Friday, July 22, 2022

கருணாநிதி நினைவிடத்தில் 'பேனா'வுக்கு சிக்கல்.

 சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்படும் கருணாநிதி நினைவிடத்தில், 137 அடி உயர பேனா அமைப்பதற்கான திட்டத்தை, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு, மாநில கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.மறைந்த கருணாநிதியின் உடல், மெரினா கடற்கரையில், அண்ணாதுரை நினைவிடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.



latest tamil news


அங்கு கருணாநிதி நினைவிடம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது.
இங்கு, 2.21 ஏக்கரில், 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நினைவிடம் அமைப்பதற்கான அரசாணை, 2021 நவ., 8ல் பிறப்பிக்கப்பட்டது. கடற்கரை பகுதியில் இதுபோன்ற திட்டங்கள் மேற்கொள்ள, கடலோர ஒழுங்குமுறை விதிகளின்படி தடையின்மை சான்று பெற வேண்டும்.இதன்படி, தடையின்மை சான்று பெற, தமிழக அரசு, சென்னை மண்டல கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தில் விண்ணப்பித்தது. மாவட்ட அளவிலான இந்த ஆணையம், இதற்கு சில நிபந்தனைகள் விதித்து, மாநில ஆணையத்துக்கு அனுப்பியது.


நிரந்தர கட்டமைப்புகள்



மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தில், இத்திட்டத்துக்கு ஜனவரியில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் சில திருத்தங்கள் கோரி, தமிழக அரசு, மாநில ஆணையத்தில் மனு செய்தது. இந்த மனு, சமீபத்தில் நடந்த ஆணைய கூட்டத்தில், இரண்டு பாகங்களாக பிரித்து ஆய்வு செய்யப்பட்டது. முதல் பாகத்தில், தற்போதைய அண்ணாதுரை நினைவிட வளாக இறுதி பகுதியில், கருணாநிதி நினைவக கட்டமைப்புகளை ஏற்படுத்தும் வரைவு திட்டத்துக்கு, நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்க, ஆணையம் பரிந்துரைத்து உள்ளது.
மேலும், கட்டுமான பொருட்களை பயன்படுத்தி, நிரந்தர கட்டமைப்புகள் கட்டப்படாது என்ற உறுதியின் அடிப்படையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி அளிக்கலாம். அதே நேரத்தில், மாவட்ட ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபந்தனை களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ஆணைய தீர்மானம்



இரண்டாவது பாகமாக, கடற்கரையில், 81 கோடி ரூபாயில், 137 அடி உயர பேனா வடிவ அமைப்பை ஏற்படுத்தவும், அதற்கு மக்கள் சென்று வர நடைபாதை அமைப்பதற்குமான வரைவு திட்டம் ஆய்வு செய்யப்பட்டது.இந்த திட்டத்தை, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க, மாநில ஆணையம் தீர்மானித்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் தயாரித்து, பரிசீலனை கட்டணத்தை செலுத்திய பின் அனுப்பலாம் என, ஆணைய தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.மாநில ஆணையத்தின் இந்த முடிவால், கருணாநிதி நினைவிடத்தில் பேனா வடிவ சிற்பம் அமைப்பதற்கு, மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 கருணாநிதி நினைவிடம், பேனா , சிக்கல்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...