Thursday, August 4, 2016

சக உயிர்களை மதியுங்கள்..ஆன்மீகத்தை தொட்டு நடக்கும் எந்த ஒரு பிசினசும் இந்தியாவில் தோற்றே போகாது.. பெரும் வெற்றி பெறும்.. சாதாரண திருநீர் பாக்கெட், சூடம், பத்தி, அஞ்சு ரூபாய்க்கு விற்கும் பன்னீர் பாட்டிலில் இருந்து துவங்குகிறது இந்த ஆன்மீக அரசியல். நாட்ல எவன் கெட்டு குட்டிசுவரா போனாலும் இப்படி ஆன்மிகம் சார்ந்து பிழைப்பு நடத்துபவர்கள் செழிப்பாகவே இருக்காங்க.. நாமும் ஒரு பக்திமயமான சூழல் இப்படிதான் இருக்க வேண்டும் என்று பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம்.. இது திடீரென்று நடந்தது அல்ல. படிப்படியாகபக்திக்குள் வியாபாரம் நுழைந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறது.. முதலில் மனிதன் சூரியனை வணங்கினான்.. அதன் பின் மரம்.. அப்படியே அரூபமாக இருந்த கடவுளுக்கு உருவம் கொடுத்து மரத்து அடியில ஒரு கல் அது சாமி.. அதை மனிதன் தன்னை காப்பவனும் மனிதனாகவே இருக்க வேணும் என்று சிலை வடித்தான். சிலைகள் பற்றி கவிஞர்கள் பாடல் பாடினர். தங்கள் கவித்திறனை காண்பிக்க, எளிதில் மக்களை சென்றடைய, கடவுள் ஒரு கருவியாக மாறி நிறைய புராணங்கள், நிறைய கடவுள்கள், ஒவ்வொரு கடவுளுக்கும் தோன்றிய வரலாறு, அது செய்த சாகசகங்கள்.. மன்னர்களின் பெயர் நிலைக்க கடவுள்களுக்கு கோவில்.. ஆரியர்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான நம்பப்பட்ட நெருங்கிய தொடர்பு.. நாமும் கடவுளை வைத்து பயன்பெறுவோம் என்று மற்றனைவரும் களத்தில் குதித்து.. புதிய பூஜை முறைகள் அதற்கு தேவையான உபகரணங்கள் வாசனை பொருட்கள்.. பூ மாலை பாசி பொட்டு திங்கற சாப்பாடு வரைக்கும் இன்னிக்கு ஆன்மிகம் பிரிச்சு மேஞ்சுட்டு இருக்கு.. திருப்பதிக்கு போனா அத ஒரு ஸ்டேடஸ் சிம்பல் போல பார்க்க துவங்கியாச்சு.. நம்ம பக்தி என்பது இப்போது லக்சரியில் சேர்ந்திடுச்சு. எந்த சாமி பிடிக்கும்ன்னு கேட்டா யாரும் காளியாத்தா மாரியாத்தா சொல்றது இல்ல.. முருகன் பிள்ளையார் பெருமாள் சாய்பாபா சொல்வாங்க.. ஏன்னா அதுகளாம் கொஞ்சம் டீசன்ட்டான சாமிங்க.. okay fine இந்த மாதிரி மக்களோட மனச யாரு சரியா கணிச்சு வைத்து இருக்கின்றார்களோ அவங்க தான் இன்னிக்கு பெரிய குருமார்கள்.. அவர்கள் தங்களை இன்னொரு கடவுளாக முன்வைப்பார்கள்.. அதுவும் கடவுள் என்ற ஒன்றை சாடிக்கொண்டே.. எப்படிஎன்றால் அவர்கள் தங்களை கடவுள் என்று பிரகடனப்படுத்த மாட்டார்கள் சாதாரண மனிதன் என்ற அளவிலேயே வெளிக்காட்டுவார்கள் ஆனால் உங்களுக்கு அல்லாத பிற சக்திகள் அவர்களுக்கு இருப்பதாக தெரிவிப்பார்கள்.. அதை உங்களுக்கும் வழங்குவதாக பிரசங்கம் செய்வார்கள்.. உங்கள் வாழ்க்கையை வளப்படுத்துவதாக... இதுகாறும் நீங்கள் வாழ்ந்த வாழ்வு வீணானது. என்பதாக.. குருதான் தன்னுடைய சிஷ்யனை கண்டுபிடிப்பதாக.. நீங்கள் ஆயிரத்தில் ஒருவராக.. அவரின் சிஷ்யனாக கண்டுகொள்ளப்பட்டிர்கள்.. இப்படிதான் இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் அனைத்து ஆன்மீக மடங்களும் தன் அரசியலை துவக்கியது.. சரி இப்போது ஒரு நாத்திகன் எப்படி இதற்கு ஒப்புமைவான்..? இருக்கவே இருக்கிறது அவர்களின் இன்னொரு மந்திரம்..
