Monday, February 15, 2016

தி.மு.க., - காங்., கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ஆவேசம்''தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள்,'' என, தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.
 சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி, எந்த அடிப்படையில் அமைந்துள்ளது என்ற கேள்விக்கு, இரு தரப்பிலும் விடை சொல்ல முடியாது. அதனால் தான், இந்த கூட்டணியை பொருந்தாக் கூட்டணி, கொள்கையற்ற முரண்பாடான கூட்டணி என விமர்சனம் செய்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன், மத்தியில் காங்., தலைமையிலான அரசில் தி.மு.க., இடம் பெற்றிருந்தது. அப்போதே, இரு கட்சிகளுக்கும் இடையே நிறைய முரண்பாடுகள் நிலவின. நான் கேபினட் அமைச்சராக இருந்ததால் முரண்பாடுகள் பற்றி பேசவில்லை; சகிப்புத்தன்மையோடு அமைதியாக இருந்தேன். 
ஸ்டாலின் தனி கச்சேரி:
இருந்தும் 2013ல், ஸ்டாலின் ஆலோசனைப்படி, மத்திய அமைச்சரவையில் இருந்து, தி.மு.க., வெளியேறியது. இலங்கை தமிழர் பிரச்னையை காரணம் காட்டி வெளியேறியதாக, தி.மு.க., தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.இப்படி வெளியேறியது பற்றி கேபினட் அமைச்சராக இருந்த எனக்கே முதலில் தகவல் தெரிவிக்கவில்லை. யாரை கேட்டு வெளியேறினீர்கள் என கேட்ட போதும் சரியான பதில் இல்லை.அதன்பின், லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி சேர காங்கிரஸ் முயன்றது. ஆனால் அதற்கு தடைபோட்டு, தனி கச்சேரி நடத்தினார் ஸ்டாலின். 
அவரின் முடிவு, கட்சியை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும்; தேர்தலில் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என, நான் அறுதியிட்டுக் கூறினேன்; சொன்னபடியே நடந்தது. இப்போது என்ன மாற்றம் நடந்து
விட்டது; சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க.,வும் காங்கிரசும் கூட்டணி அமைத்திருக்கின்றன. எந்த இலங்கை தமிழர் பிரச்னைக்காக, காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து தி.மு.க., வெளியேறியதோ, அந்த விஷயத்தில் இன்று வரை எந்த மாற்றமும் இல்லாத போது, இவர்களிடம் மட்டும் மாற்றம் எப்படி வந்தது. 
'2ஜி' வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்தியஅமைச்சர் ஆ.ராஜா, 'பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அனுமதி இல்லாமல், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நான் ஈடுபடவில்லை. விசாரணை என வரும் போது மன்மோகனையும் கட்டாயம் விசாரிக்க வேண்டும்' என, நீதிமன்றத்தில் கடந்த வாரம் சொல்லியிருக்கிறார். ஊழல் விஷயத்தில், முன்னாள் பிரதமரையும் சேர்த்து பழிவாங்கத் துடிக்கிறது தி.மு.க., தரப்பு. ஆனால், அதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது; ஆக, யாருக்கும் வெட்கம் இல்லை. 
நிர்பந்தம்:
தி.மு.க., - காங்., கூட்டணி பொருந்தாக் கூட்டணி. சில நிர்பந்தங்கள் அடிப்படையிலேயே இந்த கூட்டணியே ஏற்பட்டுள்ளதாக நான் அறிகிறேன். கனிமொழியை வழக்கில் இருந்து தப்பிக்க வைக்கவும்; வேறு சிலர் மீது வழக்குகள் வரக்கூடாது என்பதற்காகவும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை நிர்பந்தப்படுத்தி, கூட்டணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

கருணாநிதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்; அவர் சூழ்நிலைக் கைதியாக தவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு, இந்த கூட்டணியில் விருப்பம் இல்லை என்பதே எனக்கு கிடைத்துள்ள தகவல். ஸ்டாலினின், 'நமக்கு நாமே பயணத் திட்டம்' முழு தோல்வி அடைந்துள்ளதால், அது பற்றி பெரிதாக பேச எதுவும் இல்லை. கட்சி தொடர்பான நிறைய விஷயங்களை, நான் அதிரடியாக செய்ய வேண்டியுள்ளது; அதைப் படிப்படியாக துவங்குவேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அலட்சியப்படுத்துங்க:
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள அழகிரி, கட்சியின் வளர்ச்சியை கெடுக்கும் வகையிலும், எழுச்சியை குலைக்கும் வகையிலும் செயல்படுகிறார். அவருக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது. தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் கொள்கை கிடையாது என்றும், அ.தி.மு.க,வை அந்த கூட்டணி வெல்ல முடியாது என்றும் கூறியிருப்பது, யாராலும்
ஏற்க முடியாது. அவர் செய்யும் துரோகத்திற்கு, என் பெயரை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. அவரது கருத்துகளை, தி.மு.க., தொண்டர்கள் பொருட்படுத்த தேவையில்லை; அலட்சியப்படுத்த வேண்டும். ஸ்டாலினின், 'நமக்கு நாமே' பயணம் வெற்றி பயணம்; தி,மு.க., வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய புதுமைப் பயணம். இந்த பயணம், ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான மைல் கல்; அவரை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.கேள்வி கேட்க உரிமையுண்டு! :
தி.மு.க., பற்றி கருத்து சொல்ல நீ யார் என, என்னை யாரும் கேட்க முடியாது. ஏனெனில், இந்த கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாக உழைத்துள்ளேன்; பலமுறை சிறை சென்றுள்ளேன். நான் தவறு செய்துள்ளேன் என்று சொன்னால், அது கட்சிக்காக நடந்த தவறாகவே இருக்கும். இப்படித்தான், கட்சி மீது நான் பற்றுதலோடும்; விசுவாசத்தோடும் இருந்திருக்கிறேன். அதனால், கட்சியைப் பற்றி கவலைப்படவும், தவறாக செல்லும் போது கேள்வி கேட்கவும் எனக்கு உரிமை உள்ளது. அழகிரி

No comments:

Post a Comment