Sunday, July 21, 2019

★திருக்குவளை முன்னேற்றக் கழகம்.

துக்ளக் தலையங்கம்
50 ஆண்டுகள் தமிழ்நாட்டு அரசியலில் பேராதிக்கம் செலுத்திய மு.கருணாநிதியின் பேரனும், ஸ்டாலினுடைய மகனுமான உதயநிதி, தி.மு.க. இளைஞர் அணித் தலைவராகியுள்ளார். தி.மு.க. என்பது கருணாநிதி குடும்பத்தின் பிரியா அங்கம் என்பதை சந்தேகமில்லாமல் இது மீண்டும் நிரூபித்து விட்டது.
குக்கிராமமான திருக்குவளையில் பிறந்த கருணாநிதி, தன் அளவற்ற திறமை, அனைவரும் மெச்சிய அறிவுக்கூர்மை, இரவு-பகல் பார்க்காத கடின உழைப்பு, எவரையும் வசியப்படுத்தும் பேச்சாற்றல், தன்னிகரற்ற நகைச்சுவை, அனுபவம் பெற்ற அதிகாரிகளே வியக்கும் நிர்வாகத் திறமை, கட்சியினரை ஒருங்கிணைக்கும் சாதுரியம் போன்ற அரிய குணங்களால் உயர்ந்து, தி.மு.க.வின் தன்னிகரற்றத் தலைவரானார். தன் மூத்த அரசியல் சகாக்கள் மட்டுமல்லாமல், தனக்குப் போட்டியாக முதலில் எம்.ஜி.ஆர்., பிறகு வைகோ - என்று வளர்ந்தவர்களை, ஈவிரக்கமில்லாமல் ஒழித்துக் கட்டும் சுயநலமிக்க சாணக்கிய அரசியலிலும் அவர் கை தேர்ந்திருந்தார். தி.மு.க.வை தன் இரும்புப் பிடியில் கொண்டு வந்த கருணாநிதி, பத்திரமாக அதைத் தன் வாரிசுகளின் கையில் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.
இன்று தி.மு.க.வின் தலைவராக உள்ள ஸ்டாலின் கருணாநிதியின் புதல்வர். கருணாநிதியின் மகளான கனிமொழி மகளிர் அணிச் செயலர், தவிர எம்.பி.. கருணாநிதியின் மருமகனின் மகனான தயாநிதிமாறன் எம்.பி.. மத்தியில் தி.மு.க. கூட்டணியில் இருந்த போது மருமகனான முரசொலி மாறன் அமைச்சர், பிறகு தயாநிதி மாறன் அமைச்சர். இப்போது உதயநிதி இளைஞர் அணியின் தலைவர். இன்னொரு மகனான அழகிரி தி.மு.க.வை விட்டு விலக குடும்பச் சிக்கல்தான் காரணம். இல்லையென்றால், அவரும் அவர் குடும்பமும் கூடப் பதவியில் இருந்திருக்கும். ஒரு காலத்தில், சுனாமி போல் தமிழக அரசியலைக் கலக்கிய தி.மு.க., எப்படி ஒரு குடும்பத்தின் கொத்தடிமை போல் ஆக முடிந்திருக்கிறது என்பதை விளக்குவது தமிழக அரசியல் எதிர்காலத்துக்கு அவசியம்.
