Friday, July 22, 2022

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்...கட்சி மாறி ஓட்டு!:ஒற்றுமை இல்லாதது வெட்ட வெளிச்சமானது.

 புதிய ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள திரவுபதி முர்முவுக்கு ஆதரவாக, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கட்சி பாகுபாட்டை தாண்டி ஓட்டளித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 125 எம்.எல்.ஏ.,க்கள், 17 எம்.பி.,க்கள் கட்சி மாறி முர்முவுக்கு ஓட்டளித்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இதன் வாயிலாக, எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாத சூழல் நிலவுவது வெட்ட வெளிச்சமாகி இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு, 64 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, 36 சதவீத ஓட்டுகளை பெற்றார்.
முர்முவின் வெற்றி அறிவிக்கப்பட்டவுடன், 'மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஓட்டளித்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி' என, பா.ஜ.,வைச் சேர்ந்த ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

ஆதரவு
பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் திரவுபதி முர்முவுக்கு ஆதரவாக கட்சி மாறி ஓட்டு போட்டுள்ளனர். கேரள சட்டசபையில் மொத்தம் 140 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில், பா.ஜ.,வுக்கு ஒரு இடம் கூட இல்லை.
ஆளும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணியினர், யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், கேரளாவில் முர்முவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டு கிடைத்துள்ளது. 'மற்ற 139 ஓட்டுகளை விட, இந்த ஒரு ஓட்டு மதிப்புமிக்கது' என, பா.ஜ., தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் மொத்தம் 126 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இங்கு, பா.ஜ.,வின் பலம் 79 ஆக உள்ளது. ஆனால், இங்கு திரவுபதி முர்முவுக்கு 104 ஓட்டுகள் பதிவாகி உள்ளன. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறி ஓட்டளித்துள்ளனர். ம.பி.,யில், பா.ஜ.,வின் பலத்தை விட கூடுதலாக 16 ஓட்டுகள் முர்முவுக்கு கிடைத்துள்ளன.
மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வுக்கு 69 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். முர்முவுக்கு 71 ஓட்டுகள் பதிவாகி உள்ளன. யஷ்வந்த் சின்ஹாவின் சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் கூட, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 81 எதிர்க்கட்சி உறுப்பினர்களில், ஒன்பது பேர் மட்டுமே யஷ்வந்துக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர்.
மஹாராஷ்டிராவில், தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவாக 164 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஆனால், 181 ஓட்டுகளை முர்மு பெற்றுள்ளார்.வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் சிலரும், மணிப்பூரில் காங்., - எம்.எல்.ஏ.,க்களும் கட்சி மாறி ஓட்டளித்துள்ளனர்.
பீஹார், சத்தீஸ்கரில் தலா ஆறு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களும், கோவாவில் நான்கு, குஜராத்தில் 10 என, கட்சி மாறி ஓட்டு போட்ட மாநிலங்களின் பட்டியல் நீள்கின்றன.ஆந்திரா, சிக்கிம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.
மொத்தத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 125 எம்.எல்.ஏ.,க்கள், 17 எம்.பி.,க்கள் கட்சி மாறி ஓட்டளித்துள்ளனர். இந்த தேர்தல், தே.ஜ., கூட்டணியின் பலத்தை நிரூபிப்பதாக மட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் இடையே நிலவும் ஒற்றுமையற்ற சூழலை வெட்ட வெளிச்சமாக்கி விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.இதற்கிடையே, திரவுபதி முர்மு டில்லியில் தற்காலிகமாக தங்கியுள்ள வீட்டில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவரை நேற்று சந்தித்து வாழ்த்து கூறினார்.
மத்திய அமைச்சர்கள் பூபேந்தர் யாதவ், கிஷன் ரெட்டி, பிரம்ம குமாரிகள் அமைப்பைச் சேர்ந்த துறவிகளும் சந்தித்தனர்.ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதற்கான சான்றிதழில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த சான்றிதழ், மத்திய உள்துறை செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாளை மறுநாள் நடக்கும் பதவி ஏற்பு விழா அரங்கில், இந்த சான்றிதழ் வாசிக்கப்படும்.

பதவி ஏற்பு விழா
பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள மத்திய அரங்கில், நாளை மறுநாள் பதவி ஏற்பு விழா நடக்கிறது. அன்றைய தினம், விழா நடக்கும் இடத்துக்கு அருகே உள்ள, 'நார்த் பிளாக், சவுத் பிளாக், ரயில் பவன்' உள்ளிட்ட 30 அரசு அலுவலகங்களை, பாதுகாப்பு காரணங்களுக்காக காலை 6:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுஉள்ளது. புதிய பார்லிமென்ட் கட்டட கட்டுமான பணிகளையும் அந்த நேரத்தில் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

செல்லாத ஓட்டு பதிவானது எப்படி?

ஜனாதிபதி தேர்தலில், 53 எம்.பி.,க்கள் அளித்த ஓட்டுகள், செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. எப்படி ஓட்டளிக்க வேண்டும் என்பது குறித்து தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடியும், பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவும் பாடம் எடுத்தனர்.
ஆனாலும், ஓட்டுச் சீட்டில் ஒன்று, இரண்டு என தங்கள் ஆதரவை வரிசைப்படுத்துவதில், சில எம்.பி.,க்கள் தவறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிலர், ஓட்டுச் சீட்டில் பேனாவால் அழகு படுத்தி உள்ளனர்.
ஒரு எம்.பி., தன் ஓட்டுச் சீட்டில் எதிர்க்கட்சி மூத்த உறுப்பினரின் பெயர் மற்றும் அடையாள அட்டை எண்ணை எழுதியுள்ளார். இது போன்ற தவறுகள் வேண்டுமென்றே நிகழ்த்தப் படுகின்றன. பெரும்பாலான தவறுகள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் கல்வி அறிவு குறைபாட்டால் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



டில்லி ஐகோர்ட் உத்தரவு!

'சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட தடை விதிக்க வேண்டும்' எனக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சர்ச்சைகள், வழக்குகள் அனைத்தையும் விசாரிக்கும் உரிமை உச்ச நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. மேலும், இந்த மனு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை' எனக் கூறி தள்ளுபடி செய்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...