அதுதான்... இது தனிப்பட்ட மதத்தின் பக்திமார்க்கம் அல்ல. என்பது..
யார் வேண்டுமானாலும் இதில் சிஷ்யகோடிகளாக சேரலாம் மதம் தடையல்ல. சோ நாத்திகமும் தடை அல்ல.. காமெடி என்னனா அங்க நடக்கற எல்லா பூஜை புனஸ்காரங்களும் இந்து மதத்தை தழுவியதாகவே இருக்கும்..
நாம் எல்லாருமே அரக்கபரக்க ஓடி உழைத்து மனதளவில் சோர்ந்து போயிதான் இருக்கோம்.. நிறைய ஏமாற்றம் துரோகம் என சந்தித்து யாராவது இதற்கு தீர்வு தருவார்களா?! கொஞ்சம் நிம்மதியாக இருக்க முடியாதா?! என்று ஏங்கி போயி கிடக்கோம். நம்மை அழகா உபயோகப்படுத்திக்கொள்வது தான் ஆன்மீக யோகா அமைப்புகளின் பிரதான வேலை.. ஆனா நம்மை நம்ப வைக்கணுமே!, அவர்கள் தான் மீட்பர் அவர்களால் தான் நமக்கு நல்லது நடக்கும் என்றவாறு நம்பவைக்கனுமே!.. அதற்கு அவர்கள் கண்டுபிடித்த வழி இதுவரை நாம் பார்த்து பழகிய பூஜை முறைகளை அப்படியே வேற லெவல்ல ஹைகிளாசா பண்ணிடுவாங்க. எல்லாத்திலும் ஒரு நேர்த்தி ஒரு அழகியல் ஒரு தெய்வீகத்தன்மை செயற்கையாக ஏற்படுத்தப்பட்டிருக்கும்.., எது ஒன்று அதிக நேர்த்தியாகவும் கண்ணை கவர்வதாகவும் இருக்கிறதோ அது ஏமாற்று வேலை. ஆனா அப்ப அதையெல்லாம் நாம் யோசிக்க மாட்டோம். எத தின்னா பித்தம் தெளியும் என்ற மனோநிலையில் இருப்பவர்களுக்கு அந்த தற்காலிக சந்தோசம் தான் தேவையே தவிர ஆராய்ச்சி செய்தல் அல்ல.
இப்ப ரீசன்ட்டா ஒரு யோகா மையத்தின் மேல் ஒரு பெற்றோர் கொடுத்த கம்ப்ளைன்ட் புக் ஆகி இருக்கு.. தன்னோட இரண்டு மகள்களையும் வசியம் செய்து மொட்டை அடித்து சந்நியாசி ஆக்கிவிட்டதாக. இத்தனைக்கும் அந்த பெண்கள் நன்றாக படித்த பெண்கள். இந்த நிலைக்கு இட்டுசெல்லுதல் அவர்களுக்கு மிக எளிது.. இப்படி பக்தியை பிரம்மாண்டமாக காண்பித்து அதை ஆச்சர்யமாக பார்க்க வைத்து.. முக்கியமாக இசைக்கு மயங்க வைப்பார்கள் இசைக்கு இசையாத மனம்தான் ஏது? பெரிய நெருப்பை கண்டு பிரம்மிக்காத மனம் ஏது? குழப்பமான மனம் இசை கேட்டால் சாந்தமடையும் அதுவே ஒரு உடுக்கை மேளம் வெண்கல மணியோசை என்று அதிரிபுதிரியான இசை என்றால் மனம் குத்தாட்டம் போடும்.. அத்தோடு பெரிய தீப ஜுவாலை.. குழப்பமான மனம் மேலும் குழப்பமடையும் இரண்டு விதமான உணர்வுகள் அங்கு திணிக்கப்படுகிறது சாந்தமும் பயமும் சேர்ந்து.. இந்த நேரத்தில் ஒருவர் வந்து சொல்லும் போதனை அதனை மனம் அப்படியே நம்பிக்கொள்ளும். அந்த போதனையில் லயிக்கும்.. நாம் தவறான வாழ்வை வாழ்ந்துவிட்டோம் என்று எண்ணும். இது தினமும் நிகழ்ந்தால் போதனை செய்பவரை கடவுளாக பாவிப்பார். அவர் சொல் வேதவாக்காக மாறும். வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுக்கிறோம் என்ற பெயரில் லௌகீக வாழ்க்கையே தவறென்று கொஞ்சம் கொஞ்சமாக இம்ப்ளிமென்ட் செய்யபப்டும். ஒரு கட்டத்தில் வாழ்வை துறந்து சந்நியாசமே விடுதலைக்கான வழி என்று போய்விடுகிறார்கள்.. படித்த பெண்களாலேயே போலிக்கும் நிஜத்திற்கு வேறுபாடு அறியமுடியவில்லை எனில் சாதாரண அன்றாட பிழைப்பு நடத்தும் மக்கள்? அவர்களை ஈர்த்தல் இன்னும் எளிது.