●கருணாநிதி தி.மு.க.வைக் கைப்பற்றிய கதை
1949-ல் தி.க.விலிருந்து பிரிந்து, தி.மு.க.வைத் துவக்கி, அனைவரையும் இணைத்து, இயக்கத்தை வளர்த்தவர் அண்ணாதுரை. 1962 சீன ஆக்கிரமிப்பின்போது தி.மு.க.வின் பிரிவினைவாதம் குறுகியது என்பதை உணர்ந்து, தேசவிரோத திராவிட பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டார் அண்ணாதுரை. தமிழ்நாட்டில் தனித்து நின்ற தி.மு.க.வை, காங்கிரஸைத் தவிர மற்ற கட்சிகளை ஏற்க வைத்து, 1967-ல் ஆட்சியிலும் அமர்த்தினார் அண்ணாதுரை. துணிவுடன் அவர் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்கவில்லையென்றால், பொறுப்பான கட்சி என்று தி.மு.க.வுக்கு அரசியலில் மரியாதை கிடைத்திருக்காது. இதைப் பெற்றுக்கொடுத்த மூதறிஞர் ராஜாஜியின் ஆதரவும் தி.மு.க.விற்குக் கிடைத்திருக்காது. பிரிவினையை ஏற்காத சுதந்திரா, இடது கம்யூனிஸ்ட், பிரஜா சோசலிஸ்ட், சம்யுக்த சோசலிஸ்ட், முஸ்லிம் லீக், உழைப்பாளர், குடியரசு, தமிழரசுக் கழகம் போன்ற கட்சிகள் தி.மு.க.வுடன் அணி சேர்ந்திருக்காது. ராஜாஜியின் ஆதரவு இல்லாமலும், அந்தக் கட்சிகளுடன் அணி சேராமலும் தி.மு.க.வினால் ஆட்சியைப் பிடித்திருக்க முடியாது. அப்படி 1967-ல் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கவில்லையென்றால், 1969-ல் அண்ணாதுரை மறைந்த பிறகு கூட தி.மு.க.வினால் ஆட்சியைப் பிடித்தே இருக்க முடியாது. தமிழகத்தின் அரசியலே வேறு திசையில் சென்றிருக்கும்.
பிப்ரவரி 1967-ல் தி.மு.க. வென்றபோது முதல்வரான அண்ணாதுரை, துரதிர்ஷ்டவசமாக இரண்டே ஆண்டுகள் பதவியில் இருந்து, பிப்ரவரி 1969-ல் மறைந்தார். அவருக்குப் பிறகு, யார் முதல்வர் என்கிற பிரச்னை எழ, ஈ.வெ.ரா. பஞ்சாயத்து செய்தார். எம்.ஜி.ஆர். ஆதரவுடன், தி.மு.க.வின் முதல்நிலைத் தலைவர்களை ஒதுக்கி, இரண்டாம் நிலைத் தலைவரான கருணாநிதி முதல்வரானார். 1961-ல் தி.மு.க.வை விட்டு வெளியேறிய ஈ.வி.கே.சம்பத் தவிர, தி.மு.க.வின் ஐம்பெரும் தலைவர்களில் நெடுஞ்செழியன், மதியழகன், என்.வி.நடராஜன் ஆகிய மூவரையும், அண்ணாதுரையின் காலத்துக்குப் பிறகு, கருணாநிதி ஓரங்கட்டினார். 1970-ல் மதியழகனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார், 1972-ல் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து விலக்கினார், 1975-ல் என்.வி. நடராஜன் மறைந்தார், அதே ஆண்டு நெடுஞ்செழியன் கட்சியை விட்டு வெளியேறினார். சிலரை ஒதுக்கியும், சிலரை ஒடுக்கியும் தி.மு.க.வைத் தன் கைவசம் கொண்டு வந்தார் கருணாநிதி. தி.மு.க.வை வளர்த்து உருவாக்கிய ஐம்பெரும் தலைவர்களின் குடும்பங்கள், இன்று எங்கே இருக்கின்றன என்பது கூட யாருக்கும் தெரியாது (பெட்டிச்செய்தி).
●தி.மு.க.வின் எதிர்காலம்
தான் கைவசப்படுத்திய கட்சியை தனக்கு வேறு நாதியில்லை என்று தன் குடும்பத்தின் காலில் விழும்படிச் செய்ய, கருணாநிதிக்கு முன்னோடியாக இருந்தது இந்திரா காந்தி. 1969-ல் காங்கிரஸ் கட்சியை உடைத்து காமராஜ், மொரார்ஜி தேசாய் போன்ற மூத்த பெரும் தலைவர்களை தன் அதிகாரத்தை வைத்து ஓரம் கட்டி, கட்சியைத் தன் சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தார் இந்திராகாந்தி. அவர் காங்கிரஸில் செய்ததை அப்படியே தி.மு.க.வில் செயல்படுத்தினார் கருணாநிதி. இந்திராகாந்தி 1969-லிருந்து 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியைத் தன் குடும்ப வசப்படுத்தினார்; கருணாநிதிக்கு இதைச் செய்து முடிக்க பல ஆண்டுகள் பிடித்தது. அவ்வளவுதான் வித்தியாசம்.
