Monday, July 25, 2022

ஊழல் அரசியல்வாதிகளே உஷார்!

 குட்டி நாடான இலங்கை, இன்று பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதற்கு, குடும்ப அரசியல் மற்றும் ஊழலே முக்கிய காரணம். நம் நாட்டில், 1970க்கு முன் ஆண்டவர்கள் ஊழல் செய்ய அஞ்சினர். அன்று பிரதமராக இருந்த லால்பகதுார் சாஸ்திரி, கடைசி வரை சொந்த வீடு இல்லாமல் வாழ்ந்து மறைந்தார். தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகளாக பொற்கால ஆட்சி செய்த காமராஜர், தனக்கென சொத்துக்கள் ஏதும் சேர்க்கவில்லை.

ஆனால், அவருக்கு பின், மாநில முதல்வர்களாக வந்தவர்களில் சிலரும், அவர்களது கட்சியினரும், உறவினர்கள் மற்றும் நண்பர்களும் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் செய்து, வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களின் மதிப்பை சொல்லி மாளாது. உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கியுள்ளனர் என்பதே நிதர்சனம். இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினரின் ஊழலால் கோபமடைந்த அந்நாட்டு மக்கள், அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் வீடு களை முற்றுகையிட்டு செய்த கலவரங்களை பார்த்த போது, அதே போன்ற நிலைமை நம் நாட்டிலுள்ள ஊழல் அரசி யல்வாதிகளுக்கு எதிராக, எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை
உணர்த்தியுள்ளன. தமிழகத்தில் தற்போது அரசியல் கட்சித் தலைவர்களின் வாரிசுகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆங்காங்கே சொத்துக் கள் வாங்கி குவித்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில், சாதாரண வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றவர்கள் கூட, சில மாதங்களில் சொகுசு கார்களில் வலம் வருகின்றனர். அதே நேரத்தில் ஆட்சியாளர்களோ, 'கஜானா காலி' என்று சொல்லியே, வீட்டு வரி, மின் கட்டணம் என ஒவ்வொன்றாக மக்கள் மீது சுமையை ஏற்றி வருகின்றனர். மயில் தோகை என்றாலும், அதை அளவுக்கு மீறி ஏற்றினால், வண்டியின் அச்சு முறிந்து விடும் என்பர். அதேபோல, வரி என்ற பெயரில் மக்களின் மீது சுமையை அதிகரித்தபடியே சென்றால், அவர்கள் ஒரு நாள் பொறுமை இழக்க நேரிடும். சமீபத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில், தனியார் பள்ளிக்கு எதிராக போராடியவர்கள் திடீரென பள்ளியை சூறையாடிய சம்பவம், நாடு முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, ஊழல் அரசியல்வாதிகள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களின் சொத்துக்களை அபகரித்து செல்லும் நிலைமையும் ஒருநாள் உருவாகலாம். மக்கள் வீறு கொண்டு எழுந்தால், வீணர்கள் வீழ்வர் என்பது வரலாற்று உண்மை. எனவே, இலங்கை மற்றும் கள்ளக்குறிச்சி சம்பவங்களை முன்னுதாரணமாகவும், பாடமாகவும் கொண்டு, தமிழக அரசியல்வாதிகள்
எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், மக்கள் துன்பங்களுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், சாதுவாக இருக்கும் மக்கள் மிரண்டால், நாடு கொள்ளாது என்பதை மறக்க வேண்டாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...