ஒரு குறிப்பிட்ட முறையில் தான் கடவுளை வழிபடவேண்டும் என்ற கோட்பாட்டுக்குள் நம்மை புகுத்திக்கொண்டோம் அதே வழிபாட்டை வியாபாரம் ஆக்குகிறது ஒரு கும்பல். நாமும் காஸ்ட்லியான பக்தியை நோக்கித்தான் செல்கிறோம் அதுதான் நமக்கும் பிடித்து இருக்கிறது. பத்து ரூபாய் மாலையை விட நூறு ரூபாய்க்கு மாலை வாங்கினால் பூசாரி அதிகம் மதிக்கிறார். கோவிலுக்குள் தனக்கு மரியாதை வேண்டும் என்பதற்காக கடவுளை காரணியாக பயன்படுத்தும் கூட்டம் அதிகம் ஆகிவிட்டது.
என்னால் உறுதியாக சொல்ல முடியும்.. இங்கு மனதளவில் எல்லாருமே நாத்திகர் தான் யாருக்குமே பக்தி கடவுள் நம்பிக்கை கிடையாது.. ஆம் யாருக்குமே கிடையாது.. என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். உங்களை நீங்கள் பெரிய பக்திமானாக நினைத்தால் அதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருக்கும். ஒரு சமாதானம். ஒரு விளம்பரம், ஒரு மேட்டிமைத்தன சாமி கும்பிடல்.., இங்கு கடவுள் நம்பிக்கை என்பது அறவே கிடையாது.. உங்களை தான் டார்கெட் செய்கிறது ஆன்மீககும்பல்.. அவர்களுக்கு தெரியும் உங்களின் ஆத்திக லட்சணம்.. ஆகவே இன்னோர் புதிய கடவுளை அறிமுகம் செய்து உங்களை ஈர்த்து தன் ஆன்மீக அரசியலை வெற்றிகரமாக ருத்ரதாண்டவம் ஆடுகிறது.. அதற்காக உங்களையும் சந்நியாசி ஆக்கும் என்றில்லை.. உங்களை உழைத்து பிழைக்க வைத்து சக உயிரின் மீதான கருணை தான் வாழ்வென்று புரியவைத்து உங்கள் சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை தனதாக்கிக்கொள்ளும்.. எப்படி என்றால் ஒரு ருத்ராட்ச மாலை ஆயிரம் ரூபாய் சொல்வார்கள் அதனோட விலை நூறாக தான் இருக்கும்.. இதன் லாபம் ஆதரவு அற்றவர்களுக்கு செல்கிறது என்றதும் உங்களுக்கும் கருணை பீறிட்டு ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவிர்கள் ஏதோ நல்லது செய்துவிட்டதாக திருப்திபட்டுக்கொள்விர்கள். இப்படிதான் ஒவ்வொன்றாக ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் இருக்கும்..
சக உயிர்களை மதியுங்கள்.. எந்த உதவி வேண்டுமானாலும் உங்கள் கையால் நேரடியாக செய்யுங்கள். அந்த தரகர்கள் மூலம் வேண்டாம். அதுதான் உண்மையான ஆன்மிகம் பக்தி வாழ்வு எல்லாம்
நீடூழி வாழ்க.

No comments:

Post a Comment