தி.மு.க.வின் ஜென்ம வைரியான காங்கிரஸை உடைத்த இந்திராவுடன், 1971-ல் கூட்டணி வைத்தார் கருணாநிதி. இருவருக்கும் ஒரு கல்லில் இரண்டு மாங்காய். அகில இந்திய அளவில் இந்திராவுக்குப் போட்டியாகவும், தமிழகத்தில் தி.மு.க.வுக்கு ஒரே எதிரியாகவும் இருந்த காமராஜரை வீழ்த்தியது அந்தக் கூட்டணி. இந்திரா குடும்பத்தின் பிதுரார்ஜிதச் சொத்தாக காங்கிரஸ் மாறியது போல், தி.மு.க.வும் திருக்குவளை கருணாநிதி குடும்பத்தின் பாரம்பரியச் சொத்தாகியது. வெகுகாலம் காங்கிரஸ் கட்சி, இந்திரா காங்கிரஸ் என்றே அழைக்கப்பட்டது. இப்போது காங்கிரஸ் கட்சி இந்திராவின் பேரன் கையில். தி.மு.க. உதயநிதி கையில்.
உதயநிதி கையில் இருக்கும் தி.மு.க.வின் எதிர்காலம் என்ன என்பதை, இன்று காங்கிரஸ் இருக்கும் நிலையை வைத்து கணிக்கலாம். சோனியா குடும்பம் இல்லையென்றால், கட்சி இல்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டது காங்கிரஸ். ராஹுல் காந்தியைவிடப் பன்மடங்கு திறமை உள்ள பைலட், சிந்தியா, பிரசாத் போன்றவர்கள் காங்கிரஸுக்குத் தலைவராக வரமுடியாது. அப்படியே வந்தாலும் நிலைக்க முடியாது என்கிற நிலையில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. ராஹுல், தனக்குத் தலைமை வேண்டாம் என்று சொன்னாலும், அடுத்த தலைவர் யார் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அடுத்த தலைவர் என்பவர் சோனியா குடும்பத்தின் பினாமியாகத்தான் இருக்க முடியுமே தவிர, உண்மையான தலைவராக இருக்க முடியாது. அதுபோல் உதயநிதி, அவருக்குப் பிறகு இன்பன் உதயநிதி என்றுதான் தி.மு.க. தலைமை எழ முடியுமே தவிர, அவர்களைவிட இக்கட்சியில் திறமை படைத்த வேறு யாரும் தி.மு.க.வின் தலைமை பக்கமே வரமுடியாது.
குடும்பக் கட்சிகளான சமாஜ்வாதி கட்சி, லோக் தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளுக்கு என்ன எதிர்காலமோ, அதே எதிர்காலம்தான் காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகளுக்கும். குடும்பத்தின் கையில் சிக்கிய கட்சி என்பது தேனில் விழுந்த ஈ போல. தேனிலேயே இருந்தால் தனக்கு அழிவுதான் என்பது தெரிந்தாலும், அதிலிருந்து வெளியில் வர அதற்கு மனம் இருக்காது.
நிலையான சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட, கட்டுப்பாடு உள்ள கட்சிகளால்தான் வாரிசு அரசியலைத் தவிர்க்க முடியும். தொடரும் சித்தாந்தம் ஒரு கட்சிக்கு இல்லையென்றால், ஒரு பெரும் தலைவரின் குடும்பம்தான் அதன் தொடர்ச்சியாக அமையும். கட்டுப்பாடுள்ள கட்சியாக இருந்தாலும் தி.மு.க.வின் பிரிவினை சித்தாந்தம் நிலைக்கக் கூடியது அல்ல, நிலைக்கவும் இல்லை. ‘திராவிட நாடு கொள்கையைக் கைவிட்டவுடன் மாநில அரசியலை விடுத்து, தி.மு.க. அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கு மாற்று அரசியலைக் கையிலெடுத்திருக்க வேண்டும்’ என்று இரா.செழியன் ஒருமுறை கூறினார். எதற்காகத் துவக்கப்பட்டதோ அந்த நோக்கத்தைக் கைவிட்டு, வேறு நோக்கத்தை ஏற்காத திராவிட முன்னேற்றக் கழகம், இறுதியில் ‘திருக்குவளை முன்னேற்றக் கழக’மாக முடிந்திருக்கிறது.
