பீங்க, கலை விழால பாத்துருப்பீங்க, மானாட மயிலாடல பாத்துருப்பீங்க, ஆனா கருணாநிதிய சட்டசபைல பாத்துருக்கிறீங்களா? ஏன் திருவாருர் தொகுதியிலயாவாவது பாத்துருக்கிறீங்களா?னு அதிமுகவின் அந்த விளம்பரம் திமுகவை பார்த்து கேட்கிறது. 

திமுக கொடுத்துள்ள இந்த விளம்பரத்தில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? என்ற வார்த்தை ஜீ டி.வியில் வரும் 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியின் முந்தைய தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் பயன்படுத்தியது. இந்த வார்த்தை தமிழகம் முழுவதுமே ரொம்ப பாப்புலர். இதனை கிண்டல் செய்து விஜய் டி.வி. நிகழ்ச்சியும் நடத்தியது. அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என லட்சுமி ராமகிருஷ்ணன், சென்னை காவல் ஆணையர் வரை சென்று புகார் கொடுத்தார். அது மட்டுமல்ல நல்ல நோக்கத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையை இப்போது ஒருவரை ஒருவர் கிண்டலடிக்க பயன்படுத்துகிறார்களே என்றும் லட்சுமி ஒரு முறை  வேதனை தெரிவித்திருந்தார். தற்போது  லட்சுமி ராமகிருஷ்ணனின் வார்த்தையை தமிழகத்தில் அதிகார உச்சத்தை பார்த்து கேட்க, திமுக தனது  விளம்பரத்தில் பயன்படுத்தியிருக்கிறது. 

இப்போது லட்சுமி ராமகிருஷ்ணன் என்ன செய்யப் போகிறார்?  தமிழகத்தின் சர்வ வல்லமை படைத்த அம்மாவையே பார்த்து கேட்க,  தான் பயன்படுத்திய வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று திருப்தி பட்டுக் கொள்வாரோ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...