==================================
ஐம்பெரும் தலைவர்களின் குடும்பங்கள் எங்கே?
தி.மு.க.வில் அண்ணாதுரை, ஈ.வி.கே. சம்பத், நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன், மதியழகன் ஆகியவர்கள் மட்டுமே ‘ஐம்பெரும் தலைவர்கள்’ என்று அழைக்கப்பட்டவர்கள். 18.9.1949-ல் ராபின்சன் பூங்காவில் தி.மு.க.வின் துவக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட 28 பேர் பட்டியலில், மு.கருணாநிதியின் பெயர் கடைசியாக இருந்தது. தி.மு.க.வைத் துவக்கியவர்களில் ஒருவராக கருணாநிதி இருந்தாலும், ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக அவர் இல்லை.
அன்றைய ஐம்பெரும் தலைவர்கள் என்ன ஆனார்கள்?
அவர்கள் குடும்பங்கள் எங்கே?
அண்ணாதுரை தனது வளர்ப்பு மகன்களான டாக்டர் பரிமளம், இளங்கோவன், ராஜேந்திரன் யாரையுமே கட்சிப் பக்கமோ, ஆட்சிப் பக்கமோ அனுமதிக்கவில்லை. அண்ணாதுரைக்குப் பிறகு மருத்துவர் பட்டம் பெற்ற பரிமளத்தை தி.மு.க. பக்கமே அண்டவிடவில்லை கருணாநிதி. 2008-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட பரிமளத்தின் வாரிசுகள் மலர்வண்ணன், சௌமியன், இளவரசி போன்றோரைப் பற்றி தி.மு.க.வினருக்குத் தெரியக் கூட வாய்ப்பில்லை. இது அண்ணாதுரை குடும்பத்தின் நிலை.
மதியழகன் மீது 1970-ல் லஞ்ச ஊழல் குற்றம் சாட்டி, கருணாநிதி அவரை ராஜினாமா செய்ய வைத்தார். அந்தக் குற்றச்சாட்டுகள் முழுப் பொய்யென்று பின்பு நிரூபணமாகியது.
மதியழகனை ஏன் பொய்க்குற்றம் சாட்டி ஓரம் கட்டினார் கருணாநிதி? (டங்கன் ஃபாரஸ்டர் என்கிற ஆய்வாளர், ஆசியன் சர்வே என்கிற பிரபல ஆய்வுப் பத்திரிகையில் Factions and Filmstars: Tamil Nadu Politics since 1971 என்கிற கட்டுரையில் இதைக் கூறியிருக்கிறார்.) மதியழகன் தன்னுடைய தலைமைக்கு ஆபத்தானவர் என்று கருதிய கருணாநிதி, அவர் மீது பொய்க்குற்றம் சாட்டி விலக்கினார். மதியழகன் பிறந்த கணியூர் குடும்பத்தை, திராவிட இயக்கத்தின் தலையாய குடும்பம் என்று கூறுவாராம் அண்ணாதுரை.
1975-ல் கருணாநிதியால் ஒதுக்கப்பட்ட நெடுஞ்செழியன் தி.மு.க.விலிருந்து விலகி, அ.தி.மு.க. வில் சேர்ந்து எம்.ஜி.ஆர். அரசில் அமைச்சரானார். மறைந்த நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன், பேரன் ஜீவன் போன்றோர் எங்கு இருக்கிறார்கள் என்று நிச்சயம் இன்றைய தி.மு.க.வினருக்குத் தெரியாது. என்.வி.நடராஜன் 1975-ல் காலமானார். அவருடைய மகன் என்.வி.என்.சோமு அவருக்குப் பிறகு கருணாநிதியின் தலைமையை ஏற்று தி.மு.க.வில் இருந்தார். இப்படி தி.மு.க.வின் ஐம்பெரும் தலைவர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களின் கதை. கருணாநிதி குடும்ப வாரிசுகளின் இன்றைய நிலையையும், ஐம்பெரும் தலைவர்களின் குடும்பத்தார் நிலையையும் ஒப்பிட்டால், தி.மு.க. என்ற கட்சி எங்கு துவங்கி எங்கு முடிந்திருக்கிறது என்பது தெரியும்.
==================================

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...